< Back
சிறப்புக் கட்டுரைகள்
வந்துவிட்டது 5 ஜி: தொழில்நுட்பத்தின் அதிவேக பாய்ச்சல்
சிறப்புக் கட்டுரைகள்

வந்துவிட்டது 5 ஜி: தொழில்நுட்பத்தின் அதிவேக பாய்ச்சல்

தினத்தந்தி
|
16 Oct 2022 3:22 PM IST

ஊரெல்லாம் 5ஜி பற்றிய பேச்சாகவே இருக்கிறது. இளைய தலைமுறையினர் ஆர்வத்துடன் இதை வரவேற்க காத்திருக்கின்றனர். செல்போன் விற்பனையாளர்களும், ஆன்லைன் தளங்களும் கூவிக்கூவி 5 ஜி போன்களை விற்கத் தொடங்கிவிட்டார்கள்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த 5 ஜி தொழில்நுட்பத்தில். அதன் மூலம் தனி நபருக்கும், நாட்டுக்கும், தொழில் உள்பட பல்வேறு துறைகளில் என்னவெல்லாம் மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவது உண்டு.

தொழில்நுட்பம் என்பது பெரிய கடல். அதில் 5 ஜி தொழில் நுட்பம் என்பது ஒரு முக்கியமான அங்கம். அதே நேரத்தில் இது தகவல் தொடர்பு துறைகளைத்தாண்டி மனித வாழ்க்கையின் பல்வேறு தளங்களில் அதிரடியாய் பல மாற்றங்களை செய்யப்போகிறது. இந்த தொழில்நுட்பத்தின் அதிவேக பாய்ச்சல் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம், வாருங்கள்....

இன்றைய உலகம் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்படுகிறது. அதில் இணையப் பயன்பாடு மையப்புள்ளியாகி விட்டது. இணையத்தின் வேகமும், தடையில்லாத சேவையும், எளிதில் பெற்றுக் கொள்ள முடிந்தால் மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சி முழுமையடையும். இது தான் இன்றைய அதி முக்கியத் தேவைகளில் ஒன்றாகும்.

அதற்காகவே 2 ஜி, 3 ஜி, 4 ஜி, 5 ஜி எனும் நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கிறது.

இதற்கு முந்தைய 4ஜி யை விட சுமார் நூறு மடங்கு வேகத்தில் செயல்படும் என 5ஜி குறித்து கணிக்கப்படுகிறது. இணையத்தின் வேகத்தைப் பற்றிப் பேசும்போது நாமெல்லாம் பெரும்பாலும் யூடியூப் தளங்களின் வேகம், படம் டவுன்லோட் ஆகும் வேகம் போன்றவற்றையே நினைவில் கொள்கிறோம், ஆனால் இதைத் தாண்டி ஆயிரக்கணக்கான மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப தேவை இணைய வேகத்தைச் சார்ந்திருக்கிறது.

உதாரணமாக, வெளிநாட்டில் இருந்து கொண்டே ஒரு மருத்துவ அறுவை சிகிச்சையை இணைய வழியாக நடத்த இத்தகைய வேகம் தேவை. ஒரு மாநகரத்தையே இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (internet of things) மூலம் இணைத்துக் கட்டி கண்காணிக்க இத்தகைய வேகம் தேவை. போலீஸ் துறையின் கட்டுப்பாட்டில் ஒரு நகரத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமிராக்களையும் ஒருங்கிணைப்பதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

ஒரு மிகப்பெரிய பாதுகாப்புத் தளவாடத்தை சற்றும் இடைவெளி இன்றி கண்காணிக்க இத்தகைய வேகம் தேவை. இன்றைய நவீன தொழில்நுட்பங்களான ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் (Artificial Intelligence), மெஷின் லேர்னிங் (Machin Learning), டேட்டா சயின்ஸ் (Data Science), பிளாக் செயின் (Black Chain) போன்ற அனைத்துக்குமே இணைய வேகமும், இடைவிடாத இணைய சேவையும் மிக மிக முக்கியம்.

சாதாரண மனிதருடைய வாழ்க்கைக்கும் இந்த 5ஜி சேவை பல நல்ல விஷயங்களைத் தர முடியும். உதாரணமாக உங்களுடைய இருப்பிடத்தை கண்டறிய உதவும் ஜி.பி.எஸ். சிஸ்டம் மிக மிகத் துல்லியமாக செயல்பட இந்த 5ஜி வேகம் உதவும். உங்களுடைய அலுவலகத்தில் நடக்கின்ற வீடியோ கான்பரன்சிங் நூறு பேருடைய வீடியோவுடனும் சற்றும் தொய்வின்றி சிறப்பாக நடக்க இந்த 5ஜி உதவும். இப்படி விண்வெளி நிலையம் முதல், நமது வீதி வரை 5ஜி தொழில்நுட்பம் நமக்கு மிகப்பெரிய உந்து சக்தியாய் இருக்கும்.

5ஜியின் மூலமாக மொபைல் பிராட்பேண்ட் வேகம் அசுர வேகமெடுக்கும். இதன் மூலம் விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டி (Augmented reality) போன்றவை மிகவும் ஆற்றலுடன் செயல்படும். நிறுவனங்களுக்குத் தேவையான கட்டமைப்பு, ஆய்வுகளுக்குத் தேவையான கூடங்கள், மருத்துவ நிலையங்கள் போன்றவை வலுவடையும்.

ஆளில்லா தானியங்கிக் கார் இன்னும் பல மடங்கு வளர்ச்சியடையும். கோடிக்கணக்கான வாகனங்கள், பொருட்கள், கருவிகள் போன்றவற்றை சென்சார் மூலம் இணைக்கும் தொழில்நுட்பமும், மெட்டாவேர்ஸ் போன்ற நுட்பங்களும் அதி வேகமாய் வளரும். உலக அளவில் வர்த்தகம் பல லட்சம் கோடி ரூபாய்கள் அளவில் அதிகரிக்க 5ஜி உதவும்.

OFDM (Orthogonal frequency-division multiplexing) எனப்படும் தொழில்நுட்ப அடிப்படையில் 5 ஜி இயங்கும். இத்துடன் இந்த நுட்பம் நின்று விடப் போவதில்லை, நாம் எதிர்பாராத ஒரு மாற்றத்தோடு 6 ஜி யும் வரும். அதற்கு ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

இதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள், அலைவரிசைகள் போன்றவை சுற்றுச் சூழலுக்கும், உடல் நலத்திற்கும் ஆபத்தானவை எனும் எச்சரிக்கைகளைத் தாண்டி இத்தகைய தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். அவற்றைப் பற்றிய அறிமுகத்தையேனும் நாம் கற்றுக் கொள்வோம்.

மேலும் செய்திகள்