சர்க்கரையை ஒரு மாதம் தவிர்த்தால்..
|உணவில் இருந்து சர்க்கரையை குறைக்கும் போது ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று உடல் எடை இழப்பு.
நாம் உட்கொள்ளும் உணவுப்பொருட்களில் சர்க்கரை பல்வேறு விதங்களில் கலந்துள்ளது. இனிப்பு பொருட்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், குளிர் பானங்கள், பழங்கள், பழச்சாறுகள் என சர்க்கரையின் பங்களிப்பு தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. சர்க்கரை உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை பல்வேறு உடல்நலக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
இதுபற்றி டெல்லியை சேர்ந்த பிரபல மருத்துவர் அமிரிதா கோஷ் கூறுகையில், ''உண்ணும் உணவில் மறைமுகமாக கலந்திருக்கும் சர்க்கரைகள் உடலில் கலோரிகளை அதிகரிக்கச் செய்கின்றன. உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்பட பல்வேறு வளர்சிதை மாற்றக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. அப்படி உடலில் சேரும் அதிகப்படியான சர்க்கரையை குறைத்தால் உடல் நலனில் குறிப்பிடத்தக்க மாற்றம் உண்டாகும்.
ஒரு மாதத்திற்கு சர்க்கரையை அறவே நிறுத்திப்பாருங்கள். உணவுப்பொருட்களில் எந்த வகையிலும் சர்க்கரை கலந்திருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஒரு மாதம் உடலில் சர்க்கரையே சேராமல் இருந்தால் என்னவாகும் என்கிறீர்களா? உணவில் இருந்து சர்க்கரையை குறைக்கும் போது ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று உடல் எடை இழப்பு.
ஆம்..! சர்க்கரை அதிக கலோரிகளை கொண்டது. அது தினமும் ஏதாவதொரு ரூபத்தில் உடலில் சேரும்போதும், அதன் அளவு அதிகரிக்கும்போதும் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும். சர்க்கரையை தவிர்க்கும்போது ஒட்டுமொத்தமாக குறைவான கலோரிகளையே உட்கொள்வீர்கள். அதனால் உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கும்'' என்கிறார்.
சர்க்கரை அதிகம் கலந்திருக்கும் உணவுகளை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும், இன்சுலின் அளவை உயர்த்துவதற்கும் வழிவகுத்துவிடும். இதனால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் கூறுகிறார்.