< Back
சிறப்புக் கட்டுரைகள்
நெயில் பாலிஷை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்..?
சிறப்புக் கட்டுரைகள்

நெயில் பாலிஷை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்..?

தினத்தந்தி
|
5 Jun 2022 1:27 PM GMT

நெயில் பாலிஷை பலரும் நகங்களை அழகுபடுத்துவதற்கு பயன்படுத்துகிறார்கள். அதையும் தாண்டி நெயில் பாலிஷை பல வழிகளில் உபயோகிக்கலாம்.

* ஊசி முனையில் நூல் கோர்ப்பதற்கு பலரும் சிரமப்படுவார்கள். நூலின் நுனிப்பகுதியை லேசாக நெயில் பாலிஷில் முக்கினால் போதும். அது நூலின் முனையை இறுக செய்துவிடும். அதன் பிறகு எளிதாக ஊசியில் நூலை கோர்த்துவிடலாம்.

* தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால் கவரிங் நகைகள் மீது பெண்களின் பார்வை திரும்பி இருக்கிறது. ஆனால் அனைவருடைய சருமத்திற்கும் கவரிங் நகைகள் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு அலர்ஜி பிரச்சினை எட்டிப்பார்க்கும். அதனை தவிர்க்க கவரிங் நகையின் உள் பகுதியில் அதாவது சருமத்தில் உரசும் இடத்தில் நெயில் பாலிஷ் கொண்டு கோட்டிங் கொடுத்தால் போதும். நெயில் பாலிஷ் வெளியே தெரியாதவாறு நகையின் உட்புறமாக லேசாக நெயில் பாலிஷ் பதித்தால் போதுமானது. சரும பிரச்சினைகள் எட்டிப்பார்க்காது.

* பெண்கள் சமையலுக்கு பயன்படுத்தும் மசாலா பொருட்களை டப்பா, பாட்டில்களில் நிரப்பி, வெளிப்பகுதியில் அவற்றின் பெயர்களை எழுதி வைத்திருப்பார்கள். அது விரை விலேயே அழிந்துவிடும். அந்த பாட்டில்கள் மீது நெயில் பாலீஷ் கொண்டு எழுதினால் தண்ணீர் பட்டாலும் அழியாது.

* வீட்டின் வாசல் கதவு சாவி, உள்ளறை கதவுகளின் சாவிகள், அலமாரி சாவிகள், டேபிள் சாவிகள் என எல்லா வகையான சாவிகளையும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள ஒவ்வொரு சாவிக்கும் ஒவ்வொரு நிறமுடைய நெயில் பாலிஷை பூசிவிடலாம். அது எளிதில் அழியாது.

* பழைய ஷூக்களை புதியது போல் காண்பிக்க நெயில் பாலீஷ் கொண்டு வண்ணம் பூசலாம். நீலம், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் பார்க்க அழகாக இருக்கும். ஷூவின் கயிறு முனைகள் மீது நெயில் பாலீஷ் பூசினால் நீண்ட நாட்கள் உறுதியாக இருக்கும்.

* பெல்ட்டின் பக்கிள் பகுதியில் அழுக்கு சேரும். கறைகள் படியும். அதனை தவிர்க்க நெயில் பாலீஷ் கொண்டு ஒரு கோட்டிங் பூசினால் போதும்.

* தபால்களின் உறை மீது பசை கொண்டு ஒட்டும்போது முனை பகுதி சரியாக ஒட்டாமல் இருந்தால் நெயில் பாலிஷ் பயன்படுத்தலாம்.

மேலும் செய்திகள்