< Back
சிறப்புக் கட்டுரைகள்
விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம்! மிகப் பழமையான நட்சத்திர மண்டலங்களை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

Image Credit:NASA

சிறப்புக் கட்டுரைகள்

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம்! மிகப் பழமையான நட்சத்திர மண்டலங்களை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

தினத்தந்தி
|
18 Nov 2022 10:12 AM IST

ஜேம்ஸ் வெப் படம்பிடித்துள்ள இந்த பழமை வாய்ந்த நட்சத்திர மண்டலம் சிறிய அளவில், கோள அல்லது வட்டு வடிவத்துடன் உள்ளன.

கேப் கனாவெரல்(அமெரிக்கா),

நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த 'ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர். நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும்.

பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது. அந்த வகையில்,விண்மீன் மண்டலங்களை ஆய்வு செய்யும் பணியில் ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி இறங்கியுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு பல படங்களை எடுத்து உலகம் முழுவதையும், விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொலைநோக்கி 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில், விண்வெளியில் நட்சத்திரங்கள் எவ்வாறு பிறக்கின்றன என்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதிர்ச்சியூட்டும் புகைப்படம் எடுத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் விண்வெளி இயற்பியல் மையத்தை சேர்ந்த 'ரோகன் நாயுடு' தலைமையிலான சர்வதேச குழு சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்த விவரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளது.

இதுவரை பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட விண்மீன் மண்டலம், ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் அடையாளம் காணப்பட இயலாத அதிசயங்களை ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபஞ்சம் தோன்றி 350 மில்லியன் (35 கோடி) மற்றும் 400 மில்லியன் (40 கோடி) ஆண்டுகளுக்குப் பிறகு உருவானதாக கணிக்கப்பட்டுள்ள 2 பிரகாசமான விண்மீன் மண்டலங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதிர்ச்சியூட்டும் புகைப்படம் எடுத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதன்மூலம், ஹப்பிள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் அடையாளம் காணப்பட்ட 'மிக தொலைதூர விண்மீன் மண்டலம்' என்பதையும் தாண்டி உள்ள விண்மீன் மண்டலம், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் அடையாளம் காணப்பட்டு உள்ளது.மனித கண்களுக்கு புலன் ஆகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம் பிடித்து அனுப்பி உள்ளது.

சூரியன் ஒரு விண்மீன் ஆகும். விண்வெளியில் சூரியனைப் போன்ற விண்மீன்கள் பல உள்ளன. கோடிக்கணக்கான விண்மீன்கள் சேர்ந்த ஒரு கூட்டம் விண்மீன் மண்டலம் (கேலக்சி) என்று அழைக்கப்படுகின்றது.நம்முடைய சூரியனும் அப்படிப்பட்ட ஒரு விண்மீன் மண்டலத்தில் தான் அடங்கி உள்ளது. அந்த மண்டலத்தின் பெயர் பால்வெளி (மில்கிவே) மண்டலம்.

இந்த பால்வெளி மண்டலம் வட்ட வடிவமாக இருக்கும்.இந்த நிலையில், தற்போது ஜேம்ஸ் வெப் படம்பிடித்துள்ள இந்த பழமை வாய்ந்த நட்சத்திர மண்டலம் சிறிய அளவில், கோள அல்லது வட்டு வடிவத்துடன் உள்ளன.

இந்த கண்டுபிடிப்பு மூலம், ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை விட பல நூறு ஆண்டுகள் முன்னதாகவே, '(100 மில்லியன்)10 கோடி ஆண்டுகள் முன்னரே' நட்சத்திரங்கள் உருவாகத் தொடங்கியிருக்கலாம் என்று தெரிய வருகிறது.எனினும் இதை பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கு பின்னரே முழு விவரத்தையும் அறிந்துகொள்ள இயலும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

முதல் விண்மீன் மண்டலங்கள் எப்போது, ​​எப்படி உருவானது என்பது மிகவும் சுவாரஸ்யமான கேள்விகளில் ஒன்றாக இன்னும் இருப்பதாக அவர்களுடைய ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்