காரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போது 10 இல் 7 இந்தியர்கள் சீட் பெல்ட் அணிவதில்லை!
|10 இல் 7 இந்தியர்கள் காரில் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணிவதில்லை என்று தெரியவந்துள்ளது.
மும்பை,
டாடா சன்ஸ் குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி நேற்று முன்தினம் மும்பை அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
அவர் பயணித்த காரில் முன்னிருக்கையில் சீட் பெல்ட் அணிந்து பயணித்தவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உயிர் பிழைத்தனர்.
ஆனால் பின் பக்க இருக்கையில் அமர்ந்து சென்ற சைரஸ் மிஸ்ட்ரி சீட் பெல்ட் அணியாததால் பலியானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சாலை விபத்துகளில் 13½ லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இதில் 90 சதவீத இறப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை மாதம் வெளியான 'தி லேன்செட்' பத்திரிகை ஆய்வு முடிவுகளின் படி, இந்தியாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தினால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 10 இல் 7 இந்தியர்கள் காரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவதில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில், இந்தியாவின் 274 மாவட்டங்களில் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து பதில் கிடைத்துள்ளது. அதன்படி, 26 சதவீதம் பேர் மட்டுமே பின்பக்க இருக்கையில் அமரும்போது சீட் பெல்ட் அணிவது வழக்கம். 10,000 பேரில் 70 சதவீதம் பேர் பின்பக்க இருக்கையில் அமரும்போது சீட் பெல்ட் அணிவதில்லை. 4 சதவீதம் பேர் பின்பக்க இருக்கையில் அமர்ந்து பயணிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிந்தால் பெரிய விபத்துகள் நேரிடும்போது குறைவான காயங்களும் உயிர் தப்பிக்க வாய்ப்புகள் அதிகம்.மோட்டார் வாகன சட்டப்படி, பின் இருக்கையில் உள்ளவர்களும் 'சீட் பெல்ட்' அணிவது கட்டாயம். ஆனால் இது குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் இல்லை.