பண்டிகை காலத்தில் உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் வழிகள்
|உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதற்கான சிறந்த வழிகளில் தண்ணீர் பருகுவதும் முக்கியமானது.
பண்டிகை கொண்டாட்டங்களில் விருந்து உபசரிப்பு முக்கிய இடம் பிடிக்கும். ஸ்பெஷல் உணவாக இனிப்பு வகைகள்தான் அங்கம் வகிக்கும். விரும்பிய உணவு வகைகளை அதிகமாக சாப்பிட மனமும் விரும்பும். அதன் ருசி சாப்பிடும் அளவை கட்டுப்படுத்தாது.
என்றாவது ஒருநாள்தானே சாப்பிடுகிறோம் என்ற எண்ணத்தில் நிறைய பேர் அளவுக்கு அதிகமாக ருசித்து விடுவார்கள். அது உடலில் வழக்கத்தை விட அதிகமாக நச்சுக்கள் சேர்வதற்கு வழிவகுத்துவிடும். பண்டிகை காலம் முடிந்ததும் ஒருசில வழி முறைகளை பின்பற்றுவதன் மூலம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்களை வெளியேற்றிவிடலாம்.
பண்டிகை காலங்களில் இறைச்சி வகைகள், இனிப்பு பலகாரங்கள் அதிகம் சாப்பிட்டிருந்தால் குடல் இயக்கத்தை இலகுவாக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசிய மானது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளாக அவை இருக்க வேண்டும். அதுதான் செரிமான அமைப்பின் செயல்பாடுகளை குறைக்கும். அவை ஓய்வெடுப்பதற்கு போதுமான இடைவெளியை கொடுக்கும்.
பண்டிகை காலம் முடிந்ததும், பழைய வழக்கத்திற்கு திரும்ப முயற்சிக்க வேண்டும். அந்த சமயத்தில் அதிகம் சாப்பிட்டிருந்தால் சில கிலோ கிராம் வரை உடல் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. கூடவே நச்சுக்களும் அதிகம் சேர்ந்திருக்கும். உடற்பயிற்சி செய்வதும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் எளிமையான வழிமுறையாகும். கடினமான உடற்பயிற்சிகளை செய்வதை விட இலகுவான பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலே போதுமானது.
உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதற்கான சிறந்த வழிகளில் தண்ணீர் பருகுவதும் முக்கியமானது. இது நீரேற்றத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், கார்போஹைட் ரேட்டுகளை விரைவாக பிரித்தெடுக்க உதவும்.
பண்டிகை காலங்களில், தண்ணீருக்கு பதிலாக அனைத்து வகையான பானங்களையும் பருகி இருப்பார்கள். அவை பெரும்பாலும் சர்க்கரை அதிகம் கலந்தவையாகத்தான் இருக்கும். இயல்புக்குத் திரும்பிய பிறகு, தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.
விருந்தினர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளை பரி மாறிக்கொள்ளும்போது இனிப்புகள் வழங்கப்படும். அவற்றை தவிர்க்க முடியாது. பண்டிகைகளைக் கொண்டாடி முடித்த பிறகு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பலகாரங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.
குடல் அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்க அதிக நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம். பண்டிகை காலங்களில் நார்ச்சத்துள்ள உணவுகளை குறைவாக சாப்பிட்டிருக்கலாம். அல்லது அறவே தவிர்த்திருக்கலாம். பண்டிகைகளுக்கு பிந்தைய உணவில் நார்ச்சத்து அதிகமாக இடம் பிடித்திருக்க வேண்டும். பீன்ஸ், பயறு, சியா விதைகள், ஆரஞ்சு, பச்சை பட்டாணி, வாழைப்பழம், பேரிக்காய், ஆப்பிள், கேரட், காலிபிளவர், பிஸ்தா, பாதாம் உள்ளிட்டவற்றை உட்கொள்ள மறக்கக்கூடாது.