மேம்படுத்தப்பட்ட வோல்வோ எக்ஸ்.சி 40
|பிரீமியம் கார் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சுவீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனத்தின் தயாரிப்புகளில் எக்ஸ்.சி 40 மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகும்.
இந்த மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களைப் புகுத்தி அறிமுகம் செய்துள்ளது வோல்வோ நிறுவனம். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிமுகமாகியுள்ள இந்த மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.45.90 லட்சம். எக்ஸ்.சி 40 மாடல் 197 ஹெச்.பி. திறன் மற்றும் ஹைபிரிட் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது.
இது புதிய ஆண்ட்ராய்டு சிஸ்டம் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. இதில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 48 வோல்ட் ஒருங்கிணைந்த ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மோட்டார் உள்ளது. இது 197 ஹெச்.பி. திறனையும், 300 நியூட்டன் மீட்டர் டார்க் விசையையும் வெளிப்படுத்தக் கூடிய இதில் 8 டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. முன்புற வடிவமைப்பிலும் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. முகப்பு விளக்கு வடிவமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கும் உள்ளது. முன்புற பம்பரின் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கண்கவர் வண்ணங்களில் (ஜோர்ட் நீலம், சேஜ் பச்சை) இவை கிடைக்கும். டேஷ் போர்டு மற்றும் கதவுகளின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டு கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கூகுள் அசிஸ்டென்ட் உதவியோடு குரல்வழி கட்டுப்பாட்டிலும் செயல்படுத்தலாம்.
இதில் மேம்படுத்தப்பட்ட காற்று சுத்திகரிப்பான் (ஏர் பியூரிபயர்) பயன்படுத்தப்பட்டுள்ளது. 14 ஸ்பீக்கர்களைக் கொண்ட ஹார்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் இனிய இசையை வழங்கும். அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், டிரைவர் அசிஸ்ட், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், பின்புறம் உள்ள வாகன நெரிசலை உணர்த்து வது, பின்புற மோதல் தவிர்ப்பு எச்சரிக்கை வசதி ஆகியன இதில் உள்ளன.