< Back
சிறப்புக் கட்டுரைகள்
கேரளாவில் 70 ஆண்டுகளாக கோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த சைவ முதலை உயிரிழப்பு!
சிறப்புக் கட்டுரைகள்

கேரளாவில் 70 ஆண்டுகளாக கோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த சைவ முதலை உயிரிழப்பு!

தினத்தந்தி
|
10 Oct 2022 10:11 PM IST

கேரளாவின் கும்பளா பகுதியில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ முதலை வாழ்ந்து வந்தது.

காசர்கோடு,

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் கும்பளா பகுதியில் உள்ள அனந்தபுரத்தில் அருள்மிகு அனந்த பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பாபியா என்ற சைவ முதலை வாழ்ந்து வந்தது.

அது ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்தது. அதன் உடல் கும்பளாவில் உள்ள ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவில் வளாகத்தில் ப்ரீசரில் வைக்கப்பட்டது.

இந்த கோவிலின் அருகாமையில் ஆறு அல்லது மற்ற நீர்நிலைகள் எதுவும் இல்லை. ஆனால் இந்த முதலை எப்படி கோவிலின் குளத்தை அடைந்தது என்பதைக் குறிக்கும் பதிவுகள் கோவிலில் இல்லை. இது இன்றளவும் ஆச்சரியமாகவே உள்ளது.

கோவிலில் உள்ள அரிசி மற்றும் வெல்லம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு இந்த முதலை சைவ பிராணியாக வாழ்ந்து வந்தது.குளத்தில் மீன்கள் அதிகமாக உள்ளபோதும் இந்த முதலை அவற்றை உண்பதில்லை.

கோவிலில் தினசரி பூஜைகளுக்குப் பிறகு, ஒரு நாளைக்கு இரண்டு முறை பாபியாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. கோவிலில் நைவேத்தியம் செய்யப்பட்ட பச்சரிசி சாதத்தைக் காலையிலும், மதியமும் அர்ச்சகர் குளத்தில் போடுவார். அந்தப் பிரசாதத்தையே இந்த முதலை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவிலின் மூலஸ்தானம் இந்தக் கோவில் என்று நம்பப்படுகிறது.ஒருமுறை, இந்த முதலை கோயில் கருவறைக்கு முன் வந்து சாமி தரிசனம் செய்ததை அர்ச்சகர் தனது செல்போனில் படம் பிடித்து வலைதளங்களில் பகிர்ந்தார்.

கோவில் புராணத்தின் படி, 1945 ஆம் ஆண்டு ஆங்கிலேய சிப்பாய் ஒருவர் இந்த ஆலயத்தில் ஒரு முதலையைச் சுட்டுக் கொன்றார். ஆனால் அடுத்த சில நாட்களில் மற்றொரு முதலை, கோவில் குளத்தில் தென்பட்டது என்று கோவில் புராணம் கூறுகிறது. அதன் பின்னர் அதற்கு பாபியா என்று பெயரிடப்பட்டது. பாபியா மூர்க்கமாக நடந்து கொண்டதாகவோ, பக்தர்களைத் தாக்கியதாக இதுவரை எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நேற்று இரவு பபியா முதலை இறந்துவிட்டது. தெய்விக முதலையின் உடல் கோயில் வளாகத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தர்கள் திரளாகக் கோவிலுக்குச் சென்று பாபியா முதலைக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்