< Back
சிறப்புக் கட்டுரைகள்
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா: வடகிழக்கில் வாகை சூடப்போவது யார்?
சிறப்புக் கட்டுரைகள்

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா: வடகிழக்கில் வாகை சூடப்போவது யார்?

தினத்தந்தி
|
16 Feb 2023 6:30 PM IST

திரிபுராவில் இன்றைய தினமும், மேகாலயா, நாகாலாந்தில் வருகிற 27-ந் தேதியும் ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் 'ஏழு சகோதரிகள்' என்று அழைக்கப்படுகின்றன. இவை குட்டிக்குட்டி மாநிலங்கள் என்றாலும், வங்காளதேசம், சீனா, மியான்மரையொட்டி கிடப்பதால் பிராந்தியரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றவை.

அழகிய '7 சகோதரிகளில்' '3 சகோதரிகள்' தேர்தல் திருவிழாவை சந்திக்கின்றன. திரிபுராவில் இன்றைய தினமும், மேகாலயா, நாகாலாந்தில் வருகிற 27-ந் தேதியும் ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு, இந்த ஆண்டு நடக்கும் 9 மாநில சட்டப்பேரவை தேர்தல், அரையிறுதியாக கருதப்படுகிறது. அந்தவகையில் இந்த வடகிழக்கு மாநிலங்களின் தேர்தலை அரையிறுதியின் முன்னோட்டம் எனலாம்.

இந்த மாநிலங்களில் தலா 60-க்கு (தொகுதிகள் எண்ணிக்கை) எத்தனை மதிப்பெண்களை (இடங்களை) கட்சிகள் பெறப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் 3 மாநிலங்களிலுமே, மத்தியில் அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. தனித்து அல்லது கூட்டணி ஆட்சியில் இருப்பதால், பொதுத்தேர்தலுக்கு முன்பாக அக்கட்சி 'பாஸ்மார்க்' பெறுகிறதா என்பதை அறிய அரசியல் கட்சியினரும், விமர்சகர்களும் வெகு ஆர்வமாக உள்ளனர்.

மலையும், மடுவுமான நிலப்பரப்புடன், இனக்குழுக்களுக்கு இடையிலான பிரச்சினைகள் உள்பட ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள் உள்ள இந்த மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எந்த அளவு வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி ஓர் அலசல்...

'திக்...திக்...' திரிபுரா

வடகிழக்கின் 3 மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு முதல் பரீட்சை, திரிபுரா தேர்தல். மேற்கு வங்காளத்தைப் போல கால் நூற்றாண்டு காலம் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு இங்கு கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜ.க. அதிகாரத்தை கைப்பற்றியது அபார சாதனை. நேர்மையின் உருவமாக கருதப்படும் மார்க்சிஸ்ட் முதல்-மந்திரி மாணிக் சர்க்காராலும் அப்போது பா.ஜ.க. வெற்றியைத் தடுக்க முடியவில்லை. இம்முறை காங்கிரசுடன் தோளோடு தோள் சேர்ந்து பா.ஜ.க.வுக்கு அணைபோட முயல்கிறது மார்க்சிஸ்ட்.

மத்திய அரசின் உதவியுடன் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களை திரிபுராவுக்கு ஆளும் பா.ஜனதா கொண்டுவந்துள்ளது. அதன் பளபளப்பு, மாநிலமெங்கும் அதிலும் தலைநகர் அகர்தலாவில் அசத்தலாக தெரிகிறது.

ஆனால் 2018-ம் ஆண்டு முதல் 2022 வரை பா.ஜ.க. முதல்-மந்திரியாக இருந்த பிப்லப்குமார் தேப், நல்ல பெயர் பெறவில்லை. அவரது ஆட்சியில் அராஜகங்கள், அரசியல் வன்முறைகள் அதிரடியாக அதிகரித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

பிப்லப்குமார் மீதான அதிருப்தி பொங்கிப் பெருகி வழிவதை புரிந்துகொண்ட டெல்லி தலைமை, மாணிக் சகாவை கடந்த ஆண்டு முதல்-மந்திரி ஆக்கியது.

அடிப்படையில் ஒரு பல் மருத்துவரான அவர், 'ஜென்டில்மேன்' என்று பெயர் பெற்றவர். வழக்கத்துக்கு மாறாக, மாணிக் சகாதான் முதல்-மந்திரி என்று இந்த தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டு தாமரைக்கட்சி களமிறங்கியிருப்பது, மாணிக் சகா மீதான நம்பிக்கைக்கு அத்தாட்சி. ஆனால் அவரை முதல்-மந்திரி ஆக்கியதே தாமதமான நடவடிக்கை என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இருந்தபோதும் ஆட்சியைத் தக்கவைக்க முடியும் என்ற மகா நம்பிக்கையோடு மாணிக் சகா இருக்கிறார். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா போன்ற பெருந்தலைகளின் பிரசாரங்களும் அவருக்கு தெம்பு தந்திருக்கின்றன.

ஆனால் எதிர்புறம் மார்க்சிஸ்டும், காங்கிரசும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்றன. பா.ஜ.க.வை வீழ்த்தவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் ஒன்றிணைந்திருக்கும் இந்த இரண்டு கட்சிகளும், தங்களுக்கு இடையில் இருப்பது தொகுதி அனுசரிப்புதானே தவிர, கூட்டணி அல்ல என்று தெளிவாக கூறுகின்றன. 13 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு, பிற இடங்களை மார்க்சிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்திருக்கும் காங்கிரசுக்கு ஆட்சி எண்ணமே இல்லை. இப்படி கூட்டணி அல்லாத கூட்டணியை அமைத்திருந்தாலும், பொதுவாக ஆட்சிக்கு எதிரான மனோபாவம் தங்களை கரை சேர்க்கும் என்று காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் நம்புகின்றன. எல்லையை விரிக்க எண்ணும் திரிணாமுல் காங்கிரஸ், 'நானும் ஆட்டத்தில் இருக்கிறேன்' என்ற அளவிலேயே உள்ளது.

உண்மையில் மாநிலத்தில் தேர்தல் கோதாவை மும்முனை போட்டியாக மாற்றியிருப்பது, திப்ரா மோத்தா என்ற உள்ளூர் கட்சிதான். திரிபுரா மன்னர் குடும்பத்தின் தலைவரான பிரத்யோத் மாணிக்ய தேப்பர்மா நிறுவிய இக்கட்சி, பழங்குடியினர் மத்தியில் செல்வாக்கு செலுத்துகிறது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. வென்ற 36 தொகுதிகளில் பாதி, பழங்குடியினர் பகுதியைச் சார்ந்தவை. 2021-ம் ஆண்டு திரிபுரா பழங்குடியின பகுதி தன்னாட்சி மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் திப்ரா மோத்தா தடாலடி வெற்றி பெற்றது. ஆக, திப்ரா மோத்தாவை 'திக்..திக்...'கென்று பார்த்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க.

ஆனால் பலத்த போட்டியிலும், முழுத்திறமையையும் பயன்படுத்தி பா.ஜ.க. 'போட்டோ பினிஷிங்'கிலாவது எல்லைக்கோட்டை எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

'நம்பிக்கைச் சுடர்' நாகாலாந்து

நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.) மற்றும் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடர்வதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'நாகா மக்கள் முன்னணி'யும் அதன் 4 எம்.எல்.ஏ.க்களை தவிர்த்து ஆளும் கூட்டணியில் அங்கமாகிவிட்டதால் அங்கு எதிர்க்கட்சியே இல்லை. என்.டி.பி.பி. 40 இடங்களிலும், பா.ஜ.க. 20 இடங்களிலும் போட்டியிட டெல்லியில் உடன்பாடு கண்டன. ஆனால் அதிக இடங்களை எதிர்பார்த்த உள்ளூர் பா.ஜ.க. தலைவர்களுக்கு இதில் மகிழ்ச்சி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அது ஆளும் கூட்டணியை குடைசாய்க்கும் அளவுக்கு போகாது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை மையமாக கொண்டதுதான் நாகாலாந்து தேர்தல் களம். அதனால்தான் கடந்த 2018-ம் ஆண்டு பா.ஜ.க.வும், என்.டி.பி.பி.யும் 'தீர்வுக்கான தேர்தல்' என்ற முழக்கத்தை முன்வைத்து சட்டப்பேரவை சவாலை சந்தித்து வெற்றி பெற்றன. பல்வேறு கோரிக்கைகளுடன் போராடிவரும் போராளிக் குழுக்களுடன் பேசி உடன்பாடு காண்போம் என்று அந்த கூட்டணி வாக்குறுதி தந்திருந்தது. ஆனால் நாகாலிம் தேசிய சோசலிச கவுன்சில் (ஐசக்-முய்வா) போன்ற முக்கிய போராளிக் குழுக்களுடன் இன்னும் ஒத்திசைவுக்கு வர முடியவில்லை.

இந்நிலையில், 'நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பிரதமர் மோடி ஆர்வமாக இருக்கிறார். அதற்காக உள்துறை மந்திரி அமித்ஷா அயராது உழைத்து வருகிறார். இந்த பிரச்சினைக்கான தீர்வு திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது' என்று இப்போது தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய நட்டா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். வாக்காளர்களை வசீகரிக்க முயல்கிறார். ஆனால் வாய்ப்பு வழங்கவில்லை என்ற அதிருப்தியால் நடக்கும் உள்குத்துகள், ஆளும் என்.டி.பி.பி.யை பதம் பார்க்கும், வாய்ப்பு கிடைக்காத சிலர் சுயேச்சையாக களமிறங்கலாம் என்ற கலக்கம் அக்கட்சி வட்டாரத்தில் நிலவுகிறது.

மற்றொருபுறம், மாநிலத்தின் 7 கிழக்கு மாவட்டங்களை தனியாக பிரித்து, எல்லைப்புற நாகாலாந்து என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. தங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் மிரட்டுகிறது. இப்பகுதியின் 7 பழங்குடி இனத்தவர்கள் மத்தியில் மதிப்பு பெற்றது இந்த அமைப்பு. எனவே ஆளும் கூட்டணிக்கு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது.

எனினும், வெற்றி கூட்டணி என்று தாங்கள் கருதப்படுவதால் வெகுவான வாக்காளர்கள் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கைச் சுடர் ஆளும் கூட்டணி தலைவர்கள் மத்தியில் ஒளிர்கிறது. முதல்-மந்திரி நெய்பியு ரியோ, 5-வது முறையாக மகுடம் சூடலாம் என்று மனதார எண்ணுகிறார். கடந்த தேர்தலில் கணக்கையே தொடங்கமுடியாத காங்கிரசுக்கும் இப்போது கொஞ்சம் நம்பிக்கை பிறக்கிறது.

'மிதக்கும்' மேகாலயா?

இந்த முறை மேகாலயாவில் தேர்தல் முடிவுகளால் அந்தரத்தில் 'மிதக்கும்' சட்டசபை உருவாகக்கூடும் அதாவது, தொங்கு சட்டசபை ஏற்படக்கூடும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். காரணம், இந்த மாநிலத்தின் 5 முக்கிய கட்சிகளும் கூட்டணிக்கு கூடிவராமல் தனித்தனியாக தேர்தல் போரில் இறங்கியிருப்பதுதான்.

கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் 21 இடங்களை வென்று காங்கிரஸ்தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைத்தது என்னவோ, மக்களவை முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சிதான் (என்.பி.பி.). அப்போது 20 இடங்களை வென்ற இக்கட்சி, பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளைத் திரட்டிக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த மாநில அரசியல் அரங்கில் பல 'தாவல் சாகசங்கள்' நடந்தன. அதில் பரிதாப கதிக்கு ஆளானது காங்கிரஸ்தான். அதன் 12 எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் முதல்-மந்திரி முகுல் சங்மா தலைமையில் திரிணாமுல் காங்கிரசில் சங்கமித்துவிட்டனர். பிற எம்.எல்.ஏ.க்கள், ஆளும் என்.பி.பி. கட்சிக்கு தாவியது, 3 எம்.எல்.ஏ.க்களின் திடீர் மரணம் என்று ஒட்டுமொத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூடாரமே காலியாகிவிட்டது. இப்போதும் காங்கிரசைவிட, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்தான் ஆளும் என்.பி.பி.க்கு 'டப்' கொடுக்கும் என கருதப்படுகிறது.

கிறிஸ்தவர்களை பெருவாரியாக கொண்ட இந்த மாநிலத்தில் பா.ஜ.க. பிரமாதமாக சாதிக்க முடியாது என்று கணிப்புகள் கூறுகின்றன. திரிணாமுல் காங்கிரசோ, என்.பி.பி.யோ தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கலாம். அப்போது அவற்றில் ஒன்று, சிறு கட்சிகளின் உதவியுடன் ஆட்சிப்பீடம் ஏறலாம். இங்கு சிறுகட்சிகள் 12 தொகுதிகள் வரை வெல்லக்கூடும் என்பதால் ஆட்சி அமைப்பதில் அவை பிரதான பங்கு வகிக்கும் என்று எண்ணப்படுகிறது. ஆக மேகங்கள் தவழும் மேகாலயா மாநிலத்தில் குறுநில மன்னர்களாகிய குட்டிக் கட்சியினர்தான் 'மகாராஜாக்களாக' வலம்வரப்போகிறார்கள்.

கடைசியாக... தேர்தல் வெற்றியைத் தாண்டி, 'வடகிழக்கு குளத்தில்' ஆழம் பார்க்கும் 'இரட்டைப் பூக்களும்' (திரிணாமுல் காங்கிரஸ் சின்னம்), தாமரையும் (பா.ஜ.க.), இந்த பிராந்தியத்தில் தாங்கள் எவ்வளவு வேரூன்றி இருக்கிறோம் என்பதை அறியவே அதிக ஆவலோடு இருக்கின்றன.

மேலும் செய்திகள்