ஆட்டிஸத்தை குணப்படுத்தும் பயிற்சி முறைகள்
|‘‘ஆட்டிஸம் ஒரு நோயல்ல . ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தொற்றுநோயும் கிடையாது. அது ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக்குறைபாடு.
அதையே `ஆட்டிஸம் ஸ்பெக்ட்ர ம் டிஸ்ஆர்டர்' என்கிறோம்'' என்று மெதுவாக பேச ஆரம்பிக்கிறார், சென்னை முகப்பேரை சேர்ந்த ஜீவா கமல்ராஜ். கடந்த 22 வருடங்களாக ஆட்டிசம் பற்றி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் ஜீவா , செயல்முறை மருத்துவரும் கூட. இவர் ஆட்டிஸத்தின் பாதிப்புகளையும், அதன் தன்மைகளையும், புதிதாக சேர்ந்திருக்கும் ஆட்டிசம் வகைகளையும் பற்றி விரிவாக பேசுகிறார்.
''ஆட்டிசத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகள், சமூகத்தில் மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறன் (Communication), பழகும் திறன் (Socialization) போன்றவற்றில் பின்தங்கியிருப்பார்கள். பெரும்பாலானோருக்கு பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் பேசினாலும், தெளிவாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி பேசமாட்டார்கள். சிலர் தலை மற்றும் கை விரல்களை சம்பந்தமில்லாமல் அசைத்து கொண்டிருப்பார்கள். இந்தக்குறைபாட்டின் தீவிரத்தன்மை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் திறனும், அவர்களுக்கான சிக்கல்களும் தனித்துவமானவை '' என்றவர், ஆட்டிஸம் குறைபாட்டின் தன்மைக்கு ஏற்ப , மாறுபடும் பாதிப்புகளை பல வருடங்களாக ஆராய்ந்திருப்பதுடன் அதை குணப்படுத்தும் பயிற்சி முறைகளையும் வகுத்திருக்கிறார்.
''ஒரே மாதியான செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது, சில செயல்களைச் சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப்புரிதல்கள் இல்லா மலிருப்பது, பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது, பொருளற்ற சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது, காரணமின்றி அழுவது, சிரிப்பது, கைகளைத் தட்டுவது, குதிப்பதுபோல ஏதாவது வித்தியாசமான செயல்பாடுகளில் ஈடுபடுவது, தேவையானவற்றை விரலால் சுட்டிக் காட்டாமல் மற்றவரின் கைபிடித்துச்சென்று காட்டுவது, கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது, தனிமையில் இருப்பது, ராட்டினம் போன்ற சுற்றும் பொருள்களின் மீது ஆர்வம் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
இப்படி மாறுபடும் செயல்களுக்கு ஏற்பவும், குறைபாட்டின் தீவிரத்திற்கு ஏற்பவும் அவர்களின் ஆட்டிச குறைபாடும், வகைப்பாடும் கணக்கிடப்படும். ஹப்பர் ஆக்டிவ் (வழக்கத்தை விட சுறுசுறுப்பாக இருத்தல்), லேர்னிங் டிஸெபிலிட்டி (கற்றுக் கொள்வதில் குறைபாடு), அட்டன்ஷன் டிஸெபிலிட்டி (கவனிப்பதில் பிரச்சினை ), சோசியலைசேசன் குறைபாடு (சமூகத்துடன் சேராமல் தனித்து இருப்பது)... என வகைப்படுத்தி, பாதிப்பிற்கு ஏற்ற செயல்முறை பயிற்சிகளை பரிந்துரைக்கிறோம்" என்றவர், எதனால் இத்தகைய குறைபாடுகள் உருவாகின்றன என்பது பற்றி விளக்கினார்.
''ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் இதுதான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. `மரபணுக்களின் சீரற்ற நிலை, சுற்றுச்சூழல் மாசு, காற்றில், மண்ணில் கலக்கும் நச்சு ரசாயனங்களும் கனிமங்களும் காரணங்களாக இருக்கலாம். வளர்சிதை மாற்றக் குறைபாடு காரணமாகவும் மரபு வழியாகவும்கூட ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படலாம். ஒவ்வொருவருக்குமான காரணங்கள் மாறுபடும். ஆட்டிஸத்துக்கான தெளிவான காரணம் இன்னும் வரையறுக்கப்பட வில்லை '' என்றவர், இந்த குறைப்பாட்டை எந்த வயதில் கண்டறிய முடியும் என விளக்கினார்.
''முன்பெல்லாம் குழந்தை பிறந்து 10-லிருந்து 18 மாதங்களுக்குள்ளாகவே அறிகுறிகளைக் கண்டறிய முடியும். ஆனால் சமீபகாலமாக 2 வயது வரை இயல்பாக இருக்கும் குழந்தைகள் கூட, அதற்கு மேற்பட்ட கால கட்டங்களில் ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.
ஆட்டிஸத்தைக் கண்டறிய பிரத்யேக மருத்துவப் பரிசோதனைகள் எதுவும் இல்லை . பெற்றோர், உறவினர், குழந்தைகள் நலமருத்துவர், ஆசிரியர் போன்றவர்கள் தான் இந்தக் குறைபாட்டைக்
கண்டறிந்து சொல்ல முடியும். அவர்கள் இயல்பான பழக்கவழக்கங்களில் இருந்து மாறுபடும் போது, அதுசார்ந்த வல்லுனர்களை சந்திப்பது கட்டாயமாகிறது. மேலும் நரம்பியல் தொடர்பான
ஆட்டிஸக் குறைபாடுகளை பிரத்யேக கேள்வி தேர்வுகள் மூலம் கண்டறியலாம்'' என்றவர், ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை கூறினார்.
''ஆட்டிஸம் என்பது குறைபாடுதான், நோயல்ல . எனவே, அந்தக்குறைபாட்டின் தன்மையிலிருந்து பாதித்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். தொடர்ந்து பயிற்சிகள் கொடுப்பதன் மூலம், சீரான நிலைக்குக் கொண்டு வர முடியும். அதே போல
ஆட்டிஸம் குறைபாடு எவ்வளவு விரைவாக கண்டறியப்படுகிறதோ , அந்தளவிற்கு அவர்களை வெகுவிரைவாக இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும். ஏனெனில் அவர்களை சிறுவயதில் இருந்தே இயல்பானவர்களாக பழக்கப்படுத்திவிடலாம்.
ஆட்டிஸம் பா தித்த குழந்தைகளின் தீவிரத்தன்மை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். அவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy), பேச்சுப் பயிற்சி (Speech Therapy), பொருட்களை அடுக்கி வைக்கும் பயிற்சி (Lining Objects) சமூகத்துடன் ஒன்றிபோதல், கவனிக்கும் திறன் வளர்ப்பு பயிற்சி போன்ற தெரபி சிகிச்சைகள் உதவும். ஒருசில குழந்தைகளை, அவர்களது விருப்பமான விளையாட்டுகள், செயல்பாடுகளை கொண்டே , இயல்பானவர்களாக மாற்றமுடியும்'' என்றவர், இத்தகைய செயல்முறை பயிற்சிகளையே, தன்னுடை ய 20 ஆண்டுகால ஆராய்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். மேலும் சைதன்யா என்ற அமைப்பின் மூலம் ஆட்டிசம் தொடர்பான விழிப்புணர்வுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வரும் ஜீவா கமல்ராஜ், அதன் மூலம சில குழந்தைகளுக்கு இலவச சிகிச்சைகளையும் வழங்கி வருகிறார்.
''ஆட்டிஸம் பாதிப்பு போன்ற சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளுக்கான அனைத்துப் பயிற்சிகளையும் அரசு மருத்துவமனைகளிலேயே இலவசமாகப் பெற முடியும். ஒவ்வொ ரு மாவட்டத் தலைமை மருத்துவமனையிலும் இதற்காகத் தனிப்பிரிவு அமைக்கப் பட்டிருக்கிறது. அரசு தரப்பில் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை , மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன'' என்ற தக வலுடன் விடை
பெற்றார்.