< Back
சிறப்புக் கட்டுரைகள்
மனதை குளிர்விக்கும் குளு குளு சுற்றுலா இடங்கள்
சிறப்புக் கட்டுரைகள்

மனதை குளிர்விக்கும் 'குளு குளு' சுற்றுலா இடங்கள்

தினத்தந்தி
|
3 Jun 2022 7:18 PM IST

சுற்றுலா பயணங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக இந்தியா விளங்குகிறது. மலைகள், குன்றுகள், பசுமை படர்ந்த மலைக்காடுகள், பரந்து விரிந்த கடற்கரைகள் என இயற்கையின் அத்தனை அழகியல் அம்சங்களையும் தாங்கி நிற்கிறது.

அதில் கோடை காலத்தில் இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அவை வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள உதவுவதோடு மறக்கமுடியாத நினைவுகளையும் மனதில் பதிய வைக்கக்கூடியவை. குளிர்ச்சியான சூழலை உணரவைத்து மனதை குதூகலிக்க வைத்துவிடும்.

அத்தகைய சில இடங்கள் உங்கள் பார்வைக்கு...





டார்ஜிலிங்: இயற்கையின் சொர்க்கபுரி

மேற்கு வங்காளத்தில் அமைந்திருக்கும் டார்ஜிலிங், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரபலமான கோடை வாசஸ்தலமாகும். கடல் மட்டத்தில் இருந்து 8,586 மீட்டர் உயரம் கொண்ட கஞ்சன் ஜங்கா மலைச்சிகரம் கம்பீரமான தோற்றத்துடன் கவர்ந்திழுக்கும்.

திரும்பிய பக்கமெல்லாம் பச்சை பசேல் என படர்ந்திருக்கும் தேயிலை தோட்டங்கள் எழுப்பும் வாசம் திக்குமுக்காட செய்துவிடும். தேயிலை பானங்களை விரும்பாதவர்கள் கூட அதனை ருசித்து பார்ப்பதற்கு ஆர்வமாகிவிடுவார்கள். இயற்கையின் சொர்க்கபுரியாக விளங்கும் இங்கு சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. இயற்கை நேசர்களுக்கு பிரியமான இடமாக இது விளங்குகிறது.



அந்தமான் மற்றும் நிக்கோபார்: கடற்கரை கொண்டாட்டம்

கோடையில் பெரும்பாலும் கடற்கரைகள் கவர்ச்சிகரமாக தெரியாது. அங்கு காலை, மாலை வேளைகளில் இதமான சூழல் நிலவும். மதிய வேளையில் அனல் காற்று வீசக்கூடும். கோடை காலத்தில் பெரும்பாலும் மாலை வேளைகளில்தான் கடற்கரை காற்றை நுகர்வதற்கு பலரும் விரும்புவார்கள். ஆனால் வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் இந்த எண்ணம் நிச்சயமாக மாறிவிடும்.

சுற்றுலா பயணிகளை குஷிப்படுத்தும் சாகச விளையாட்டுகள் அங்கு ஏராளம் இருக்கின்றன. மணற்பாங்கான கரையோரங்களில் வெயிலை மறந்து ஓய்வெடுக்க தூண்டும் காலநிலை அங்கு நிலவும். நீர்நிலைகள், வெப்பமண்டல மழைக்காடுகள் மற்றும் வரலாற்றுத் தலங்கள் என ஆராய்வதற்கும், பொழுதை போக்குவதற்கும், கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்கும் ஏற்ற இடமாக அந்தமான், நிக்கோபார் தீவுகள் அமைந்திருக்கின்றன. வெப்பமண்டல கால நிலையில் விளையும் பழங்கள் மற்றும் இளநீரை சுவைத்துக்கொண்டே கடற்கரை அழகை ரசித்தபடி கோடை விடுமுறையை அனுபவித்துவிட்டு வரலாம்.

மணாலி: பனி மூடிய மலைகள்

இந்தியாவின் பிரபலமான கோடை கால இடங்களில் ஒன்றாக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி விளங்குகிறது. இங்கு நிலவும் கால நிலையும், இயற்கை அழகும், சாகச பயணங்களும் கோடை விடுமுறையை மறக்க முடியாத நாட்களாக மாற்றிவிடும். இந்த அழகிய நகரம் பனி மூடிய மலை சிகரங்களால் சூழப்பட்டுள்ளது.

கோடையை குளிர்ச்சியான சூழலில் கொண்டாட காரணமாக அமைந்திருக்கிறது. அங்கு ஓடும் பியாஸ் நதி பசுமை படர்ந்த சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. மலையேற்றம், ரிவர் ராப்டிங், பாராகிளைடிங், சோர்பிங் உள்பட அனைத்து வகையான சாகச அனுபவங்களையும் ஒரே இடத்தில் அனுபவித்து விடலாம். பனிகளுக்கு மத்தியில் உற்சாகமாக விளையாடி பொழுதை இனிமையாக கழிக்கலாம்.

மேலும் செய்திகள்