< Back
சிறப்புக் கட்டுரைகள்
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு  -  பீஷ்மர் சபதத்திற்கு இணையான பஞ்சவன்மாதேவி சபதம்
சிறப்புக் கட்டுரைகள்

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - பீஷ்மர் சபதத்திற்கு இணையான பஞ்சவன்மாதேவி சபதம்

தினத்தந்தி
|
10 March 2023 8:23 PM IST

பீஷ்மரின் சபதத்திற்கு இணையான சபதத்தை, ராஜேந்திரனின் சிற்றன்னை பஞ்சவன்மாதேவி, தனது உள்ளத்திற்குள் எடுத்துக்கொண்டது வரலாற்றில் வியப்பான நிகழ்வு ஆகும்.

தனது ஆற்றலால், தென் கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட பெரும் பகுதியான நிலத்தை ஆட்சி செய்த மன்னர் ராஜேந்திர சோழன், தனது தாயை விட சிற்றன்னையின் அன்புக்கு அதிக அளவில் ஆட்பட்டு இருந்தார் என்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

ராஜேந்திரனின் தந்தையான ராஜராஜன், பல பெண்களை மணந்து இருந்தார். அவர்களில் லோகமாதேவி என்பவர் பட்டத்து ராணி. 3 -வது அரசியாகக் கருதப்பட்டவர், ராஜேந்திரனின் தாயார் வானவன்மாதேவி. 4 -வது அரசி என்ற அந்தஸ்தைப் பெற்றவர் பஞ்சவன்மாதேவி.

இதனால் இவர், ராஜேந்திரனின் சிற்றன்னை ஆகிறார். பஞ்சவன்மாதேவியின் இயற்பெயர் நக்கன் தில்லையழகியார். பழுவேட்டரையர்கள் குடும்பத்தில் பிறந்தவர். நடனம் மற்றும் போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்றவர். தளிச்சேரிப் பெண்ணாகவும் விளங்கினார். ராஜராஜனின் பட்டத்து ராணி லோகமாதேவிக்கு, குந்தவை உள்பட மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் ஆண் குழந்தை இல்லை.

இந்த நிலையில், ராஜராஜனின் 3 -வது அரசி வானவன்மாதேவி பெற்ற ஆண் குழந்தை, பட்டத்து இளவரசர் அந்தஸ்துடன், ராஜேந்திரன் என்ற பெயரில் வளர்ந்தார்.

ராஜேந்திரன் சிறுவனாக இருந்தபோதே மிக அழகிய தோற்றத்துடன், துரு, துரு என்று காணப்பட்டதாலும், எதிர்கால மன்னர் என்பதாலும், அந்தச் சிறுவன் மீது அனைவரும் பாச மழை பொழிந்தார்கள்.

ராஜேந்திரன் மீது அவரது சிற்றன்னை பஞ்சவன்மாதேவி அலாதிப் பிரியம் வைத்து இருந்தார். அனைத்துத் தகுதிகளையும் கொண்ட ராஜேந்திரன், சோழப் பேரரசின் வருங்கால மன்னராக வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இந்தச்சமயத்தில், பஞ்சவன்மாதேவி மனதில் ஓர் எண்ணம் உதித்தது. எதிர்காலத்தில் தான் கருவுற்று தனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தால், அந்த மகன் சோழப் பேரரசின் அரியணை ஏறுவதற்கு ராஜேந்திரனுக்குப் போட்டியாக வளர்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவரது உள் மனதில் படியத் தொடங்கியது. அப்போது, மகாபாரதத்தில் பீஷ்மர் எடுத்தது போன்ற மகத்தான சபதத்தை பஞ்சவன்மாதேவி எடுத்து வரலாறு படைத்தார்.

பீஷ்மர் எடுத்த சபதம் என்ன?

பீஷ்மரின் தந்தையான மன்னர் சாந்தனு, மீனவப் பெண்ணான சத்தியவதியை மணக்க விரும்பினார். தந்தைக்காகப் பெண் கேட்கச் சென்றபோது பீஷ்மரிடம் சத்தியவதியின் தந்தை, ஓர் உறுதி மொழியைக் கேட்கிறார். சாந்தனு மறைவுக்குப் பிறகு, சத்தியவதிக்குப் பிறக்கும் குழந்தையே அரசு உரிமை பெறும் என்றால் இந்தத் திருமணத்திற்கு நான் சம்மதிக்கிறேன் என்கிறார்.

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக பீஷ்மர், உலகமே வியக்கும் வகையில் ஒரு சபதம் செய்கிறார்.

"எனது தந்தைக்குப் பிறகு நான் ஆட்சி உரிமை கேட்க மாட்டேன். சந்ததி ஏற்படக் கூடாது என்பதற்காக நான் திருமணமே செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருப்பேன்" என்று பீஷ்மர் உறுதி கூறுகிறார். பீஷ்மரின் சபதத்திற்கு இணையான சபதத்தை, ராஜேந்திரனின் சிற்றன்னை பஞ்சவன்மாதேவி, தனது உள்ளத்திற்குள் எடுத்துக்கொண்டது வரலாற்றில் வியப்பான நிகழ்வு ஆகும்.

"ராஜராஜனுக்குப் பிறகு ராஜேந்திரனே சோழப் பேரரசராகச் சிம்மாசனம் ஏற வேண்டும். ராஜேந்திரனுக்குப் போட்டியாக வந்துவிடலாம் என்பதால், எந்த நிலையிலும் நான் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்" என்று பஞ்சவன்மாதேவி, தனக்குத் தானே சத்தியம் செய்து கொண்டார். தனது வைராக்கியத்தையும் மீறி கரு உருவாகிவிட்டால் என்ன செய்வது என்று நினைத்த பஞ்சவன்மாதேவியின் மனம் படபடத்தது.

வயிற்றில் கரு ஏற்படுவதைத் தடுக்கும் மூலிகை மருந்துகளை மருத்துவர்களிடம் இருந்து தந்திரமாகக் கேட்டுப் பெற்ற பஞ்சவன்மாதேவி, அந்த மருந்துகளை யாரும் அறியாத வண்ணம் எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். அந்த மருந்து நன்றாக வேலை செய்தது. இதன் மூலம் பஞ்சவன்மாதேவி, 'மலடு' ஆக ஆனதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு ராஜேந்திரனின் தாயார் வானவன்மாதேவி மரணம் அடைந்தபோது, தாயை இழந்த சோகம், ராஜேந்திரன் மீது படிந்து, அவரது எதிர்கால வாழ்வைப் பாதித்துவிடக் கூடாது என நினைத்த பஞ்சவன்மாதேவி, மேலும் அதிகக் கவனம் செலுத்தி அவரை வளர்ப்பதில் அதிக ஈடுபாடு காட்டினார். ராஜேந்திரன் வாலிப வயதை அடைந்தபோதுதான், தனக்காக சிற்றன்னை பஞ்சவன்மாதேவி செய்த உன்னதமான தியாகம் பற்றி அவருக்குத் தெரிய வந்தது. இதனை அறிந்த ராஜேந்திரன், அதன் பிறகு பஞ்சவன்மாதேவியைத் தனது தாய்க்கும் மேலாகக் கருதி, அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டார்.

அப்படிப்பட்ட தியாகத் தீபமான பஞ்சவன்மாதேவி மரணம் அடைந்தபோது ராஜேந்திரன் வேதனையில் துடித்தார். தனது சிற்றன்னை செய்த தியாகம், காலம் உள்ள அளவும் போற்றப்பட வேண்டும். அவரது புகழும், நினைவும் என்றென்றும் நிலைத்து இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். இதற்காகத், தனது சிற்றன்னை சமாதி மீது பள்ளிப்படைக் கோவில் கட்டுவதுதான் ஒரே வழி என்று தீர்மானித்தார்.

வரலாற்றில், அரசி எவருக்கும் பள்ளிப்படைக் கோவில் கட்டியதாகத் தகவல் இல்லை. அதை மாற்றும் வகையில் தனது சிற்றன்னைக்காகப் பள்ளிப்படைக் கோவிலைக் கட்ட மன்னர் ராஜேந்திரன் ஏற்பாடு செய்தார்.

பஞ்சவன்மாதேவி உடல் எரியூட்டப்பட்ட பின்னர், அவரது அஸ்தி ஒரு கலசத்தில் சேகரிக்கப்பட்டு, அந்தக் கலசம், பழையாறை அருகே முடிகொண்ட சோழபுரம் (பட்டீஸ்வரம்) என்ற இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில், வயல்களுக்கு நடுவே உள்ள அமைதியான இடத்தில் வைக்கப்பட்டு, அங்கே பஞ்சவன்மாதேவி நினைவாகப் பள்ளிப்படைக் கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவிலில் நாள்தோறும் வழிபாடு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் மன்னர் ராஜேந்திரன் செய்தார். தினமும் பூஜை நடத்துவதற்காக 5 ஓதுவார்கள், மத்தளம் வாசிப்பவர்கள் 6 பேர், ஒரு பிடாரன், சைவ பிராமணர் ஒருவர், கணக்கு வழக்குகளைப் பார்ப்பவர் ஒருவர், பொருளாளர் ஒருவர், காவலர் ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான பணிகள், கொடுக்க வேண்டிய ஊதியம் ஆகியவை அந்தக் கோவில் கல்வெட்டில் பதிக்கப்பட்டது. கோவிலில், காலை நேரம் 8 விளக்குகளும், மதியம் 8 விளக்குகளும், அந்தி சாயும் நேரம் 16 விளக்குகளும், இரவில் 8 கை விளக்குகளுடன் 2 தீப்பந்தங்களும் ஏற்றப்பட வேண்டும் என்பதும் கல்வெட்டில் எழுதப்பட்டது. விளக்குகளை ஏற்றுவதற்கான எண்ணெய் அளவு விவரமும் அதில் குறிப்பிடப்பட்டது. கோவிலை நிர்வகிப்பதற்காக அறக்கட்டளை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பெயர் விவரமும் கோவில் கல்வெட்டில் காணப்படுகிறது.

ராஜேந்திரன் மற்றும் அவரது சிற்றன்னை பிறந்த நட்சத்திரமான திருவாதிரை நாளில் விஷேச பூஜை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது சாமிக்குப் படைக்க வேண்டிய உணவு வகைகள் என்ன என்பதும் கல்வெட்டில் கூறப்பட்டு இருக்கிறது. பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைக் கோவில், அளவில் சிறியதுதான். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தாய்ப்பாசத்திற்காகக் கட்டப்பட்ட ஒரே கோவில் என்பதால், அதன் உள்ளே நுழைந்ததும் ஒருவிதமான உணர்ச்சி நம்மை ஆட்கொள்கிறது.

கோவிலைச் சுற்றி, செங்கல்லால் கட்டப்பட்ட உயர்ந்த மதில் சுவர் இருக்கிறது. கோவிலின் முன்பகுதியில், 3 அடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

ராஜகோபுரத்தைத் தாண்டிச் சென்றால், முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவை உள்ளன. கருங்கல்லால் எழுப்பப்பட்ட கோவில் மீது, சுதையால் ஆன சிறிய விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் பக்கவாட்டுச் சுவர்களில், விநாயகர், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகிய தெய்வச் சிலைகள் காணப்படுகின்றன.

மகாமண்டபத்தில், சூரியன், முருகன், விநாயகர் ஆகியோர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அர்த்த மண்டபத்தின் தென் பகுதியில், விமலநாயகி என்ற பெயரில் தாயார் சன்னதி உள்ளது. கருவறையில் உள்ள மூலவர், 'பஞ்சவன்மாதேவி ஈஸ்வரத்து மகாதேவர்' என்று அழைக்கப்படுகிறார்.

கருவறையைச் சுற்றிவர வெளிப்பிரகாரம் இருக்கிறது. ஆனால் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததாலும், கவனிப்பதற்கு ஆட்கள் இல்லை என்பதாலும், அந்தப் பிரகாரத்தில் ஆங்காங்கே செடிகள் முளைத்து, மேய்ச்சல் நிலம் போலக் காணப்படுகிறது. மன்னர் ராஜேந்திரன், பழையாறை நகருக்கு வரும்போதெல்லாம் தவறாமல் பஞ்சவன்மாதேவி கோவிலுக்குச் சென்று, தனது சிற்றன்னையை நினைத்து வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டார். அந்தக்காலத்தில் ஆரவாரத்துடனும், பரபரப்பாகவும் இயங்கிய பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைக் கோவில், இப்போது ஏகாந்தமாகக் காணப்படுகிறது.

தாய் அன்பைப் போற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தக்கோவில், தமிழர்களால் என்றென்றும் பாதுகாத்துப் பாராட்டப்பட வேண்டிய கோவில்களில் ஒன்று என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

மன்னர் ராஜேந்திரன் கட்டிய மற்ற கோவில்கள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

மேலும் செய்திகள்