< Back
சிறப்புக் கட்டுரைகள்
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு -  தரைமட்டமான தலைநகர்
சிறப்புக் கட்டுரைகள்

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - தரைமட்டமான தலைநகர்

தினத்தந்தி
|
19 March 2023 9:42 PM IST

பாண்டியர்களின் படையெடுப்பு, ஆங்கிலேயப் படைகளின் அட்டூழியம் ஆகியவை காரணமாக, கங்கைகொண்ட சோழபுரம் நகரம், அங்கு இருந்த சோழ மன்னர்களின் அரண்மனைகள், வணிக வளாகங்கள், பொதுமக்களின் வீடுகள் ஆகிய அனைத்தும் தரைமட்டமாகி விட்டன.

மன்னர் ராஜேந்திரன் காலத்தில், கங்கைகொண்ட சோழபுரம் நகருக்கு இருந்த பல பெருமைகளுள் ஒன்று, எதிரிகளின் எந்த ஒரு படையெடுப்பையும் சந்திக்காத தலைநகர் என்பது ஆகும்.

ராஜேந்திரன் ஏராளமான நாடுகள் மீது படையெடுத்துச் சென்று அத்தனைப் போர்களிலும் வெற்றி பெற்றார். அவரது காலத்தில் எந்த நாட்டு மன்னருக்கும், கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லை என்றபோதிலும், பல மன்னர்களின் கோபம், நீருபூத்த நெருப்பாக இருந்தது.

பாண்டியர்கள், சேரர்கள், இலங்கை மற்றும் சாளுக்கிய தேசங்களின் ஆட்சியாளர்கள் ஆகிய அனைவரும் போர்களில் தோற்ற காரணத்தால், சோழர்களைப் பழிவாங்குவதற்கான காலத்தை எதிர்நோக்கி இருந்தார்கள்.

ராஜேந்திரன் மறைவுக்குப் பிறகு, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அவரது மகன்கள் காலத்திலும், பாண்டியர்கள், சாளுக்கியர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளானதால், குறிப்பாக பாண்டியர்கள் கோபத்தின் உச்சியில் இருந்தனர்.

சோழர்கள் வழியில் வந்த மூன்றாம் குலோத்துங்கன், பாண்டிய நாடு மீது மூன்று முறை போர் தொடுத்து பெரும் அழிவை ஏற்படுத்தினார். மதுரை நகரை அழித்த அவர், அங்கு கழுதையை வைத்து ஏர் உழுவித்து கவடி (வெள் வரகு) விதைத்தார். அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1216-ம் ஆண்டு மாறவர்ம சுந்தரபாண்டியன், பாண்டிய தேசத்தில் அரியணை ஏறினார். மூன்றாம் குலோத்துங்கன் நிகழ்த்திய நாசவேலைகளுக்குப் பழிதீர்க்கும் விதமாக அவர், 1219-ம் ஆண்டு சோழ நாட்டின் மீது படையெடுத்தார்.

அப்போது சோழ மன்னராக இருந்த மூன்றாம் ராஜராஜனை வென்ற அவர், சோழர்களின் பழைய தலைநகர்களான உறையூர், தஞ்சை ஆகியவற்றை அழித்து சேதப்படுத்தினார். அப்போது கங்கைகொண்ட சோழபுரம் நகரும் பாதிப்புக்கு உள்ளானது.

மூன்றாம் ராஜராஜனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில், அதாவது 1279-ம் ஆண்டு, அப்போது பாண்டிய மன்னராக இருந்த மாறவர்மன் குலசேகரன், சோழ தேசம் மீது போர் தொடுத்தார்.

கன்னனூர் என்ற இடத்தில் நடந்த போரில், மூன்றாம் ராஜேந்திரன் கொல்லப்பட்டார். தலைநகர் கங்கைகொண்ட சோழபுரம் மேலும் அழிவைச் சந்தித்தது.

மூன்றாம் ராஜேந்திரனுக்குப் பிறகு வாரிசு இல்லாததால், 450 ஆண்டுகளாக நீடித்த சோழ வம்சம் முடிவுக்கு வந்தது.

சோழ தேசம், பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. 1310-ம் ஆண்டு தமிழகத்தில் மாலிக்காபூரின் படையெடுப்பு காரணமாக ஓர் ஆண்டு முழுவதும் குழப்பமான நிலை நீடித்தது. அப்போது பாண்டியர்களின் ஆட்சிப் பிரதேசமும் குறுகிவிட்டது. அவர்கள், கங்கைகொண்ட சோழபுரம் நகரை கண்டுகொள்ளவில்லை. இதனால் அந்த நகர், தானாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

1365-ம் ஆண்டு விஜயநகர மன்னர் குமார கம்பனா, தமிழகம் மீது படையெடுத்து ராமேசுவரம் வரை உள்ள பகுதிகளைக் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, 16-ம் நூற்றாண்டில், உடையார்பாளையம் பாளையக்காரர்கள் வசம் கங்கைகொண்ட சோழபுரம் ஒப்படைக்கப்பட்டது.

1765-ம் ஆண்டு, ஆற்காடு நவாப், ஆங்கிலேயப் படை உதவியுடன் கங்கைகொண்ட சோழபுரம் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது ஆங்கிலேயப் படையினர், கங்கைகொண்ட சோழீச்சரம் கோவிலைத் தங்களது ராணுவ முகாமாகப் பயன்படுத்தி, கோவிலுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தினார்கள்.

1836-ம் ஆண்டு, கொள்ளிடம் ஆற்றில் அணை கட்டுவதற்காக ஆங்கிலேயர்கள், கங்கைகொண்ட சோழீச்சரம் கோவிலின் மதில் சுவர், கோவில் கோபுரம் ஆகியவற்றில் இருந்த கற்களை வெடி வைத்து தகர்த்து எடுத்துக் கொண்டார்கள். கோவில் கருவறையும், அதன் மீது கட்டப்பட்ட உயரமான விமானமும் மட்டும் எந்த சேதாரத்திற்கும் ஆட்படாமல் தப்பின.

பாண்டியர்களின் படையெடுப்பு, ஆங்கிலேயப் படைகளின் அட்டூழியம் ஆகியவை காரணமாக, கங்கைகொண்ட சோழபுரம் நகரம், அங்கு இருந்த சோழ மன்னர்களின் அரண்மனைகள், வணிக வளாகங்கள், பொதுமக்களின் வீடுகள் ஆகிய அனைத்தும் தரைமட்டமாகி விட்டன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கங்கைகொண்ட சோழபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் சில குடியிருப்புகள் தோன்றின. அங்கே வீடுகளைக் கட்டியவர்கள், சோழர்களின் அரண்மனைகள் மற்றும் தலைநகரில் சிதறிக் கிடந்த செங்கற்களை எடுத்துச் சென்று பயன்படுத்தினார்கள். அப்போது ஒரு வண்டிச் செங்கல் நான்கு அணா என்ற விலைக்கு விற்கப்பட்டது. அந்தப் பகுதியில் செங்கல் சூளையே தேவை இல்லை என்ற அளவுக்கு, தலைநகரில் சிதறிக் கிடந்த செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், தலைநகர் இருந்த சுவடு முற்றிலும் அழிக்கப்பட்டது.

சோழ மன்னர்களின் வரலாற்றில், 254 ஆண்டுகள் சீரோடும் சிறப்போடும் பரபரப்பான தலைநகரமாக இயங்கிய கங்கை கொண்ட சோழபுரம் இப்போது எப்படி இருக்கிறது?

கொள்ளிடம் நதியின் வடகரையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர் அருகே, கங்கை கொண்ட சோழபுரம் என்று ஒரு சிற்றூர் அடையாளம் காண்பிக்கப்படுகிறது. ஆனால், அதுவல்ல மன்னர் ராஜேந்திரன் கட்டிய தலைநகரம்.

வாஸ்து சாஸ்திர விதிகளுடன், பிரபல கட்டடக்கலை நிபுணர்களின் ஆலோசனைப்படி நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்டமான நகரம் இப்போது எங்கே?

ராஜேந்திரனுக்குப் பிறகு, வழி வழியாக அவரது வாரிசுகளாகத் தோன்றிய 14 மன்னர்கள் ஒவ்வொருவரும் முடிசூட்டிக் கொண்டு, கி.பி.1279-ம் ஆண்டு வரை, 254 ஆண்டுகள் வாழ்ந்த அரண்மனைகள் எங்கே?

அரண்மனைக் கட்டடங்களைச் சுற்றி, உட்படை வீட்டு மதில் என்ற பெயரில் 6 அடி உயரத்தில், ஒரு மைல் சுற்றளவில் பாதுகாப்புடன் கட்டப்பட்ட மதில் சுவர்கள் எங்கே?

6 மைல் நீளம், 6 மைல் அகலம் என்ற அளவில், நகரைச் சுற்றிலும் வெளிப்புறத்தில் கட்டப்பட்டு, 'ராஜேந்திர சோழன் மதில்' என்ற பெயரைப் பெற்ற மிகப்பெரிய கோட்டைச் சுவர் எங்கே?

நகரின் உட்புறத்தில், கிழக்கு-மேற்காகவும், வடக்குத்-தெற்காகவும் வரிசை வரிசையாக அமைக்கப்பட்ட வீதிகள் எங்கே?

ஒவ்வொரு வீதியிலும், முக்கியப் பிரமுகர்கள் வசிப்பதற்காகக் கட்டப்பட்ட வீடுகளும் எங்கே?

48 அடி அகலமான வீதியில், 24 மணி நேரமும் இயங்கிய மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் எங்கே?

திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவர், மூவர் உலா பாடிய ஒட்டக்கூத்தர், கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார், இரண்டாம் குலோத்துங்கன் அரசவையில் முதல் அமைச்சராக இருந்தவரும், பெரிய புராணம் பாடியவருமான சேக்கிழார் போன்ற புகழ் மிக்கப் புலவர்கள் நடமாடிய இடங்களும், அவர்கள் தங்களது பாடல்களை அரங்கேற்றிய அவைகளும் எங்கே?

கங்கை வரை உள்ள நாடுகளிலும், கடல் கடந்து கீழ்த்திசையில் உள்ள நாடுகளிலும் புலிக்கொடியைப் பறக்கவிட்ட வீரமிக்க படைத் தளபதிகளின் வீடுகளும், அவர்கள் மிடுக்குடன் உலாவிய வீதிகளும் எங்கே?

லட்சக்கணக்கான குதிரைகள், யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கொட்டடிகள் எங்கே?

போருக்குத் தேவையான ஆயுதங்களை இரவு பகலாகச் செய்து கொடுத்த கம்மாளார்களின் தொழிற்கூடங்கள் எங்கே?

இப்போது வனாந்தர பூமியாக வெட்ட வெளியாகக் காட்சி அளிக்கும் அந்த இடத்தில் நின்று கொண்டு, இதுபோன்ற வினாக்களை எழுப்பினால், எந்தத் திசையில் இருந்தும் அவற்றுக்குப் பதில் வராது.

அந்தக் கேள்விகளை எதிரொலியாக நம்மிடம் திருப்பி அனுப்பும் வகையிலான குட்டிச் சுவர்கள்கூட அங்கே இல்லை. பரிதாபமாகக் காணப்படும் அந்தப் பரந்த பூமி, நமது கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகிறது.

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னதமான தலைநகர் கங்கை கொண்ட சோழபுரம் அங்கே இருந்தது என்பதற்கு அடையாளமாக, மன்னர் ராஜேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழீச்சரம் கோவில், சோக வரலாற்றைச் சுமந்தபடி தனிமையில் நின்று கொண்டு இருக்கிறது.

16 மைல் நீளம், 3 மைல் அகலம் கொண்ட 'சோழகங்கம்' என்ற ஏரி, 'பொன்னேரி' என்ற பெயருடன், எந்த நேரமும் மரணிக்கலாம் என்ற பரிதாப நிலையில் உள்ளது. கோவில் மற்றும் ஏரி ஆகிய இரண்டு மட்டுமே, ஆயிரம் ஆண்டு அற்புத சாதனைகளுக்கு மவுன சாட்சியாகக் காட்சியளித்துக் கொண்டு இருக்கின்றன.

கோவிலில் இருந்து 3 கல் தொலைவில் உள்ள மாளிகைமேடு என்ற இடத்தில், 1980-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் தோண்டிப் பார்த்து, மன்னர் ராஜேந்திரனும் அவரது வாரிசுகளும் குடியிருந்த அரண்மனைக் கட்டடங்களின் எச்சத்தை வெளிப்படுத்தினார்கள். கம்பீரமான அரண்மனைக் கட்டடங்களின் அடிப்பகுதிச் சுவர்கள் மட்டும் அங்கே ஏக்கத்துடன் எட்டிப்பார்த்துக் கொண்டு இருக்கின்றன.

ஏறத்தாழ 2 நூற்றாண்டுகளாக மனித சஞ்சாரமே இல்லாத பூமியாக இருந்த கங்கைகொண்ட சோழபுரம், இப்போது சில ஆண்டுகளாக மீண்டும் புகழ் வெளிச்சத்தைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது.

மன்னர் ராஜேந்திரனின் பிறந்த நாள், ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததும் இத்தகைய நிலைக்கு முக்கிய காரணம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் ராஜேந்திரன் நிகழ்த்திய அபார சாதனைகள் பற்றிய ஆச்சரியமான தகவல்களை வருங்கால சந்ததியினருக்குப் பத்திரமாகக் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை.

மேலும் செய்திகள்