கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - உயிர் பெற்ற உன்னதச் சிற்பங்கள்
|கங்கை கொண்ட சோழீச்சரத்தில் உள்ள தெய்வச் சிற்பங்கள், அழகை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அல்லாமல், ஆன்மிகம் மற்றும் மதக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
"தஞ்சைப் பெரிய கோவிலில் காணமுடியாத அற்புதமான சிற்பக்கலைப் படைப்புகள், கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலில் அமைந்து இருக்கின்றன. இங்குள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை" என்று தொல்பொருள் ஆய்வாளர் நடன. காசிநாதன் தெரிவித்து இருக்கிறார்.
"கங்கை கொண்ட சோழீச்சரம் கோவில் சிற்பங்கள், உயிரோட்டமும், கலை அழகும் கொண்டு, மனதைக் கவரும் வண்ணம் திகழ்கின்றன" என்பது ஆய்வாளர் இரா. நாகசாமியின் கருத்து.கங்கை கொண்ட சோழீச்சரம் கோவில் கட்டுமானத்தின் சிறப்பு, கட்டடக்கலையின் உச்சம் என்றால், அங்குள்ள சிற்பங்கள் அனைத்தும், சிற்பக்கலை நேர்த்தியில் முதன்மையானவை என்பதைப் பறைசாற்றுகின்றன.
சிற்பக்கலை, பல்லவர்கள் வழியாகச் சோழர்களுக்குக் கிடைத்தது என்றபோதிலும், சோழர்களின் சிற்பங்கள், பல்லவர் காலச் சிற்பங்களை விட நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டு, உருவங்களின் அளவிலும், தோற்றத்திலும் உயிருடன் இருப்பதைப் போன்ற பிம்பத்தை அளிக்கின்றன.
கங்கை கொண்ட சோழீச்சரத்தில் உள்ள தெய்வச் சிற்பங்கள், அழகை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அல்லாமல், ஆன்மிகம் மற்றும் மதக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
இங்குள்ள சிற்பங்களைப் படைத்த சிற்பிகள், தியான மந்திரங்கள், ரிஷிக்கள் தெரிவித்த கருத்துகள், புராணத் தகவல்கள் ஆகியவற்றை மனதில் உள்வாங்கி, அனைத்து லட்சணங்களுடன் அவற்றை உருவாக்கி இருக்கிறார்கள். கூர்மையான நாசி, மெலிந்த இடை, நிறைந்த மார்பு, அகலமான இடுப்பு, நீளமான விரல்கள், உணர்ச்சிகரமான கண்கள் போன்றவை இந்தச் சிற்பங்களுக்கு உயிரோட்டத்தை அளிக்கின்றன.
உடலுக்கு 256 அளவுகள் இருப்பதாகவும், நாசிக்கு மட்டும் 9 அளவுகள் உண்டு என்றும் சொல்கிறது, சிற்ப சாஸ்திரம். இவை அப்படியே கங்கை கொண்ட சோழீச்சரம் கோவில் சிற்பங்களில் எடுத்தாளப்பட்டு இருக்கின்றன. இங்குள்ள கலை அழகு மிகுந்த சிற்பங்களில் சிலவற்றை மட்டும் இந்தத் தொடரில் பார்க்கலாம். கருவறையில் உள்ள 13 அடி 4 அங்குல உயர லிங்கம், ஒரே கல்லால் உருவாக்கப்பட்டு, பிரமிப்புடன் காட்சி அளிக்கிறது.
கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலில் உள்ளவற்றில், கலைச்சிறப்புடன் சில மர்மமான தகவல்களை உள்ளடக்கி இருப்பது, கோவிலின் வடபுற வாயில் அருகே இருக்கும் சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி சிற்பத்தொகுதி.
சண்டேசுவரரின் புராணத்தைப் பாடிய சேக்கிழார்,
"நாம் உண்டகலமும் உடுப்பனவும்
சூடுவனவும் உனக்காகச்
சண்டீசனுமாம் பதந் தந்தோம்"
என்று சண்டீசுவரருக்கு சிவன் வரம் கொடுத்ததாகத் தெரிவித்து இருக்கிறார்.
சிவனால் ஆட்கொள்ளப்பட்ட சண்டேசுவரரின் புராண நிகழ்வுகள், 9 சிற்பத் தொகுதியாக இங்கே செதுக்கப்பட்டு இருக்கின்றன. இதில் உள்ள சிவனின் தலை அலங்காரமும், பார்வதியின் தோற்றமும் வேறு எங்குமே பார்க்க முடியாதது. புராணத்திற்கும் மேலாக இந்தச் சிற்பம், மறைமுகமாக வேறு சில வியப்பான செய்தி களையும் சொல்கிறது.
இங்கே சண்டேசுவரராகச் சித்தரிக்கப்பட்டு இருப்பவர், உண்மையில் சண்டேசுவரர் அல்ல. அந்தச் சிற்பம், மன்னர் ராஜேந்திரனின் உருவம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
சிவனால் மலர் சூட்டப்படும் உருவம், சாதாரண மனிதராகக் காட்சிப்படுத்தப்படவில்லை. மன்னருக்கான அலங்காரம், அணிகலன்களுடன் இருப்பதால், அந்த உருவம் மன்னர் ராஜேந்திரன் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என்கிறார்கள், ஆய்வாளர்கள்.
மன்னர் ராஜேந்திரனின் அனுமதியைப் பெற்றோ, அல்லது அவர் மீது கொண்ட அபிமானம் காரணமாகவோ, சண்டேசுவரர் உருவத்துக்குப் பதிலாக, மன்னர் ராஜேந்திரனின் உருவத்தை சிற்பி செதுக்கிவிட்டார் என்பது ஆய்வாளர்கள் சொல்லும் தகவல்.
அந்த உருவம் சண்டேசுவரர் அல்ல என்றால், கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலில் சண்டேசுவரர் சிலை எங்கே இருக்கிறது? இதில்தான் சூட்சுமமான சில தகவல்கள் புதைந்து கிடக்கின்றன.
அனைத்து சிவாலயங்களிலும், சிவன் சன்னதியை ஒட்டியவாறு அதன் வடபுறத்தில், சிறிய அளவில் சண்டேசுவரர் சன்னதி இருக்கும்.ஆனால், கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலின் வடபுற வாயிலில் இருந்து சில அடி தொலைவில் சண்டேசுவரர் சன்னதி தனித்து நிற்கிறது. 11.2 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலம், என்ற அமைப்பில், அளவில் பெரியதாக இந்தச் சன்னதி கட்டப்பட்டு இருப்பதும் வினோதமாக உள்ளது.
சன்னதியின் மேற்கு மற்றும் கிழக்குப் பக்கத்து சுவர்களில், ஜன்னல் போன்ற பெரிய இடைவெளி உருவாக்கப்பட்டு இருக்கிறது.அந்தச் சன்னதியில் நின்று சண்டேசுவரை வணங்கும் பக்தரை, தானும் வணங்க வேண்டும் என்று மன்னர் ராஜேந்திரன் விரும்பினார் என்றும், இதன் காரணமாக, சற்றுத் தொலைவில் இருக்கும் சிவனால் மாலை சூட்டப்படும் மன்னர் ராஜேந்திரன் சிலையின் பார்வை, சண்டேசுவரர் சன்னதி சுவர் இடைவெளியின் வழியாக வந்து, சன்னதியில் நிற்கும் பக்தரை நோக்கும் வண்ணம் இந்தக் கட்டட அமைப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
சண்டேசுவரர் சிற்பத்தொகுதி மூலம், இவ்வளவு உள்ளடக்கையான தகவல்களை மன்னர் ராஜேந்திரன், சூசகமாக வெளிப்படுத்தி இருப்பதாகச் சொல்லப்படும் தகவல் ஆச்சரியம் அளிக்கிறது. நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்தச் சிற்பத்தொகுதி, கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக, உலகப்புகழ் பெற்றுவிட்டது.
கோவிலின் வட திசையில் உள்ள சன்னதியில் மகிசாசூரனை வதம் செய்யும் கோலத்தில், 20 திருக்கரங்களுடன் இருக்கும் துர்க்கை சிற்பம் நிகரில்லாத அழகைக் கொண்டது. கருவறைக்குச் செல்லும் தெற்குப்புற வாயில் படிக்கட்டு அருகே, அமைக்கப்பட்ட லட்சுமி தேவியின் உருவம், மிகச்சிறந்த சிற்பங்களில் ஒன்று.
கமல பீடத்தில், பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து இருக்கும் லட்சுமி, இடுப்பில் இருந்து கணுக்கால் வரை நீண்ட ஆடை, கழுத்தில் ஆரம், இடுப்பில் மேகலை, மார்பில் கச்சை, அதன் மேல் அணிகலன்கள், காதுகளில் வட்டத் தோடுகள், தலையில் மகுடம், கைகளில் வளையல்கள் ஆகியவற்றுடன் காட்சி அளிக்கிறார்.
இந்தச் சிற்பத்தின் மேல் பகுதியில், முடிந்த கொண்டையுடன், மண்டியிட்டவாறு மன்னர் ராஜேந்திரன், லிங்கத்தை வணங்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.
கோவிலின் வடபுற வாயில் அருகே, சண்டேசுவரர் சிற்பத் தொகுதிக்கு நேர் எதிரே, கமல பீடத்தில் அமர்ந்த நிலையில் இருக்கும் சரசுவதி சிலையின் நான்கு கரங்களில், ஒரு கரத்தில் ருத்திராட்ச மாலை, மற்றொரு கரத்தில் அமிர்த கலசம், முன் கரத்தில் ஏட்டுச் சுவடி, வலது முன் கரத்தில் ஞான முத்திரை ஆகியவை காணப்படுகின்றன. தலையில் அழகிய மகுடம், கழுத்தில் எழிலான ஆபரணங்கள், கணுக்கால் வரையிலான ஆடை ஆகியவையும் செதுக்கப்பட்டு இருக்கின்றன.
கோவிலின் தென்புறச் சுவரில் இருக்கும் உமையொரு பாகனின் சிலை, அற்புதமான வடிவைக் கொண்டது. ஒரு எருதின் மீது சாய்ந்த நிலையில் ஈசன் காட்சி தருகிறார். அவரது வலப்பக்கம் ஆணாகவும், இடது பக்கம் பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆணுக்கு உரிய கம்பீரமும், பெண்ணுக்கு உரிய நளினமும் ஒரே வடிவத்தில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
ஆணைவிட பெண், உயரம் சற்றுக் குறைவானவர் என்ற நிலையும் மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. கொடி மரம் அருகே இருக்கும் சுதைப் பூச்சு கொண்ட பிரமாண்ட நந்தி, சூரிய கதிரைத் தாங்கி, 160 அடி தொலைவில் உள்ள கருவறை வரை வெளிச்சத்தைப் பாய்ச்சும் அதிசயத்தைக் கண்டு வியக்கலாம். கோவிலின் பல இடங்களிலும் உள்ள, பிரமாண்டமான 17 துவாரபாலகர் சிலைகள், நம்மை மெய்மறக்கச் செய்யும்.
அரண் - ஹரி இணைந்த உருவம், ஆடல்வல்ல பெருமானின் நடனச் சிற்பம், அந்த நடனத்தை ரசிக்கும் காரைக்கால் அம்மையார், நர்த்தனம் ஆடும் கணபதி, முருகன், துர்க்கை, பிரம்மா உள்ளிட்ட அனைத்துச் சிற்பங்களும் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன.
அழகான செப்புத் திருமேனிகளும், கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலில் காணப்படுகின்றன. இவற்றில், 107 சென்டிமீட்டர் உயரம் கொண்ட முருகன் சிலையும், சோமாஸ்கந்தர் சிலையும் ஒப்பற்றவை. வலது மேல் கரத்தில் சக்தி, இடது மேல் கரத்தில் சேவல், வலது கீழ்க்கரத்தில் வாள், இடது கீழ்க்கரத்தில் கேடயம் ஆகியவற்றுடன் கமல பீடத்தில் நிற்கும் முருகனின் கோலம் அரிதான ஒன்று.
சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதியில் இருக்கும் சிவன், பார்வதி உருவங்கள் வேறு எங்குமே இல்லாத வகையில், அளவில் மிகப்பெரியவை. கவர்ச்சியான புன்னகையுடன் போகேஸ்வரி, நான்கு கரங்களுடன் துர்க்கை, நடராஜர், ரிஷபாந்தகர், நந்திகேஸ்வரர், சூலதேவர் ஆகியோரின் செப்புத் திருமேனிகளும் அழகுடன் காட்சி அளிக்கின்றன.
மன்னர் ராஜேந்திரன், இதுபோன்ற சிற்பங்களை அமைத்ததில் கவனம் செலுத்தியதோடு, தமிழகத்தின் பல பகுதிகளில், 25-க்கும் மேற்பட்ட கோவில்களையும் கட்டினார்.
அந்தக் கோவில்கள் எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது, தனது சிற்றன்னைக்காக அவர் கட்டிய கோவில்தான். பெற்ற தாயாருக்குக் கூட கோவில் கட்டாத ராஜேந்திரன், சிற்றன்னைக்குக் கோவில் கட்டிய வரலாறு, உணர்ச்சிகரமானது.