< Back
சிறப்புக் கட்டுரைகள்
கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - சோழர் படையில் 9 லட்சம் வீரர்கள் என்பது கட்டுக்கதையா?
சிறப்புக் கட்டுரைகள்

கங்கை கொண்ட சோழனின் ஆயிரம் ஆண்டு அதிசய வரலாறு - சோழர் படையில் 9 லட்சம் வீரர்கள் என்பது கட்டுக்கதையா?

தினத்தந்தி
|
29 Sept 2022 9:07 PM IST

கற்பனையில்கூட செய்ய முடியாத அசாத்தியமான செயல்களை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியவர்கள், மன்னர் ராஜராஜனும் அவரது மகன் ராஜேந்திரனும் ஆவார்கள்.

மேலைச்சாளுக்கிய மன்னர் சத்யாச்சரியனுடன் போர் செய்வதற்கு அவர்கள் செய்த ஏற்பாடுகள் மலைக்க வைக்கின்றன.

சத்யாச்சரியனின் தலைநகர் 'மண்ணைக்கடக்கம்' என்ற 'மான்யகேடம்', தஞ்சையில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

தஞ்சையில் இருந்து கால்நடையாகப் புறப்பட்டால், அந்த நகரைச் சென்றடைய குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகிவிடும். போர் முடிந்து திரும்பிவர அதே காலம் ஆகும்.

அத்தனை நாட்களுக்கும், படை பட்டாளங்களுக்குத் தேவையான அனைத்தும் எந்தச் சிக்கலும் இல்லாமல் தயார் செய்யப்பட வேண்டும்.

9 லட்சம் காலாட்படை வீரர்கள்.

60 ஆயிரம் குதிரைச் சேவகர்கள்.

நூற்றுக்கணக்கான யானைகள்.

மன்னரைக் கவனித்துக் கொள்ளும் விஷேச பரிவாரங்கள்.

படை வீரர்களுக்கும், குதிரைகள் மற்றும் யானைகளுக்கும் ஒரு மாதத்திற்கும் மேலான காலத்திற்குத் தேவையான உணவுகள்.

இந்த உணவுகளைத் தயார் செய்து வழங்கும் பரிசாரகர்கள்.

உணவுப் பொருள்களையும், பரிசாரகர்களையும் ஏற்றிச்செல்ல நூற்றுக்கணக்கான கூண்டு வண்டிகள்.

காயம் அடையும் போர் வீரர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து தரும் மருத்துவர்கள் பலர்.

இப்படிப்பட்ட மகத்தான பட்டாளத்தை ஒருங்கிணைத்து, வெகு தூரம் சென்று எதிரியை சந்திப்பதற்குத் தேவையான திட்டமிடலில் ராஜராஜனும், ராஜேந்திரனும் கைதேர்ந்தவர்கள்.

மேலைச்சாளுக்கிய தேசம் மீதான படையெடுப்பில் 9 லட்சம் வீரர்கள் கலந்து கொண்டார்கள் என்ற எண்ணிக்கை கற்பனையான தகவலாக இருக்குமோ என்று சிலர் நினைப்பது உண்டு.

மன்னர் ராஜராஜன் காலத்தில் மக்கள் தொகையே குறைவாகத்தான் இருந்து இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் 9 லட்சம் வீரர்களுடன் சென்றார் என்பதை எவ்வாறு நம்புவது என்று அவர்கள் கேள்வி எழுப்புவார்கள்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் மவுரிய பேரரசர் அசோகர் நடத்திய கலிங்கப் போரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 1½ லட்சம் பேர் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் எனக் கூறப்படுவதை ஏற்பவர்கள், மன்னர் ராஜராஜன் 9 லட்சம் வீரர்களுடன் சென்றார் என்பதை ஏற்க மறுப்பது ஆச்சரியம்தான்.

மன்னர் ராஜராஜன் 9 லட்சம் வீரர்களுடன் சென்றார் என்ற எண்ணிக்கையை சோழ மன்னர்களோ அல்லது அவர்களின் செப்பேடுகளோ சொல்லவில்லை.

சாளுக்கிய மன்னர் சத்யாச்சரியன் காலத்தில், அந்த நாட்டில் வைக்கப்பட்ட கல்வெட்டு இந்தத் தகவலைக் கூறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் பங்காபூர் வட்டத்தில் உள்ள ஹொட்டூர் என்ற இடத்தில், மாண்ட வீரன் ஒருவனுக்கு நடுகல் வைக்கப்பட்டு இருக்கிறது.

அந்த நடுகல் சாசனத்தில், "பிலவங்க ஆண்டு சகம் 929 (கி.பி.1007) ராஜராஜ நித்யவிநோத ராஜேந்தர வித்யாதர சோழகுல திலகமுமான நூர்மடிச் சோழன் என்பவன் ஒன்பது நூறாயிரம் (ஒன்பது லட்சம்) படைவீரர்களுடன் தோனவூர் என்னும் இடத்தில் முகாமிட்டு அந்நாட்டினைச் சூறையாடி, பெண்கள், குழந்தைகள், பிராமணர்கள் ஆகியோரைக் கொன்றதோடு, சாதி நெறிமுறைகளுக்கு அப்பால் பெண்களைக் கவர்ந்து சென்றான். சாளுக்கிய குலத்திற்கு அணிகலனாகவும், தமிழக வீரர்களைக் கொல்பவனாகவும் விளங்குகின்ற பேரரசன் சத்யாச்சரியன், சோழனை ஓடச் செய்து அவன் கவர்ந்து சென்ற பொருட்பொதிகைகளைக் கைப்பற்றியதோடு தென்திசை நோக்கி வெற்றிப் பயணம் மேற்கொண்டான்" என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்தச் சாசனம் சோழ மன்னரை இழித்தும், சத்யாச்சரியனை உயர்த்தியும் காட்டுவதற்காக எழுதப்பட்டது என்றபோதிலும், மன்னர் ராஜராஜன் 9 லட்சம் வீரர்களுடன் வந்தார் என்பதை உறுதியாகக் கூறுகிறது.

அந்தக்காலத்தில் மன்னர்கள், தங்களின் காவலுக்கும், தலைநகரின் பாதுகாப்புக்கும் சிறிய அளவில் நிரந்தரமான படையை வைத்து இருப்பார்கள்.

போர் நடைபெறும் சமயம், படையில் வந்து சேரும்படி மக்களுக்கு மன்னர் அழைப்புவிடுப்பார். அதை ஏற்று ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து படையில் சேர்ந்து கொள்வார்கள்.

அப்போது விவசாயம் தவிர வேறு முக்கிய தொழில் கிடையாது. போரின்போது எதிரி நாட்டில் கொள்ளையடிக்கும் 'உரிமையும்' படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. எனவே, போர் நடைபெறும் சமயத்தில், உடல் தகுதியுள்ள அனைவரும் ஆர்வத்துடன் படையில் சேர்ந்து பணியாற்றுவார்கள். இதனாலேயே பேரரசர்களின் படையில் லட்சக்கணக்கானவர்கள் இடம்பெறுவது உண்டு.

8-ம் நூற்றாண்டுக்கு முன்னர் ராஷ்டிரகூட மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் சாளுக்கிய தேசம், ஒரே நாடாக இருந்தது. பின்னர் மேலைச்சாளுக்கியம், கீழைச்சாளுக்கியம் என்று இரு பகுதிகளாகப் பிரிந்தது.

வேங்கியைத் தலைநகராகக் கொண்ட கீழைச்சாளுக்கியத்துக்கு சோழர்களின் ஆதரவு இருந்தது. அத்துடன் மேலைச்சாளுக்கியத்தின் சில பகுதிகளை ராஜராஜன் கைப்பற்றி இருந்தார்.

தாங்கள் இழந்த பகுதிகளை மீட்க சத்யாச்சரியன் நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

பாண்டியநாடு, சேரநாடு, இலங்கை ஆகியவற்றைக் கைப்பற்றுவதில் ராஜராஜன் தீவிரமாக இருந்த நேரத்தைத் தேர்ந்து எடுத்த சத்யாச்சரியன், சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தார்.

அவரைத் தடுத்து நிறுத்துவதற்காக 9 லட்சம் வீரர்களுடன் ராஜராஜன் அங்கு புறப்பட்டுச் சென்றார். வழக்கம்போல இந்தப் படைக்கும் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

தோனவூர் என்ற இடத்தில் இரு படைகளுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடைபெற்றது.

(தோனவூர் என்ற நகரம் இப்போது பீஜப்பூர் மாவட்டம் பேஜ்வாடி தாலுகாவில் தோனூர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது).

பல நாட்களாக நீடித்த இந்தப் போரின்போது ஒரு நாள், யாரும் எதிர்பாராத அதிசய சம்பவம் நிகழ்ந்தது.

போர்க்களத்தில் இருந்த மன்னர் ராஜராஜன், திடீர் என்று தனது குதிரை மீது ஏறி, கையில் வாளை ஏந்திக் கொண்டு மேலை சாளுக்கியர்களின் படைகளுக்கு நடுவே ஆவேசமாகப் பாய்ந்து சென்றார்.

யாருடைய துணையும் இன்றி, எதிரிப் படைகளுக்கு நடுவே அவர் துணிந்து சென்றது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

போர்க்களத்தில் சத்யாச்சரியன், சோழப் படை வீரர்களைத் தாக்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்த ராஜராஜன் ஆத்திரம் அடைந்து, சத்யாச்சரியனை நேருக்கு நேர் சந்திக்க விரைந்து சென்றார். தனது குதிரையில் அமர்ந்தபடி ஓங்கிய வாளுடன் சென்ற ராஜராஜன், சத்யாச்சரியனை நெருங்கி அவரை நோக்கிப் பாய்ந்தார்.

தன்னுடன் மோதுவதற்காக ராஜராஜனே நேரடியாக வந்துவிட்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சத்யாச்சரியன் நிலைகுலைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட சத்யாச்சரியன் வாளை ஏந்தி, ராஜராஜனுடன் மோதினார்.

இருவருக்கும் இடையே கடுமையான வாள்சண்டை நடைபெற்றது. ராஜராஜனின் துணிச்சலைக் கண்டு அதிர்ந்து இருந்த சத்யாச்சரியன், அவருக்கு ஈடு கொடுக்க முடியாமல், யானை மீது ஏறி போர்க்களத்தில் இருந்து பின்வாங்கி ஓடினார்.

தொடர்ந்து நடைபெற்ற போரின்போது, சாளுக்கியர்களின் தளபதி கேசவன், சோழப் படைகளால் கைது செய்யப்பட்டார்.

மன்னரும் தளபதியும் இல்லாத சாளுக்கியப் படைகள் செய்வதறியாது திகைத்துப் பின்வாங்கின. ராஜராஜனும் அவரது படையினரும் அந்தப் படைகளை துங்கபத்திரா நதிக்கரை வரை விரட்டிச் சென்று தாக்கினார்கள்.

பல நாட்களாக நடைபெற்ற போர் காரணமாக சோழப் படை வீரர்கள் சோர்வு அடைந்து இருந்ததால், இனியும் போர் நடத்த வேண்டாம் என்று ராஜராஜன் கருதினார்.

மேலைச் சாளுக்கிய நகரங்களைச் சூறையாடிய ராஜராஜன், அங்கு இருந்த ஏராளமான செல்வங்களை அள்ளி வந்தார். (அங்கே கிடைத்த பொன்னையும் பொருளையும் கொண்டுவந்து, அவற்றைத் தஞ்சைப் பெரிய கோவில் கட்டுமானத்திற்கு ராஜராஜன் பயன்படுத்தினார் என்பது வரலாறு).

இந்தப் போரில் சோழப் படைகள் வெற்றி பெற்றாலும், ராஜராஜனும் அவரது மகன் ராஜேந்திரனும் துங்கபத்திரா நதியைக் கடந்து செல்லவில்லை.

இதனால் மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரமான மண்ணைக்கடக்கம் என்ற மான்யகேடத்தை (தற்போது இந்த நகர் மால்கெட் என்று வழங்கப்படுகிறது) சோழப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை.

போர் முடிந்து, கவலையுடன் தஞ்சை திரும்பிய மன்னர் ராஜராஜன், "மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரான மான்யகேடத்தைக் கைப்பற்றும் வரை கிரிகர விஹாரம் இல்லை" என்று சபதம் செய்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு இடையில்தான், ராஜேந்திரனை இளவரசராக அறிவிக்கும் விழா தஞ்சையில் தடபுடலாக நடந்தது.

அந்தப் பெருவிழா முடிந்து அனைவரும் மகிழ்ச்சிப் பெருக்குடன் கலைந்து சென்றனர். நாட்களும் மாதங்களும் வழக்கம்போல் நகர்ந்தன.

ஆனால், மான்யகேடத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக மன்னர் ராஜராஜன் தெரிவித்த சூளுரை விவகாரம், இளவரசர் ராஜேந்திரன் இதயத்தில் இருந்து கலைந்து செல்ல மறுத்தது.

தந்தையின் சபதத்தை உடனடியாக நிறைவேற்றும் வகையில், மேலைச் சாளுக்கியரின் தலைநகர் மான்யகேடத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதில் இளவரசர் ராஜேந்திரன் முனைப்பு காட்டத் தொடங்கினார்.

இளவரசராக முடிசூட்டப்பட்ட பிறகு நடைபெற்ற அந்த முதல் போரில் ராஜேந்திரன் மகத்தான வெற்றி பெற்றார்.

அந்தப் போரில் கிடைத்த வெற்றியை விவரமாகக் காணும் முன், இளம் பெண் ஒருவரின் கண் வீச்சில் தோற்று அவரிடம் ராஜேந்திரன் சரண் அடைந்தது எப்படி என்ற ருசிகரமான சம்பவம் பற்றிப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்