< Back
சிறப்புக் கட்டுரைகள்
தம்பதியர் இயக்கும் விசேஷ பேருந்து
சிறப்புக் கட்டுரைகள்

தம்பதியர் இயக்கும் விசேஷ பேருந்து

தினத்தந்தி
|
24 July 2022 7:47 PM IST

கேரள போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பேருந்து ஒன்றில் கணவன்-மனைவி இருவர் டிரைவர்-கண்டக்டராக பணி புரிகிறார்கள். அந்த பேருந்து வழக்கமான பேருந்துகளில் இருந்து மாறுபட்ட தோற்றத்தில் காட்சி அளிப்பதுதான் சிறப்பம்சம்.

பேருந்துக்குள் 6 சி.சி.டி.வி. கேமராக்கள், மியூசிக் சிஸ்டம், எமெர்ஜென்சி சுவிட்சுகள், ஆட்டோமெட்டிக் ஏர் பிரஷ்னர், குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மைகள் உள்பட நேர்த்தியான அலங்காரங்களும் இடம்பெற்று கவனம் ஈர்க்கின்றன.

இந்த பேருந்து பயணம் புதுமையான அனுபவத்தை கொடுப்பதாக அதில் பயணம் செய்த பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். பேருந்தில் பயணிக்கும் போதுமக்கள் அனைத்து சவுகரியங்களையும் பெற வேண்டும், அவர்களின் பயணம் இனிமையாக நிறைவடைய வேண்டும், அதற்கான சூழலை பேருந்துக்குள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அலங்கார வேலைப்பாடுகளை மேற்கொண்டதாக தம்பதியர் இருவரும் கூறுகிறார்கள்.

இதற்காக கேரள போக்குவரத்து கழகத்திடம் முறையான அனுமதி பெற்று தங்கள் சொந்த பணத்தை செலவழித்திருக்கிறார்கள். அதற்கு பலன் கிடைக்காமல் இல்லை. ஆலப்புழா பகுதியில் இயக்கப்படும் இந்த பேருந்து அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாக பரவி பலருடைய பாராட்டையும் பெற்றுள்ளது.

கிரி - தாரா எனப்படும் இந்த தம்பதியர் ஹரிபாட் டிப்போவில் பணி புரிகிறார்கள். இவர்களின் பணி தினமும் காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. ''தினமும் அதிகாலையில் 2 மணிக்கு டெப்போவை சென்றடைவோம். கிரி பேருந்தை சுத்தம் செய்வார். நான் அவருக்கு உதவி புரிவேன். பின்னர் அவர் பேருந்தை இயக்குவார். எங்கள் முதல் சவாரி 5.30 மணிக்கு தொடங்கும்'' என்கிறார், தாரா.

கிரி - தாரா இருவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். 2020-ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தபோது அவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. காதலை தொடர்ந்திருக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நல்ல வேலையில் சேர்ந்த பிறகு திருமணம் செய்து கொள்ள தீர்மானித்திருக்கிறார்கள். கேரள மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வில் பங்கேற்றனர். கிரி 2007-ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தாராவும் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பை பெற்றார். 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர்களின் திருமணம் நடந்தது.

மேலும் செய்திகள்