< Back
சிறப்புக் கட்டுரைகள்
சுதந்திர நாளில் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல்
சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திர நாளில் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல்

தினத்தந்தி
|
15 Aug 2022 5:21 PM IST

முதல் பிரதமரான நேருவுக்கு தமிழ்நாட்டில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்க செங்கோலைப் பற்றி பார்ப்போம்.

நம் இந்திய தேசம் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் பெற்றது. பலரது தியாகத்தால் கிடைத்த அந்த சுதந்திர நாள், இன்றோடு 75 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது. மகத்துவம் வாய்ந்த இந்நாளில், நாம் சுதந்திரம் பெற்ற அந்த நாளில், ஆங்கிலேயர்களிடம் இருந்து நம்மவர்களுக்கு ஆட்சி மாற்றம் வந்ததை அடையாளப்படுத்தும் விதமாக, முதல் பிரதமரான நேருவுக்கு தமிழ்நாட்டில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்க செங்கோலைப் பற்றி பார்ப்போம்.

இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்தவர், மவுண்ட் பேட்டன் பிரபு. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பாக நேருவை அழைத்த மவுண்ட் பேட்டன், "இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது?" என்று கேட்டார்.

திடீரென்று இப்படி கேட்டதும், நேருவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. குழப்பமடைந்த அவர், இதற்கான தீர்வை அறியும் வகையில் மூதறிஞர் ராஜாஜியை அணுகினார். அப்போது ராஜாஜி, "தமிழ்நாட்டில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்கு கொடுத்து ஆசிர்வதிப்பார். அதேபோல நாமும் ஒரு குருவின் மூலம் செங்கோல் பெற்று, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களிடம் வந்த ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தலாம்" என்று யோசனை தெரிவித்தார்.

அந்த யோசனையை நேருவும் ஏற்றுக்கொண்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தெரிவித்தார். அதன்படி இந்தியாவின் பழமையான சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது குருமகா சன்னிதானமாக இருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகரை தொடர்புகொண்ட ராஜாஜி, இந்தியாவின் ஆட்சி மாற்றத்திற்கான புண்ணிய சடங்குகளை செய்துதர கேட்டுக்கொண்டார்.

அந்த நேரத்தில் அம்பலவாண தேசிகர் கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்டார். இருப்பினும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பெருமை அளிக்கக்கூடிய அந்த நிகழ்வை செய்ய அவர் முன்வந்தார். அதற்காக சென்னையில் பிரபலமாக இருந்த நகைக்கடையில் சைவ சின்னம் பொறித்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோல் ஒன்றை தயாரித்து தரும்படி கேட்டுக்கொண்டார். அதன் அப்போதைய மதிப்பு ரூ.15 ஆயிரம் என்று சொல்லப்படுகிறது.

தான் காய்ச்சலில் அவதிப்பட்டதால், தனக்கு பதிலாக ஆதீனத்தின் கட்டளை சாமியாக இருந்த சடைச்சாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரானை, ஓதுவார்கள் மற்றும் நாதஸ்வர வித்வானுடன் டெல்லிக்கு அனுப்பினார். அவர்கள் டெல்லி செல்வதற்காக, ராஜாஜி தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி இரவு 11.45 மணி அளவில், சுதந்திரம் பெறுவதற்கான நிகழ்வு டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடந்தது. ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, சுதந்திர போராட்ட தியாகிகள், உயர் அதிகாரிகள் பலரும் சூழ்ந்திருந்தனர். அப்போது திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தின் 11 பாடல்களையும், ஓதுவாமூர்த்திகள் பாடினர். அந்த பதிகம் முடியும் தருணத்தில், மவுண்ட் பேட்டனிடம் ரிஷபம் வைத்த தங்க செங்கோலை, தம்பிரான் சுவாமிகள் கொடுத்துப் பெற்றார். பின்னர் அதன் மீது புனித நீர் தெளித்து இறைவனின் திருப்பெயரை உச்சரித்து ஆட்சி பொறுப்பினை ஏற்க உள்ள ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார். அப்போது டி.என் ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வரம் முழங்க, நேருவிற்கு திருநீற்றுப் பிரசாதமும், சந்தனமாலையும் அணிவிக்கப்பட்டது.

இந்த செங்கோல் தற்போது டெல்லி செங்கோட்டையில் உள்ள பரிசு பொருட்கள் இருக்கும் கண்காட்சி பகுதியில், திருவாவடுதுறை ஆதீனத்தின் சிறப்பினை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

75-வது சுதந்திர தின விழாவின் நிறைவை முன்னிட்டு, மேற்கண்ட நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருவாவடுதுறை ஆதீனத்தின் தற்போதைய 24-வது குரு மகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் விழா நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்