< Back
சிறப்புக் கட்டுரைகள்
வாழ்க்கையை முழுமையாக வாழ 20 வயதில் செய்ய வேண்டியவை
சிறப்புக் கட்டுரைகள்

வாழ்க்கையை முழுமையாக வாழ 20 வயதில் செய்ய வேண்டியவை

தினத்தந்தி
|
14 July 2022 9:19 PM IST

வயது என்பது வெறும் எண் மட்டுமே. முதுமையிலும் இளமை துடிப்போடு செயல்பட்டு பலரும் அதனை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் இளமை பருவத்தில் புதிய விஷயங்களை முயற்சித்து பார்ப்பதற்கு வயது தடையாக இருக்காது.

இளமை பருவத்தை பூர்த்தி செய்வதற்குள் திருமணம், குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு, தொழில், நிதி நிலைமை போன்ற பல்வேறு விஷயங்களை எதிர்கொண்டு குடும்ப வாழ்வியலுக்குள் முழுமையாக தங்களை அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். அந்த பந்தத்திற்குள் நுழைவதற்கு முன்பு இளமை பருவத்திற்கே உரித்தான வாழ்வியலையும், அவை கற்றுத்தரும் பாடங்களையும் பலரும் தவறவிட்டுவிடுகிறார்கள். வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கு 20 வயதில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கு...

தனிமை பயணம் மேற்கொள்ளுங்கள்

இளமை பருவ நாட்கள் பலவும் நண்பர்களுடன்தான் கழியும். குழுவாக ஒன்று சேர்ந்து சாகச பயணங்களை மேற்கொண்டு பலரும் பொழுதை போக்குவார்கள். அத்தகைய பயணங்களுக்கு நடுவே தனிமை பயணங்களை மேற்கொள்வதும் அவசியமானது. 20களின் பிற்பகுதியில் தொழில், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், மனதை தெளிவுபடுத்தவும், வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டத்தை வழங்கவும் தனிமை பயணம் உதவும். நெருக்கடியான காலகட்டத்தில் தன்னிச்சையாகவும், தைரியமாகவும் முடிவெடுக்கும் ஆற்றலையும் வழங்கும்.

வெவ்வேறு மொழிகளை பேச கற்றுக்கொள்ளுங்கள்

எந்த விஷயத்தையும் கற்றுக்கொள்வதற்கு வயது தடையில்லை. மொழிக்கும் இது பொருந்தும். 20 வயதில் இளமை துடிப்பும், சுறுசுறுப்பும், உற்சாகமும் குறையாமல் இருக்கும். எதையும் ஆர்வமாக கற்றுக்கொள்ளவும் மனம் தயாராக இருக்கும். உலக விஷயங்களை தெரிந்து கொள்ளவும், ஒவ்வொரு பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளவும் தொடர்பு சாதனமாக மொழி விளங்கும். அதனால் எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்வதற்கு தயக்கம் கொள்ளக்கூடாது. படிப்பை முடிக்கும்போதோ, எதிர்காலத்திலோ ஏதாவதொரு வகையில் கற்றுக்கொண்ட மொழி பயன்படலாம்.

முகாமிடுங்கள்

நண்பர்களுடன் குழுவாகவோ, தனியாகவோ வருடத்திற்கு ஒருமுறையாவது மலையேற்ற பயணங்களை மேற்கொள்ளுங்கள். வீடு, அலுவலகம் என இரண்டுவிதமான சூழலில் மட்டுமே வாழ்க்கையை நகர்த்துபவர்கள் அதில் இருந்து சில நாட்கள் விலகி இயற்கையுடன் ஒன்றிணைவதற்கு மலையேற்றம் உதவும். அமைதியான சூழல், சுத்தமான காற்று, என இயற்கை பின்னணியுடன் ஓர் இரவையாவது செலவிட வேண்டும். அங்கு முகாமிட்டு இரவில் தெளிவான வானத்தையும், அதில் மின்னும் நட்சத்திரங் களையும் ரசித்தபடி 'பயர் கேம்பிங்' எனப்படும் நெருப்பின் அரவணைப்பில் நண்பர்களுடன் உற்சாகமாக பொழுதை போக்கலாம். மனதிற்கு பிடித்தமான இசையை கேட்டு மகிழலாம்.

சாலை மார்க்கமாக செல்லுங்கள்

இருசக்கர வாகனத்தில் நீண்ட தூர சாலை பயணங்களை மேற்கொள்வதும் புது அனுபவத்தை கொடுக்கும். மனதில் தேங்கி இருக்கும் எல்லாவிதமான கவலைகளை போக்கவும். பதற்றமான மன நிலையில் இருந்து விடுபடவும் சாலை பயணங்கள் கைகொடுக்கும். 20களில் செய்யக்கூடிய முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. வருடத்திற்கு ஒருமுறையாவது தனியாகவோ, நண்பர்களுடனோ இருசக்கர வாகனத்தில் சாலை பயணம் மேற்கொள்ள மறக்காதீர்கள்.

ஆரோக்கியத்தை பேணுங்கள்

இளமையாக இருக்கும்போது பலரும் உடல் ஆரோக்கியம் மீது அக்கறை கொள்ளாமல் புறக்கணித்துவிட்டு, பின்பு வருந்துகிறார்கள். 20 வயதுக்கு பிறகு உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழத் தொடங்கும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும் வரை எந்த பிரச்சினையும் வெளியே தெரியாது. வயது அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய தொடங்கும். சிலருக்கு 30 வயதை நெருங்குவதற்குள்ளாகவே கடுமையான உடல்நல பிரச்சினைகள் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். அதனை தவிர்க்க இளம் வயதிலேயே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை மேற்கொள்வதும் அவசியமானது.

மேலும் செய்திகள்