< Back
சிறப்புக் கட்டுரைகள்
மூத்த தலைமுறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இளைய தலைமுறை
சிறப்புக் கட்டுரைகள்

மூத்த தலைமுறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இளைய தலைமுறை

தினத்தந்தி
|
24 Jan 2023 3:37 PM IST

இனிவரும் தலைமுறை ரசிகர்கள், போட்டி மனப்பான்மையை கைவிட்டு, மற்ற நடிகர்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, சமீபத்தில் விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகி தமிழ் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றன. இரண்டு படங்களின் ரசிகர்களும், தங்களுக்குப் பிடித்த நடிகரின் படம்தான் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இரண்டு படங்களுமே வணிக ரீதியாக தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களையும், கதை, காட்சியமைப்புகளின் அடிப்படையில் ரசிகர்களையும் வெகுவாக திருப்திப்படுத்தியிருப்பதாகவே சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பு ரசிகர்கள் மற்றொரு தரப்பு நடிகரின் படத்தை குறை கூறுவதும், இன்னொரு தரப்பினர் எங்களின் படம் தான் வசூலில் முன்னிலை என்று மார்தட்டிக் கொள்வதும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

இரண்டு பெரும் கதாநாயகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது, ஒரு சில நேரங்களில் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் சறுக்கலை ஏற்படுத்திவிடவும் வாய்ப்புண்டு. அதற்கு, படம் வெளியானதும் அந்தப் படங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பரவும் எதிர்மறையான விமர்சனங்களே முதல் காரணம். இந்த எதிர்மறை விமர்சனமானது, கதையின் அடிப்படையில் நியாயமாக அமைந்தால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அது தலைமுறை தலைமுறையாக ரசிகர்கள் இடையே நடைபெறும் ஈகோ பிரச்சினையின் அடிப்படையில் அமைந்தால், அது ஏதாவது ஒரு தரப்பை நஷ்டத்தை சந்திக்க வைத்து விடும்.

தமிழில் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து மொழி திரைப்படங்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் ஈகோ மோதல் என்பது கொஞ்சம் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்நாட்டைப் போல, தெலுங்கிலும் மகரசங்கராந்தியை முன்னிட்டு, இருபெரும் நடிகர்களான பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோரின் படங்கள் ஒரு நாள் இடைவெளியில் அடுத்தடுத்து வெளியாகின. இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் உள்ள பெரும் நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகியோரின் சமகாலத்திய நடிகர்கள்.

பாலகிருஷ்ணாவுக்கும், சிரஞ்சீவிக்கும் தெலுங்கில் சம அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தனித்தனியாக படம் வெளியாகும்போதே, தங்களுக்குப் பிடித்த நடிகரின் படத்தை பிரமாண்டமாக கொண்டாடும் இவர்களின் ரசிகர்கள், இந்த ஆண்டு இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியானதால், 'நீயா நானா' என்ற போட்டி மனப்பான்மைக்குள் குதித்து விட்டனர். சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பு ரசிகர்கள் மற்றொரு தரப்பு நடிகரின் படத்தை குறை கூறுவதும், இன்னொரு தரப்பினர் எங்களின் படம் தான் வசூலில் முன்னிலை என்று மார்தட்டிக்கொள்வதும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

ஆனால் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'வீர சிம்ஹா ரெட்டி' படமும், சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியான 'வால்தேர் வீரய்யா' திரைப்படமும், பிரமாண்ட வெற்றியையே பெற்றிருக்கின்றன. ரூ.110 கோடியில் தயாரிக்கப்பட்ட 'வீர சிம்ஹா ரெட்டி' படமும், ரூ.140 கோடியில் தயாரிக்கப்பட்ட 'வால்தேர் வீரய்யா' படமும் 10 நாட்களில் ரூ.150 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கின்றன. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே போட்டி மனப்பான்மையும், ஈகோ மோதலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ரசிகர்களின் சண்டையில், இரண்டு நடிகர்களும் பரம விரோதிகள் போல் மக்கள் மனதில் சித்தரிக்கப்படுவது சமுதாய நலனுக்கு ஏற்றதல்ல. அது வன்முறைக்கு வழிவகுத்துவிடும்.

தெலுங்கு ரசிகர்களின் இந்த மோதல் போக்கு பற்றி, பாலகிருஷ்ணாவின் குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறை நடிகராக வளர்ச்சியடைந்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் ஆகியோரிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் ராம்சரண், "ரசிகர்களின் மோதல் காரணமாக, நீண்ட நெடுங்காலமாக எங்கள் இரு குடும்பத்திற்குள்ளும் பகை இருப்பது போல் பேசப்படுவது எனக்கு வருத்தம் அளிக்கிறது. நடிகர்கள் என்ற முறையில் நம் படம் நன்றாக வர வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் இருக்கும். நானும், ஜூனியர் என்.டி.ஆரும் இணைந்து 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்த போது, அப்படி ஏற்பட்ட நடிப்பு போட்டிதான், எங்களை சிறந்த நண்பர்களாக்கி இருக்கிறது" என்றார்.

ஜூனியர் என்.டி.ஆர். கூறுகையில், "காந்தத்தின் எதிர் எதிர் துருவங்கள், எப்படி ஒன்றை ஒன்று ஈர்க்குமோ, அதுபோல என்னிடமும், ராம்சரணிடமும் உள்ள எதிர் எதிர் குணங்கள், எங்களின் நட்பை எளிதாக்கிவிட்டன" என்றார்.

இவர்களின் கருத்தை உள்வாங்கியாவது, இனிவரும் தலைமுறை ரசிகர்கள், போட்டி மனப்பான்மையை கைவிட்டு, மற்ற நடிகர்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதை நிறுத்திக்கொண்டால் நல்லது.

மேலும் செய்திகள்