சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இளம் நம்பிக்கை நட்சத்திரம்
|இன்றைய இளம் தலைமுறையினருக்கு சமூக பொறுப்பு அதிகம். சுற்றுச்சூழல் பற்றி சிந்திக்கிறார்கள். இயற்கையை பாதுகாக்க முயல்கிறார்கள். இந்த வரிசையில் துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவி கெஹ்காஷன் பாசுவும் ஒருவர்.
வாகனப் புகை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளால் காற்று மாசுபட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாவதை அன்றாடச் செய்திகளில் படித்து, இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று எண்ணிய கெஹ்காஷன், தன்னைப் போல் ஆர்வமுள்ள குழந்தைகளை ஒன்று சேர்த்து 'கிரீன் ஹோப்' என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, உயிரினங்களிடம் அன்பு செலுத்துதல் உள்ளிட்ட செயல்களில் மக்களை ஈடுபடவைப்பதே, 16 வயது கெஹ்காஷன் பாசு உருவாக்கிய 'கிரீன் ஹோப்' அமைப்பின் நோக்கமாம்.
தனது எட்டு வயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரசாரத்தை தொடங்கிய கெஹ்காஷன் பாசு, கடந்த நான்கு ஆண்டுகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க பல்வேறு திட்டங்கள், செயல்படுத்துதல் என சுழன்று கொண்டிருக்கிறார். கிரீன் கோப் அமைப்பில் இதுவரை, உலகில் உள்ள 10 நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை இணைத்து பணியாற்றி வருகிறார். இவரது செயலுக்காக, சர்வதேசக் குழந்தைகளுக்கான அமைதி விருது அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 2-ந் தேதி நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரில், 16-வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கடந்த 2006-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ், கெஹ்காஷன் பாசுவுக்கு குழந்தைகளுக்கான அமைதி விருதினை வழங்கி கவுரவித்தார். அப்போது சான்றிதழுடன் 1 லட்சம் யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 லட்சத்து 20 ஆயிரம்) பரிசு தொகையாக வழங்கப்பட்டது.
சமூக பொறுப்புகளில் அக்கறை காட்டும் கெஹ்காஷன், படிப்பிலும் கில்லி. இசை, நடனம், பேச்சுப்போட்டி ஆகியவற்றிலும் தேசிய, சர்வதேச அளவில் பரிசுகள் வாங்கிக் குவித்துள்ளார். இதுகுறித்து கெஹ்காஷன் கூறுகையில், ''என்னுடைய பணிகள் இத்துடன் நின்றுவிடாது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரத்தை இன்னும் சிறப்பாக மேற்கொள்வேன். சமீபத்தில் கொலம்பியா, பிரான்ஸ், மெக்ஸிகோ, நேபாளம், ஓமன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டிருக்கிறோம்'' என்கிறார்.
ஒரு நாள், கொல்கத்தாவில் வசிக்கும் பாட்டி வீட்டுக்கு வந்தபோது... பாட்டி, மாடியில் தோட்டம் வைத்து பராமரிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அப்போதிருந்து தானும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, தன்னால் இயன்ற முயற்சிகளை செய்யத் தொடங்கி இருக்கிறார். அந்த ஈடுபாடுதான் தனக்கு விருதை பெற்று தந்திருப்பதாக மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.