< Back
சிறப்புக் கட்டுரைகள்
கோலத்தில் கலைமாமணி வென்ற பெண்மணி
சிறப்புக் கட்டுரைகள்

கோலத்தில் 'கலைமாமணி' வென்ற பெண்மணி

தினத்தந்தி
|
24 July 2022 3:25 PM IST

கோலம் வரையும் கலையை உயிர்ப்பிக்க பிரத்யேக பயிற்சி மையம் நடத்தி வரும் மாலதி பகிர்ந்து கொண்டவை...

கோலம் என்பது தனி கலை. ஓவிய கலையின் மறுபாதி. இந்த கலையில் அசத்திக்கொண்டிருக்கிறார், மாலதி (வயது 50). புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவரான இவர், பாரம்பரிய கோலங்களை அழகாக வரைந்து அசத்துவதுடன், சிறுவயது முதலே கோலம் வரைகிறார். கண்ணால் காணும் அனைத்தையும் தத்ரூப கோலமாக வரைவதில் வல்லவர். இதற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

''கோலத்திற்கும், தமிழ் கலாசாரத்திற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அதை கலை முயற்சியாகவும், உடற்பயிற்சியாகவும் பின்பற்றினார்கள். மேலும் ஈ, எறும்பு போன்ற சிறிய ஜீவராசிகளுக்கு விருந்து படைக்கும் முயற்சியாகவும் கருதினார்கள்'' என்று முதல் புள்ளி வைத்து, கோலம் சம்பந்தமான தகவல்களை கூற ஆரம்பித்தார்.

''குளிர்காலம் என்றாலே எறும்புகள், மக்கள் வசிக்கும் வீட்டிற்குள் புகுந்துவிடும். இனிப்பு பொருட்களில் மொய்க்கத் தொடங்கி விடும். ஈ, எறும்பிற்கு கூட கருணை காட்டுபவர்கள் நம் தமிழர்கள். அதைக் கொல்வதற்கு மனமில்லை. அதேநேரம் அவற்றை எப்படி தடுப்பது? என சிந்தித்ததன் விளைவே கோலம். தினமும் அதிகாலை எழுந்து, அரிசி மாவில் வாசலில் கோலமிடுவார்கள். இதனால் எறும்புகளுக்கு வாசலிலேயே உணவு கிடைத்து விடுவதால் வீட்டிற்குள் நுழைவதில்லை. இதற்காக உருவானதே வாசலில் கோலமிடும் வழக்கம்'' என்றவர், கோல மாவினை கையில் தூக்கி, கலர்கலரான கோலங்களை வரைய ஆரம்பித்த கதையை கூறினார்.

''எனது தந்தையின் ஓவிய ஆர்வம் என்னையும் தொற்றிக் கொள்ள 5 வயதிலேயே ஓவியம் வரைய தொடங்கினேன். 3-ம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியை ஒருவர் ஆண்டுக்கு ஒருமுறை பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் கோலத்தால் ஓவியம் வரைவார். இதைப்பார்த்து எனக்கு அதன் மீது தனி ஈர்ப்பு வந்தது. நான் 7-ம் வகுப்பு படித்த போது ஆசிரியைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அந்த ஓவியம் வரையும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சிறப்பாக வரைந்திருந்தேன். பலரும் என்னை பாராட்டினர். அது எனக்கு மேலும் உற்சாகத்தை தந்தது. அதன்பின் பிரமாண்ட கோலம் வரைவதில் சில நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். அதாவது புள்ளி, கட்டம் எதுவும் போடாமல் நேரடியாக உருவ படத்தை, பிரபலங்களின் முக அமைப்பை கோலமாக வரைய கற்றுக்கொண்டேன்'' என்றவர், கோலம் வரைவதை அனுபவ பாடமாக கற்றுக்கொண்டிருக்கிறார்.

''பிளஸ்-2 வரை மட்டுமே படித்துள்ளேன். ஓவிய கல்லூரியில் படிக்க ஆசை. ஆனால் அந்த சமயத்தில், சென்னையில் மட்டுமே ஓவிய கல்லூரி இயங்கியதால், அப்போதைய குடும்ப சூழலில் என்னால் படிக்க முடியவில்லை. அதேநேரத்தில் வீட்டில் இருந்தே பல வகை கோலங்களை வரைய கற்றுக்கொண்டேன்.

கோவில்களில் சாமி சிலைகளின் உருவத்தை கோலமாக வரைந்தேன். பல்வேறு தலைவர்கள் படத்தை வரையத் தொடங்கினேன். திருமண மண்டபங்களில் மணமக்கள் படத்தை கோலமாக வரைந்தேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் அதுவே என் வாழ்க்கையாக மாறிப்போனது'' என்றவர், சின்ன கோலங்களில் தொடங்கி, 2 ஆயிரம் சதுர அடி வரையிலான பிரமாண்ட கோலங்கள் வரை வரைந்து அசத்துகிறார்.

''ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. பணக்கார வீட்டு விஷேசங்களில், கோலம் வரைய நிறைய அழைப்பு வந்தது. கூடவே, தனி மரியாதையும் கிடைத்தது. திருமணம், வளைகாப்பு, குழந்தைகளின் பெயர் சூட்டும் விழா என கொண்டாட்ட தருணங்களில் கோலம் போடுவதற்கான அழைப்புகள் குவிந்தன. திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையான் ஓவியத்தை வரைந்து கொடுத்தேன். என்னை பாராட்டியதுடன் வி.வி.ஐ.பி. வரிசையில் சாமி தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கி கவுரவித்தனர்'' என்றவர், கோலம் மூலம் கிடைத்த பாராட்டுகளை பதிவு செய்கிறார்.

''எனது ஓவியத்திற்காக கடந்த 2010-ம் ஆண்டு புதுவை அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. 'சித்திரை கலை அரசி', 'கலா ரத்னா' உள்பட 35-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளேன்.

கலை படைப்புகளுக்கு பிரபலமான டெல்லி 'லலித் கலா அகாடமி'யை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த எனக்கு அந்த அகாடமியின் புதுச்சேரிக்கான உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய ஒன்று.

இவை மட்டுமா...? என்னுடைய கோலங்களை இணையதளம் வாயிலாக கண்டு ரசிக்கும் உலக தமிழர்கள், என்னிடம் ஆன்லைன் வாயிலாக கோலம் வரையபயிற்சி பெறுகிறார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, கலையால் ஈர்க்கப்பட்ட பல நாட்டவரும் கோலம் பயிற்சி பயில்கிறார்கள். என்னுடைய ஓவிய திறன் மற்றும் ஓவியம் குறித்த ஆராய்ச்சிகளையும் முன்னெடுத்திருக்கிறார்கள்'' என்றவர், அன்னை தெரசா, விவேகானந்தர், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி, பாரதியார், பாரதிதாசன், விடுதலை போராட்ட வீரர்கள், காமராஜர், நடப்பு அரசியல் தலைவர்கள் உள்பட பலரது முக தோற்றத்தை தத்ரூப ஓவிய கோலமாக வரைந்து அசத்தியிருக்கிறார்.

''இன்றைய தலைமுறைக்கு இயல்பான கோலம் போடவே தெரியவில்லை. ஆனால் அந்தகாலத்து பெண்கள், 100-ற்கும் மேற்பட்ட புள்ளிகளை வைத்து, சிக்கு கோலம் எல்லாம் போடுவார்கள். அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரமே, கோலம் போடும் பழக்கத்தை குறைத்துவிட்டது. அதேபோல சமூக வலைத்தள பயன்பாடும் கோலத்தின் மீதான ஈடுபாட்டை குறைத்துவிட்டது. நமது பாரம்பரிய கலை அழிவது வேதனை தருகிறது. வெளிநாட்டவர்களே வியந்து போற்றும் கோலம் போடும் கலையை நாம் மறந்து வருகிறோம்'' என்று வருத்தப்படும் மாலதி, இதை தவிர்க்க கோலம் போடும் முறையை இளைய தலைமுறையினருக்கு கற்று தருகிறார்.

மேலும் செய்திகள்