பேனா மன்னன் பதில் சொல்கிறார்
|அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பேனா மன்னன், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499 மின்னஞ்சல்: penamannan@dt.co.in
கேள்வி: உண்மையான காதலுக்கு தேவை அன்பா, அறிவா, அடக்கமா? (கே.எம்.ஸ்வீட்முருகன் , கரடிகொல்லப்பட்டி)
பதில்: நிச்சயமாக மாறாத அன்பு தான். அதுதான் மாசில்லா உண்மை காதலுக்கு அடிப்படை .
கேள்வி: இன்னமும் கூட புரியாத புதிராக இருக்கக்கூடிய விஷயமாக எதை கூறுவீர்கள்? (ஆர்.மாதவராமன் , தெற்கு மாடதெரு, கிருஷ்ணகிரி)
பதில்: புரியாத புதிர் என்னவென்றால், மக்கள் எதற்காக வாக்களிக்கிறார்கள் என்பது தான்.
கேள்வி: கல்வியில் தான் பெண்கள், ஆண்களை விஞ்சி விடுகிறார்கள். காதலிலும் விஞ்சி விடுகிறார்களே ... (மு.பெ ரியசாமி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர்)
பதில்: பெண்கள் அன்பு செய்வதில் எப்போதும் முதலிடத்தை பெறுபவர்கள். அன்பின் இன்னொரு பரிமாணம் தானே காதல்.
கேள்வி: தர கட்டுப்பாடு, மன கட்டுப்பாடு. இரண்டுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன? (என்.ராஜேந்திரன், மேல்புவனகிரி)
பதில்: மன கட்டுப்பாடு நம்மில் தீர்மானிக்கப்படுகிறது. தர கட்டுப்பாடு அரசால் தீர்மானிக்கப்படுகிறது.
கேள்வி: விழிப்புணர்வு - புரிந்துணர்வு என்ன வேறுபாடு? (பா.ஜெயப்பிரகாஷ், தேனி)
பதில்: புரிந்துணர்வு என்பது இருவருக்குள் ஏற்படுவது. விழிப்புணர்வு ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஏற்படுவது.
கேள்வி: சனாதன தர்மம் என்றால் என்ன, அதன் உண்மையான பொருள் என்ன? அது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றா ? (லோகநாதன் ,தர்மபுரி)
பதில்: சனாதன தர்மத்துக்கு பல பொருள்கள் இருக்கின்றன . அதைகையில் எடுப்பவர்கள் எதை எடுக்கிறார்கள்? என்பதை பொறுத்துத்தான் இந்த கேள்விக்கு பதில் இருக்கிறது.
கேள்வி: அரசியல் தொண்டன், சினிமா ரசிகன். யாருக்கு சமூக அக்கறை அதிகம்? (செந்தில்குமார், சென்னை)
பதில்: திரைப்பட ரசிகன் என்பவன், திரைப்படத்தை தாண்டி பொதுவெளியில் எவ்வாறு பணியாற்றுகிறான்? என்பதை பொறுத்தே அவனுடைய சமூக அக்கறையை மதிப்பிடமுடியும். அரசியல் தொண்டர்கள் காந்தியை போல், காமராஜரை போல், கக்கன் போல் இருந்தால் அவர்கள், சமூகத்தையே நினைத்து வாழ்பவர்கள்.
கேள்வி: தனிமை போதையா, ஞானமா? (அர்ஷத் பயாஸ், குடியாத்தம்)
பதில்: தனிமை என்பது தவமிருப்பவர்களுக்கு ஞானம். தவறிழைப்பவர்களுக்கு போதை.
கேள்வி: கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்கப்படவில்லை என்றால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதே ? (சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி)
பதில்: அரசாணை இருப்பது நல்லது. அதை அமல்படுத்துவதில் தான் வெற்றி இருக்கிறது.
கேள்வி: தி.மு.க.வுக்கு திடீரென்று சீமான் ஆதரவு தெரிவிப்பது ஏன்? (தா.விநாயகம், ராணிப்பேட்டை)
பதில்: அரசியலில் இதெல்லாம் சாதாரணம் தானே .
கேள்வி: கணவன் - மனைவி இடையே சண்டை வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்? (த.நேரு, வெண்கரும்பூர்)
பதில்: ஒருவர் குரலை உயர்த்தும் போது, இன்னொருவர் காது கேளாதவர் போல இருந்துவிட வேண்டும்.
கேள்வி: உண்மையான காதலுக்கு என்ன விளக்கம் தருகிறீர்கள்? (ஆர்.ராஜகோபால், மேட்டுப்பாளையம்)
பதில்: இறையன்பு இதற்கு கொடுக்கும் விளக்கம். "கருப்பை யின் வெதவெதப்பை அளிக்கும் இரண்டு கண்களின் கதகதப்பே காதல்".
கேள்வி: இந்தியாவுக்கும், பாரதத்துக்கும் உள்ள வேறுபாடு? (தே .மாதவன் , கோவை)
பதில்: அரசியல் சட்டத்தின் முதல் பிரிவிலேயே இந்தியா அதாவது பாரத் என்றுதானே இருக்கிறது.
கேள்வி: கணவன் - மனைவிக்கிடையே எந்த வயதில் காதல் அதிகமாக இருக்கும்? (டேவிட், நாகர்கோவில்)
பதில்: ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழமுடியாது என்ற நிலையில் உள்ள முதிய வயதில் தான் காதல் உச்சத்தில் இருக்கும்.
கேள்வி: வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம் வேண்டுமா? விடா முயற்சி வேண்டுமா? (வெங்கடேசன் மருதவனம், திருத்துறைப்பூண்டி)
பதில்: விடாமுயற்சி இருந்தால் அதிர்ஷ்டம் பின்தொடரும்.