பேனா மன்னன் பதில் சொல்கிறார்
|அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
கேள்வி: தமிழகத்துக்கு ஆர்.என்.ரவி போல கவர்னர் கிடைத்தது அற்புதமான வாய்ப்பு என்கிறாரே, கரு.நாகராஜன்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: அவர்களுக்கு அற்புதமான வாய்ப்பு தானே...
************************
கேள்வி: தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி புரட்சி ஏற்பட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறாரே... (மு.பெரியசாமி, விட்டுக்கட்டி, திருத்துறைப்பூண்டி)
பதில்: அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவிகள் கல்லூரி படிப்பை தொடரும்போது மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை தான் அப்படி சொல்கிறார்.
************************
கேள்வி: கலியுகத்தில் அதர்மம் தலைவிரித்தாடுகிறதே? (ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி)
பதில்: கலியுகம் என்று நீங்களே சொல்லிவிட்டீர்களே...
************************
கேள்வி: உலகம் உள்ளங்கையில் என்கிறோம். அதற்கு சரியான அர்த்தம் தான் என்ன? (கே.எம்.ஸ்வீட் முருகன், கரடிகொல்லப்பட்டி, கிருஷ்ணகிரி)
பதில்: உள்ளங்கையில் உள்ள செல்போனில்தானே உலகமே இருக்கிறது.
************************
கேள்வி: திருமண வீடுகளில் அசைவம் பரிமாறுவது அதிகரித்திருப்பதன் காரணம் என்ன? (மணிகண்டன், ஆம்பூர்)
பதில்: அசைவ பிரியர்கள் அதிகமாகிவிட்டதும், அசைவம் பரிமாறினால் தான் கவுரவம் என்ற உணர்வு பரவியிருப்பதும் தான்.
************************
கேள்வி: இப்போது அதிகமான கோரிக்கைகளை வைத்துவரும் எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சிக்காலத்தில் இதை செய்திருக்கலாமே... (எம்.சார்லஸ், திருச்சி)
பதில்: அப்போது கோரிக்கைகளை வைக்க முடியாது அல்லவா? அப்போது செய்யாததை இப்போது கோரிக்கைகளாக சொல்கிறார்.
************************
கேள்வி: இன்றைய அரசியல் அரங்கில் சமூக வலை தளங்களின் பலம், பலவீனம் என்ன? (மு.ரா.பாலாஜி, கோலார்தங்கவயல்)
பதில்: விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது பலம். வதந்திகளை பரப்புவது பலவீனம்.
************************
கேள்வி: நான் எப்போதும் மாடர்ன் டிரஸ் தான் அணிவேன். ஆனால் என் காதலர் 'ஜம்பர் பட்டும், தாவணி பட்டும் சலசலக்கையிலேயே...' என்ற பாட்டை அடிக்கடி பாடுகிறாரே? (சுபத்ரா, சென்னை-21)
பதில்: புரியவில்லையா... அவருக்கு உங்களை பாவாடை தாவணியில் பார்க்க மனம் நிறைய ஆசை.
************************
கேள்வி: அரசியல் நாகரிகம் என்பது இன்று அர்த்தமில்லாமல் போய்விட்டதே... (ஆர்.ரங்கசாமி, வடுகப்பட்டி, தேனி)
பதில்: உண்மைதான். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எதிரிகள் அல்ல என்ற உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும்.
************************
கேள்வி: அரசின் விலையில்லா சைக்கிளை மாணவ-மாணவிகள் விற்பனை செய்யக்கூடாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாரே... (சசிரேகா ராஜ்குமார், விழுப்புரம்)
பதில்: அது மாணவர்களுக்காக அரசு கொடுக்கும் விலையில்லா சைக்கிள். ஒருபோதும் அதற்கு விலை இருக்கக்கூடாது.
************************
கேள்வி: இன்றைய தலைமுறையினர் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்? (டி.என்.ரங்கநாதன், முத்துநகர் சாலை)
பதில்: மின்னணு சாதனங்களுக்கு...
************************
கேள்வி: ஆனந்தம், சந்தோஷம். விளக்கம் கொடுங்களேன்... (ஜி.நீலமேகம், மதுரை)
பதில்: ஆனந்தம் என்பது உச்சபட்ச பரவசம். சந்தோஷம் என்பது அன்றாட வாழ்க்கையில் பெறுவது.
************************
கேள்வி: வெற்றிகரமான தோல்வி உண்டா? (அ.செல்வராஜ், கரூர்)
பதில்: வித்தியாசமான முயற்சிகளில் அடையும் தோல்வி வெற்றிகரமான தோல்வி தான்.
************************
கேள்வி: சினிமா நடிகர்களின் அரசியல் எடுபடுமா? (பாரதி சுந்தர், குறண்டி)
பதில்: நடிகர் சிவாஜி கணேசன் தொடங்கி பலரின் அரசியல் பூ மலராமலேயே கருகியிருக்கிறது. எல்லோரும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிவிட முடியுமா?
************************
கேள்வி: பொது இடங்களில் தடாலடியாககளமிறங்கும் அரசியல்வாதிகள், தங்களது வீடுகளில் எப்படி இருப்பார்கள்? (என்.எஸ்.கே.செல்வகுமார், மேற்பனைக்காடு கிழக்கு)
பதில்: பொதுப்படையாக கூற முடியாது.
************************
கேள்வி: ரகசியங்களை மனதில் பதுக்கி வைப்பதில் கில்லாடிகள் ஆண்களா, பெண்களா? (சுதாகரன், ஊட்டி)
பதில்: பெண்கள் தான். தங்களை பற்றிய ரகசியங்களை மூச்சு கூட விடமாட்டார்கள்.
************************
கேள்வி: கோவா உள்பட பல மாநிலங்களில் ஊழல் பணத்தில் தான் ஆம் ஆத்மி போட்டியிட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் விமர்சித்துள்ளாரே... (கார்த்திகா, திருவண்ணாமலை)
பதில்: இனி அப்படி சொல்லமாட்டார். உறவு மலர்ந்துவிட்டது.
************************
கேள்வி: வடமாநில தொழிலாளர்களின் தமிழக படையெடுப்புக்கும் அரசியல் முலாம் பூசப்படுகிறதே? (என்.ராஜேந்திரன், மேல்புவனகிரி)
பதில்: இதற்கு மட்டுமல்ல, எதற்குமே அரசியல் முலாம் பூசி ஆதாயம் தேடுபவர்களும் இருக்கிறார்கள்.
************************
கேள்வி: செல்பி மோகம் பலவித ஆபத்தை விளைவிப்பதை அறியாமல் அதில் மூழ்குபவர்களை பற்றி... (சங்கீதசரவணன், மயிலாடுதுறை)
பதில்: சிலர் எச்சரிக்கைகளை உச்சரித்தாலும் தங்கள் நச்சரிப்புகளை விடமாட்டார்கள். பட்டுத்தான் தெரிந்து கொள்வார்கள்.
************************
கேள்வி: பெண்களை முல்லை என்று குறிப்பிடுவதன் பொருள் என்ன? (ரமணி,மேலூர்)
பதில்: முல்லை மலர் என்று குறிப்பிடுவதற்கு பொருள், மனம் முழுவதும் மணம் இருப்பதால்.
************************
கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ.வின் பேச்சை இப்போதெல்லாம் காணவில்லையே... எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவப் போகிறாரா? (டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை)
பதில்: அவருக்கு ஒப்புதல் இல்லாத சில முடிவுகள் எடுக்கப்பட்டதால் அமைதியாக இருக்கிறாரே தவிர, வேறு எங்கும் தாவமாட்டார்.
************************
கேள்வி: தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் மாநிலமா? (சத்தியநாராயணன், அயனாவரம், சென்னை)
பதில்: அதில் என்ன சந்தேகம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழவைக்கும் பூமியல்லவா தமிழ்நாடு.
************************
கேள்வி: கேள்வி கேட்பவர், பதில் சொல்பவர். யார் புத்திசாலி? (கவிதாயிணி, அறந்தாங்கி)
பதில்: அது கேட்கப்படும் கேள்வியையும், சொல்லப்படும் பதிலையும் பொறுத்தது.