< Back
சிறப்புக் கட்டுரைகள்
உறங்காத கண்கள் இரண்டு..!
சிறப்புக் கட்டுரைகள்

உறங்காத கண்கள் இரண்டு..!

தினத்தந்தி
|
29 Jan 2023 3:39 PM IST

வியட்நாமைச் சேர்ந்த 68 வயது நபர் ஒருவர், கடந்த 42 ஆண்டுகளாக தூங்காமல் பகல் மற்றும் இரவு ேநரங்களில் வேலை பார்த்து வருகிறார்.

ஒரு நாள் இரவு கண் விழித்து வேலை பார்த்தாலே, 'கண்ணெல்லாம் கட்டுதே' என்று புலம்புகிறவர்களைப் பார்த்திருக்கலாம். ஆனால் வியட்நாமைச் சேர்ந்த 68 வயது நபர் ஒருவர், கடந்த 42 ஆண்டுகளாக தூங்காமல் பகல் மற்றும் இரவு ேநரங்களில் வேலை பார்த்து வருகிறார் என்றால் ஆச்சரியமாக இல்லை..?

வியட்நாமின் க்யூ சன் மாவட்டத்தில் உள்ள க்யூ டிரங்க் நகரைச் சேர்ந்தவர், ஹாய் கோக். இவரது இயற்பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது. 'ஹாய் கோக்' என்றால்தான் தெரிகிறது. மனிதருக்கு 1973-ம் ஆண்டில் திடீரென மர்மக் காய்ச்சல் தாக்கியுள்ளது. காய்ச்சல் கண்ட நாளிலிருந்து அவருக்குத் தூக்கமே வருவதில்லை. எவ்வளவுதான் புரண்டு, சுருண்டு படுத்தாலும், தூக்கம் மட்டும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவே இல்லை.

சரி, போகப் போக சரியாகிவிடும் என்று நினைத்த ஹாய் கோக்குக்கு அடுத்தடுத்த நாட்களிலும் தூக்கம் வரவில்லை. மது குடித்தால் தானாக தூக்கம் வந்துவிடும் என்று நினைத்து குடித்தவர், கொட்டக் கொட்ட விழித்திருந்ததுதான் மிச்சம்! அன்றிலிருந்து இரவு தூங்குவதில்லை.

'தூங்கவில்லை என்றால் உடம்புக்கு கெடுதல்' என்று அக்கம்பக்கத்தினர் பயமுறுத்தவே, மருத்துவரை சந்தித்தார். இவருக்கு முதலில் மாத்திரைகளைக் கொடுத்துப் பார்த்தார், அந்த மருத்துவர். அதை சாப்பிட்டும் தெம்பாக வந்து மீண்டும் அதே குறையைக் கூறி அவரையே அசரடித்திருக்கிறார். சிறுநீரகத்தில் மிகச்சிறிய பாதிப்பு தவிர வேறு எந்தக் குறையும் ஹாய் கோக் உடலில் இல்லை.

ஹாய் கோக் நகரின் ஒதுக்குப்புறத்தில் 4 கி.மீ. தூரத்தில் மலைப்பகுதியில் வசித்து வருகிறார். வெள்ளைப் பன்றி, கோழிப் பண்ணை வைத்துப் பராமரிக்கிறார். தினமும் மலையை விட்டு கீழே இறங்கி நகருக்கு வரும் ஹாய் கோக், 50 கிலோ எடை கொண்ட 2 தீவன மூட்டைகளைச் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருகிறார்.

இரவில் எல்லோரும் தூங்கிவிட... இவர் பண்ணைக்கு காவல் இருக்கிறார். காலையில் பண்ணையை சுத்தம் செய்து பன்றிகள், கோழிகளுக்கான தீவனங்களைப் போடுதல், அதைத் தொடர்ந்து நகருக்குச் சென்று தீவனம் வாங்குதல் என மனிதர் முப்பொழுதும் பிசியாக இருக்கிறார்.

''இரவில் சும்மா இருக்கிறோமே என்று நினைத்தவர், 'பண்ணையில் மீன் குட்டை அமைத்தால் அதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்குமே' என 2 குட்டைகளை தனி மனிதராகத் தோண்டியுள்ளார். அவர் தூக்கம் இல்லாமல் எந்த அளவுக்கு உற்சாகமாக இருக்கிறார் என்பது இதிலிருந்தே தெரியும்'' என்கிறார் அவரது மனைவி.

மேலும் செய்திகள்