< Back
சிறப்புக் கட்டுரைகள்
கல்வி என்ற அழியா செல்வம்...!
சிறப்புக் கட்டுரைகள்

கல்வி என்ற அழியா செல்வம்...!

தினத்தந்தி
|
7 Jun 2022 9:42 PM IST

நாட்டில் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்லவும், வறுமையை போக்கவும் கல்வி மிக, மிக முக்கியமானதாகும். நல்லவை, தீயவை என பிரித்து அறிந்து வாழ்வில் நலம் பெற கல்வி உதவுகிறது.

'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்ற யவை'

என்ற திருவள்ளுவரின் வரிகளில் ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்விதான். அதற்கு வேறு எதுவும் ஈடாகாது என்பது உணர்த்தப்படுகிறது. ஏனைய செல்வங்களை விட சிறப்புடையதாக கல்வி உள்ளது. இதற்கு காரணம் அது வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது, வேந்தராலும் கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது, உயர்வான எண்ணங்களும், உன்னதமான குணங்களும் மேம்பட வேண்டுமென்றால், அதற்கு கல்வி அவசியமாகிறது. இதுவே மனிதர்களையும் விலங்குகளையும் வேறுபடுத்தி காட்டுகிறது. கல்வி அறிவை பெற முயலாதவர்களை விலங்குகளுடன் ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். அதாவது,

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

என்ற குறள் மூலமாக...

அவர்கள் மனித பண்புகள் இன்றி வழிமாறி சென்று, அழிவுக்கு வழிவகுத்து கொள்கின்றனர். கல்விதான் மனிதனின் அறிவு கண்களை திறக்கிறது. பகுத்தறிவை உருவாக்கி அவனை வழிநடத்துகிறது. கல்வியில் சிறந்தவர்கள் சமூகத்தில் உயர்வாக மதிக்கப்படுவார்கள். ஒரு செல்வந்தன் கால சூழ்நிலையால் ஏழை ஆகலாம். ஆனால் கல்வி அறிவுடையவன் அதுபோன்று அல்லாமல் தனது நிலையை மேன்மேலும் உயர்த்தி கொள்ளவே முடியும்.

தான் பெற்ற கல்வியை தனக்கு மட்டும் பயன்படுவதாக அல்லாமல், பிறருக்கும் பயன்படுவதாக செய்ய வேண்டும். இதன் மூலம் அறியாமையில் இருப்பவர்களை கல்வி அறிவை ஊட்டி விழித்தெழ செய்ய முடியும். மேலும் கற்கும் கல்வியை தெளிவாக கற்க வேண்டும். கற்று முடித்த பிறகு அதன்படி நடக்க வேண்டும் இதையே திருவள்ளுவர்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

என்ற குறள் மூலம் விளக்குகிறார்.

பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது என்று மகாத்மா காந்தியடிகள் குறிப்பிடுகிறார். உலகையே மாற்றக்கூடிய பலமான ஆயுதம் ஒன்று உண்டென்றால் அது கல்வியே. தனி மனிதனையும், சமூகத்தையும் மாற்றி நல்வழியில் அழைத்து செல்லக்கூடிய சிறப்பு கல்விக்கு உண்டு. எனவே நிலையான செல்வத்தை அடைய எப்போதும் ஆவலாக இருக்க வேண்டும். கல்வி என்பது கண் போன்றது. இதை கற்காமல் விடுவது கண் இன்றி வாழ்வது போல் ஆகும். இதையே திருவள்ளுவர்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

என்று குறிப்பிடுகிறார்.

இன்றைய உலகில் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கல்வி கற்பதில் இருந்து விலகிச்செல்வது அரிதாகவே காணப்படுகிறது. மனிதனாக பிறப்பது பெற்றுவிட்டால் கல்வி செல்வத்தையும் பெற்றுக் கொள்வது சிறப்பு. இதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் பெற முடியும். இளமையில் கற்கும் கல்வி உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்லும். இதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம்.

கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறுவார்கள். செல்வங்களில் சிறந்த செல்வம் கல்வி செல்வம் ஆகும். இத்தகைய உயர்ந்த செல்வத்தை அடைந்து கொள்ள பிற எந்த செல்வத்தையும் இழக்கலாம். ஆனால் கல்வி செல்வத்தை அடைந்து கொள்ள பிற எந்த செல்வத்தையும் இழக்கலாம். ஆனால் கல்வி செல்வத்தை க்காரணத்தை கொண்டும் இழக்கக்கூடாது.

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே என்று அவ்வையார் கூறுகிறார்.

அதாவது பிச்சை எடுத்தாவது கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். நாட்டில் வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்லவும், வறுமையை போக்கவும் கல்வி மிக, மிக முக்கியமானதாகும். நல்லவை, தீயவை என பிரித்து அறிந்து வாழ்வில் நலம் பெற கல்வி உதவுகிறது. கல்வியை பெறுவது அனைவரின் உரிமை. அந்த உரிமையை விட்டு கொடுக்காமல் ஆர்வத்துடன் கற்க வேண்டும். கற்றதை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். கல்வியால் தாழ்ந்தவர்கள் என்று கூறுமளவிற்கு எவருமில்லை. கல்வியால் உயர்ந்தவர்களே பெரும்பாலும் உள்ளனர்.இதை உணர்ந்து விலைமதிப்பற்ற அச்செல்வத்தை அடைய அடியெடுத்து வைப்போம்...!

மேலும் செய்திகள்