< Back
சிறப்புக் கட்டுரைகள்
உலகின் மிக உயரமான ரெயில் பாலம்
சிறப்புக் கட்டுரைகள்

உலகின் மிக உயரமான ரெயில் பாலம்

தினத்தந்தி
|
14 Aug 2022 8:51 PM IST

உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரெயில் பாலமான செனாப் பாலத்தின் கட்டுமானப்பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது. இந்த பாலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள ரியாசி மாவட்டத்தில் ஓடும் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

அங்குள்ள கவுரி கிராமத்திற்கு அருகில் சலால் அணை அமைந்திருக்கிறது. அந்த அணையின் அருகே இரு மலை முகடுகளுக்கு இடையே பிரமாண்டமான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செனாப் ரெயில்வே பாலம் ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது ஈபிள் டவரின் உயரம் 324 மீட்டர். செனாப் ரெயில்வே பாலம் 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. தற்போது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் சீனாவில் அமைந்துள்ளது.

அங்குள்ள குய்சோ மாகாணத்தில் பாயும் பெபன்ஜியாங் ஆற்றின் மீது 275 மீட்டர் உயரத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. செனாப் ரெயில்வே பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது அது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம் என்ற பெருமையை பெற்று விடும்.

செனாப் பாலம் பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்கள் உங்கள் பார்வைக்கு....

'செனாப் பாலம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் பாலம் 359 மீட்டர் உயரமும், 1315 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும்.

உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில்வே இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.28,000 கோடி மதிப்பீட்டில் வடக்கு ரெயில்வே மூலம் கட்டப்படுகிறது.

பாலத்தின் இரும்பு வளைவு பணிகள் முடிந்த பின், மேல் தளத்தில் இரும்பு வளைவு அமைக்கும் பணியை இம்மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரு மலை முகடுகளுக்கு இடையே இரும்பு வளைவை நிறுவுவது மிகப்பெரிய சிவில் என்ஜினீயரிங் சவால்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

செனாப் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்படுவதன் மூலம் ரெயில் தண்டவாளம் 111 கி.மீ தூரம் அமைக்கப்படுகிறது. இதில் 97 கி.மீ தூரம் சுரங்க பாதை கொண்டதாக அமைகிறது. இந்த அளவிலான சுரங்கப்பாதை பணிகள் நாட்டின் வேறு எந்த பகுதியிலும் மேற்கொள்ளப்படவில்லை. இதுவரை சுமார் 86 கி.மீ தூரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செனாப் பாலத்தின் இரும்பு வளைவு மணிக்கு 266 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றை தாங்கும் திறன் கொண்டது.

பாலத்தில் 17 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. 28,660 மெட்ரிக் டன் இரும்பு பயன் படுத்தப்பட்டுள்ளது. இதற்கான செலவு மதிப்பு 1,486 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாலம் கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படும் இரும்பு மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையை தாக்குப் பிடிக்கக்கூடியது.

இந்த பாலத்தின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 120 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாலத்தின் மேல் 100 கி.மீ., வேகத்தில் ரெயில்கள் செல்லும் வகையில் கட்டமைக்கப்படுகிறது.

இந்த பாலம் கடுமையான நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன் கொண்டது.

பாலத்தின் மேல் தளத்தை இணைக்கும் வகையில் மலை முகட்டின் இரண்டு முனைகளும் 'ஹை ஸ்ட்ரெங்த் ப்ராக் ஷன் கிரிப்' எனப்படும் போல்ட்களுடன் இணைக்கப்படும். மும்பையை சேர்ந்த ஆப்கான்ஸ் என்ற நிறுவனம் இந்த பாலம் கட்டுமான பணியை மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்