< Back
சிறப்புக் கட்டுரைகள்
தஞ்சாவூர் ஓவிய கலையை வளர்க்கும் கலைஞர்..!
சிறப்புக் கட்டுரைகள்

தஞ்சாவூர் ஓவிய கலையை வளர்க்கும் கலைஞர்..!

தினத்தந்தி
|
11 Dec 2022 8:16 PM IST

தஞ்சாவூர் ஓவியங்களை ரசிக்கவும், வாங்கவும் கலை ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தலைசிறந்த படைப்புகளுக்கு, சிறப்பான வெகுமதியும் கிடைக்கிறது. இதை நன்கு உணர்ந்து கொண்டு, இந்த ஓவிய கலையின் மூலம் பல குடும்ப பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வருகிறார், ஓவியர் கமலகண்ணன்.

சென்னை தியாகராய நகரை சேர்ந்தவரான இவர், தஞ்சாவூர் ஓவியம் வரைவதில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இவரது தலைசிறந்த படைப்புகளுக்கு மாவட்ட அளவிலும், மாநிலம் மற்றும் தேசிய அளவிலும் அரசு விருதுகள் கிடைத்திருக்கின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் ஓவிய கலையை வளர்த்தெடுக்கும் முயற்சியாக பலருக்கு இலவச ஓவிய பயிற்சிகளை வழங்குவதுடன், மத்திய அரசின் மூலம் ஓவியர்களுக்கு கிடைக்கும் மானியத்தையும் பெற்றுக்கொடுக்கிறார். இது பலரது வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி இருக்கிறது. இதுபற்றி கமலகண்ணனிடம் சிறுநேர்காணல்...

* தஞ்சாவூர் ஓவியங்களின் சிறப்பு என்ன?

இது 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது. இதை பலகை படம் என்றுதான் கூறுவார்கள். ஆனால் தஞ்சை சரபோஜி மன்னரால் ஊக்கவிக்கப்பட்டதால், தஞ்சாவூர் ஓவியம் என புகழ்பெற்றது. தங்கம், தங்க இலை, பட்டைத்தீட்டப்பட்ட கற்கள் என விலை உயர்ந்த மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டதால், ஒருகாலத்தில் இதன் மதிப்பும், மரியாதையும் கோலோச்சி இருந்தது. அந்த காலத்தில், கடவுள்களின் ஓவியங்களை பெரும்பாலும் தஞ்சாவூர் ஓவியங்களில்தான் வரைவார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. நவீன காலத்திற்கு ஏற்ப இயற்கை காட்சிகள், விலங்குகள், நடன காட்சிகள், கலாசார பதிவுகள்... இப்படி தஞ்சாவூர் ஓவியங்களில் நிறைய புதுமைகள் வெளிப்படுகின்றன.

* பாரம்பரிய கலையை, இப்போதும் மக்கள் ரசிக்கிறார்களா?

நிச்சயமாக. தஞ்சாவூர் ஓவியத்திற்கான மதிப்பு கொஞ்சமும் குறையவில்லை. தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் அதீத தேவை இருக்கிறது. ஒருசில ஓவிய விற்பனை, பெரும் போட்டியில் முடிந்த கதைகளும் இருக்கிறது.

* இப்போது மார்டன் கலைகள் நிறைய வந்துவிட்டன. அவற்றுக்கு மத்தியிலும் இந்த கலை உயிர்ப்புடன் இருக்கிறதா?

பாரம்பரிய ஓவிய கலைகளுக்கு பல வரைமுறை உண்டு. ஆனால் நவீன கலாசாரத்தில் தோன்றும் மார்டன் கலைகளுக்கு, எந்தவிதமான கட்டுபாடுகளும் கிடையாது. பெயிண்ட் சிதறல்களை கூட, ஓவியம் என்று கூறி ரசிக்கும் அளவிற்கும் மக்களின் மனநிலை முன்னேறிவிட்டது. ஓவியர்களும், அதிகம் மெனக்கெடாமல் வரைந்து பழகிவிட்ட இந்த சூழலிலும், ஓவிய வரைமுறைக்கு உட்பட்டு, பாரம்பரிய பாணி மாறாமல் ஓவியம் வரையக்கூடிய நிறைய கலைஞர்கள் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கலைஞர்களை, தஞ்சாவூர் ஓவிய கலை இன்றும் வளர்த்து வருகிறது. இனியும் வளர்க்கும்.

* தஞ்சாவூர் ஓவிய கலையை வளர்க்க, நீங்கள் அதிக கவனம் செலுத்துவது பற்றி கூறுங்கள்?

இந்த கலையை வளர்க்க நான் மட்டு மல்ல, மத்திய-மாநில அரசுகளும் முயற்சி எடுத்து வருகின்றன. அதற்காக, சன்மானத்துடன் கூடிய இலவச பயிற்சிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஜவுளி அமைச்சகத்திற்கு கீழ் இயங்கும் கைவினை கலை வளர்ச்சி குழுமத்தின் மூலம் நிறைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் குரு சிஷ்யா ஹட்ஸ்ஷிலிப் பிரஷிக்ஷான் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட நபர்களுக்கு இலவச ஓவிய பயிற்சி வகுப்புகளை மத்திய அரசு நடத்துகிறது. இதில் இலவசமாக தஞ்சை ஓவிய பயிற்சி பெறுவதுடன், ஓவிய பயிற்சிக்கு தேவையான பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். கூடவே, கற்றுக்கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 உதவி தொகையும் கிடைக்கும்.

* வேறு என்ன சலுகைகள் கிடைக்கும்?

இந்த ஓவிய பயிற்சி பெற்ற பிறகு, மத்திய அரசு சார்பாக ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். அதை பயன்படுத்தி, தேசிய அளவில் நடைபெறும் ஓவிய கண்காட்சிகளில், இலவசமாக பங்கேற்கலாம். அதில் கலந்துகொள்ள சென்று வரும் பயண செலவையும் தாக்கல் செய்து திரும்ப பெறலாம்.

அரசின் சலுகைகள் பெறும் முயற்சிகளில், தென் மண்டல இயக்குனர் பிரபாகரன் மற்றும் துணை இயக்குனர் குமரவேல் உறுதுணையாக இருப்பதால், நிறைய கலைஞர்களை சுலபமாக உருவாக்க முடிகிறது.

* இதுவரை எத்தனை நபர்களை, இதுபோன்ற பயிற்சிகள் மூலமாக ஓவியர்களாக மாற்றி இருக்கிறீர்கள்?

கடந்த பல வருடங்களாகவே இந்த முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறேன். 30 நபர்கள் வரைதான், இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற முடியும். ஆனால் எண்ணிக்கை அதிகமாக இருக்கையில், என்னுடைய சொந்த செலவில் பயிற்சி பொருட்களை வழங்கி, அவர்களுக்கும் இலவசமாகவே பயிற்சி கொடுக்கிறேன். அந்தவகையில், நிறைய ஏழை பெண்கள் என்னிடம் பயிற்சி பெற்று, இன்று அவர்களது வாழ்க்கையை சந்தோஷமாக நகர்த்தும் அளவிற்கு, முன்னேறி இருக்கிறார்கள்.

* பல வருடங்களாக, தஞ்சாவூர் ஓவியங்களோடு பயணிக்கிறீர்கள். அந்த கலையில் ஏதேனும் புதுமைகளை படைத்திருக்கிறீர்களா?

ஆம்...! நிறையவே நிகழ்த்தி இருக்கிறேன். தஞ்சாவூர் பெயிண்டிங்கில் மினியேச்சர் புதுமையை புகுத்தி, மிக சிறிய ஓவியம் ஒன்றை வரைந்தேன். இந்த ஓவியத்திற்குதான், தேசிய அளவிலாக பூம்புகார் விருது கிடைத்தது. அதேபோல, இந்திய கலாசாரத்தை தஞ்சாவூர் ஓவியத்தில் பிரதிபலிக்கும் விதமாக, பரதம், குச்சிப்புடி, கதக்களி, மோகினிஆட்டம், ஒடிசி போன்ற நடன காட்சிகளை 'கொலாஜ்' வடிவில் வரைந்து மாநில விருது வென்றேன். கூடவே, தமிழ்நாட்டு நடன கலைகளான, பொய்க்கால் குதிரையாட்டம், கரகாட்டம் மற்றும் பரதநாட்டியத்தையும் ஓவியமாக மாற்றி, விருது வென்றேன்.

* தஞ்சாவூர் ஓவியம் வரைவது செலவு மிகுந்ததா?

மற்ற கலைகளை விட, கொஞ்சம் செலவுமிகுந்ததுதான். சிறிய அளவிலான ஓவியம் வரைய, ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டும். ஆனால் ரூ. 3 ஆயிரம் வரை லாபம் பார்க்க முடியும்.

* எவ்வளவு காலத்திற்குள் இந்த கலையை கற்றுக்கொள்ள முடியும்?

ஓவிய கலையின் அடிப்படைைய கற்றுக்கொள்ள குறைந்தது, 2 மாத காலங்களாவது ஆகும். தொழில்முறை ஓவியர்களாக மாற, குறைந்தது 6 மாதங்களாவது தேவைப்படும்.

* தஞ்சை பெயிண்டிங் கலையை பிரபலமாக்க வேறு முயற்சிகளில் இறங்கி இருக்கிறீர்களா?

கலைஞர்களை உருவாக்குவது என்பதை தாண்டி, மத்திய-மாநில கல்வி நிறுவனங்களில், இதுபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்துகிறோம். சமீபத்தில் கூட, டெல்லி ஐ.ஐ.டி. மாணவர்களிடம், இக்கலையின் பெருமைகளை பதிவுசெய்தோம்.

*தஞ்சாவூர் பெயிண்டிங் வாங்க நினைப்பவர்கள் எதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?

பெரும்பாலும், வரைந்த ஓவியர்களை நேரில் பார்த்து வாங்குவது சிறந்தது. அப்படி நீங்கள் வாங்கும் ஓவியர், அரசு அங்கீகார அட்டை வைத்திருப்பவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் தங்க இழைகளுக்கு பதிலாக, போலியான பொருட்களை கொண்டும் நிறைய மோசடி வேலைகள் நடக்கின்றன. அதனால் நம்பத்தகுந்த ஓவியர்களிடம் வாங்குவது நல்லது.

* உங்களுடைய ஆசை?

பாரம்பரிய கலையான தஞ்சாவூர் ஓவிய கலையை, எந்தவிதமான கலப்படமும் இல்லாமல் அதன் பாரம்பரிய தன்மை மாறாமல், அடுத்த தலைமுறையினரிடம் பத்திரமாக கடத்துவதுதான், என்னுடைய ஆசை. மேலும் ஆதரவற்ற குழந்தைகள், காப்பகத்தில் வளரும் குழந்தைகளுக்கு, இந்த கலையை இலவசமாக கற்றுக்கொடுக்கும் ஆசையும் இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறேன்.

மேலும் செய்திகள்