< Back
சிறப்புக் கட்டுரைகள்
தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன...? வாசகர்களின் கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் பதில்
சிறப்புக் கட்டுரைகள்

தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன...? வாசகர்களின் கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் பதில்

தினத்தந்தி
|
7 Dec 2022 10:29 AM IST

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்வி களுக்கு சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007.

மின்னஞ்சல்: doctor@dt.co.in, வாட்ஸ் அப்: 7824044499

கேள்வி: எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது, என் கணவருக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் குழந்தைப்பேறு தாமதமாகிறது. இதற்கு என்ன சித்த மருந்துகள் சாப்பிட வேண்டும்? (மும்தாஜ், வாணியம்பாடி).

பதில்: தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்தப்பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அவை: 1) அமுக்கரா சூரணம் 1 கிராம், பூரண சந்திரோதய செந்தூரம் 100 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. என்ற அளவில் எடுத்து தினமும் காலை-இரவு, பாலில் கலந்து உணவுக்குப் பின்பு சாப்பிடலாம். 2) பூனைக்காலி விதைப் பொடி 1 கிராம் எடுத்து பாலில் கலந்து காலை, இரவு குடிக்கலாம். 3) நெருஞ்சில் விதைப் பொடி, நீர்முள்ளி விதைப்பொடி சம அளவில் பொடித்து பாலில் கலந்து சாப்பிடலாம்.

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அசைவ உணவுகள்: நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்திச்சாளை மீன்கள், பருப்பு வகைகள்: பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள், பழங்கள்: செவ்வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், பேரீச்சம் பழம், திராட்சை பழம், பெர்ரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளம்பழம், கீரைகள்: பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, தக்காளி, புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு மற்றும் சின்ன வெங்காயம், பூண்டு இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கம் கூடாது.

கேள்வி: தலை முடி உதிர்வுக்கு தீர்வு இருந்தால் சொல்லுங்கள்? (டி. சதீஷ் குமார், புலியூர், கடலூர் மாவட்டம்)

பதில்: தலை முடி உதிர்வுக்கு புரதச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் குறைபாடுகள், மனக்கவலைகள், தூக்கமின்மை, உடல் சூடு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, பொடுகு போன்றவை முக்கிய காரணமாக உள்ளன.

இதற்காக பயன்படுத்த வேண்டிய சித்த மருந்துகள்: 1) அயச் சம்பீர கற்பம் 200 மி.கி. அல்லது அய பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி. எடுத்துக்கொண்டு இவற்றுடன் கரிசாலை சூரணம் ஒரு கிராம் வீதம் இருவேளை சாப்பிட வேண்டும். 2) தலைக்கு செம்பருத்தி பூ தைலம் அல்லது கரிசாலை தைலம் தேய்த்து குளித்து வர வேண்டும். 3) வாரம் ஒரு முறை கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வெண் மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை சம அளவில் எடுத்து பொடித்து பாலில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர வேண்டும். இதனால் பொடுகு, உடல் சூடு நீங்கும், உடல் குளிர்ச்சி அடையும், கண் ஒளி கூடும்.

உணவில் முட்டை, பால், கருவேப்பிலை கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பச்சைப் பட்டாணி, முருங்கை கீரை, வேர்க் கடலை, பேரீச்சம் பழம், மாதுளம்பழம் இவைகளை சேர்த்துக்கொள்வது நல்லது.

கேள்வி: 53 வயதான எனக்கு தொப்பை உள்ளது. அதைக் குறைக்க சித்த மருந்து மற்றும் உணவு முறைகளை கூறவும்?. (கேசவன், திருவண்ணாமலை)

பதில்: தொப்பை வரும் போது உடல் பருமனும், இடுப்பு அளவும் கூடுகிறது. ஒருவருக்கு உடல் பருமன் உள்ளதா என்று தெரிவிப்பது 'பாடி மாஸ் இன்டெக்ஸ்'. இது 19-க்கு கீழிருந்தால் உடல் எடை குறைவு. 19-24-க்குள் இருந்தால் சரியான உடல் எடை. 24-30 க்குள் இருந்தால் அதிக உடல் எடை. 30-க்கும் மேலிருந்தால் அது உடல் பருமனை குறிக்கும். சராசரியாக ஆண்கள் 21 -25, பெண்கள் 18 - 23 அளவில் இருக்கலாம்.

தொப்பை இருக்கிறதா என்பதை இடுப்பின் அளவை வைத்து அறியலாம். இடுப்பின் அளவு அதிகமாக இருப்பது நம் ஆயுளின் அளவைக் குறைக்கும் என்பது ஒரு பொது நியதி. ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ (37 அங்குலம்), பெண்ணாக இருந்தால் இடுப்பின் அளவு 80 செ.மீ (32 அங்குலம்) இருக்கலாம். இதற்கு அதிகமாக இருப்பது அதிகரித்த உடல் பருமனைக் குறிக்கும்.

சித்த மருத்துவத்தில் 1) நத்தைச் சூரி விதைப்பொடியை காப்பி போல இருவேளை காய்ச்சி குடிக்கலாம். 2) குங்கிலியப் பற்ப மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிடலாம்.

உணவுகள்: சிறிதளவு கொள்ளு (கருப்பு, சிவப்பு, வெள்ளை ஏதாவது ஒன்று) எடுத்து அதனுடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் இவை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் வீதம் குடிக்கலாம். இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு (பூண்டை சிதைத்து வெண்ணிற துணியில் வைத்து நெருப்பில் வாட்டி எடுத்து பிழிய சாறு வரும்), எலுமிச்சை சாறு, புதினாச்சாறு இவை அனைத்தும் 2.5 மில்லி வீதம் எடுத்து 5 மில்லி தேன் கலந்து காலை, இரவு சாப்பிட கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனைக் குறைக்க உதவும். (நீரிழிவு நோயாளிகள் தேனை தவிர்க்கவும்)

எலுமிச்சம் பழச்சாறு, தேன் இவற்றை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

கேள்வி: எனக்கு சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ளது. அதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா? (சங்கீதா, கோயம்புத்தூர்)

பதில்: சினைப்பை நீர்க்கட்டி (PCOD) பிரச்சினை ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளால் ஏற்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்குரிய ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும், பெண்மைக்குரிய ஹார்மோன்கள் குறைவாக இருக்கும். இதனால் சினைமுட்டை முதிர்ச்சி அடையாமல் நீர்க்கட்டிகளாக மாறுகின்றது.

இதற்கு, குமரி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம். அடுத்து, கருஞ்சீரகம், மரமஞ்சள், சதகுப்பை மூன்றையும் சமஅளவு எடுத்து பொடித்து ஒரு டீஸ்பூன் வீதம் காலை, இரவு பனை வெல்லத்தில் கலந்து சாப்பிட வேண்டும். மேலும், கழற்சிக்காய் பொடி-500 மி.கி., மிளகு பொடி -200 மி.கி. சேர்த்து வெந்நீரில் காலை, இரவு சாப்பிட வேண்டும்.

நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். மனஅழுத்தம் இன்றி இருப்பது அவசியம்.

கேள்வி: எனக்கு 2 குழந்தைகள். அவர்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது. சரியாக சாப்பிடுவது இல்லை. ஆயில் பாத் எடுக்கலாமா? என்ன சித்த மருந்து கொடுக்கலாம் என்று சொல்லுங்கள். (ஆர்.வசந்தா, திருலோகி, தஞ்சை மாவட்டம்).

பதில்: குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும். ஆகவே குழந்தைகள் பசி எடுத்து சாப்பிட பஞ்ச தீபாக்கினி லேகியம் கால் முதல் அரை டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை கொடுக்கவும். இது பசியை தூண்டும், நல்ல சீரணமுண்டாகும். அதுபோல, நெல்லிக்காய் லேகியம் அரை முதல் ஒரு டீஸ்பூன் காலை, இரவு கொடுக்க வேண்டும். இதிலுள்ள வைட்டமின் சி, கால்சியம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

இவை தவிர பொதுவாக, திரிபலா சூரணம் குழந்தைகளுக்கு 200-500 மி.கி. அளவில் கொடுக்கலாம், இரவு வேளையில் கொடுப்பது நல்லது. இதனால் பக்க விளைவுகள் இல்லை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். அன்றைக்கு வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது.

நன்மைகள் நிறைந்த கருஞ்சீரகம்

சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான மூலிகை மருந்து கருஞ்சீரகம். 100 கிராம் கருஞ்சீரகத்தில் கார்போஹைட்ரேட் 24.9, புரதம் 26.7, கொழுப்பு 28.5 சதவீதத்தில் உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி மற்றும் லினோலெய்க் அமிலம் நிறைந்துள்ளது. இதிலுள்ள 'தைமோகுயினோன்' என்ற தாவர வேதிப்பொருள் மிகச்சிறந்த ஆன்ட்டி ஏஜிங், ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகும்.

இது உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதிலும், உடல் உள் உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சீராக்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. கருஞ்சீரக விதைகளில் உள்ள எண்ணெய் சத்து கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரித்து இதய செயல் பாட்டை ஊக்குவிக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. தைராய்டு சுரப்பி பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஓர் அருமருந்து.

இதை தினசரி உண்ணும் அளவு 1-3 கிராம். இதை வறுத்து பொடித்து டீ போல போட்டு குடிக்கலாம். அல்லது சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாவில் சேர்த்து பயன்படுத்தலாம்.

கருஞ்சீரக விதைக்கு மாதவிடாயை தூண்டும் தன்மை உடையதால் கர்ப்பிணிகள் பயன்படுத்தக்கூடாது. ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுப்பவர்கள் இதை அளவோடு எடுக்க வேண்டும், ஏன் எனில் இது ரத்த அழுத்தத்தை சிறிது குறைக்கும். கருஞ்சீரகத்தை தினமும் அளவோடு எடுத்து வந்தால் `இது ஆயுள் காக்கும் இறை மருந்து' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


மேலும் செய்திகள்