< Back
சிறப்புக் கட்டுரைகள்
உங்கள் உடம்புக்கு என்ன? உடல்நலன் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் பதில்
சிறப்புக் கட்டுரைகள்

உங்கள் உடம்புக்கு என்ன? உடல்நலன் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் பதில்

தினத்தந்தி
|
23 Nov 2022 1:13 PM IST

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்வி களுக்கு சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.


கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி:

உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி,

86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007.

மின்னஞ்சல்: doctor@dt.co.in,

வாட்ஸ் அப்: 7824044499

கேள்வி: எனது தோழிக்கு சிறுநீரகத்தில் நீர்க்கட்டி உள்ளது. அதனைக் கரைக்க என்ன மருந்து பயன்படுத்த வேண்டும்? (வ.வெற்றிச்செல்வி, அகஸ்தியன்பள்ளி)

பதில்: சிறுநீரகத்தில் நீர்க்கட்டிகள் வருவதற்கு என்று குறிப்பிடும்படியாக காரணம் எதுவுமில்லை. பாரம்பரியமாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அதில் ஒன்று குங்கிலியப் பற்பம். இதை 200 மில்லி கிராம் அளவு எடுத்து அதனுடன் ஒரு கிராம் ஏலாதிச் சூரணம் கலந்து காலை-மதியம்-இரவு மூன்று வேளை சாப்பிடலாம். அத்துடன், நண்டுக்கல் பற்பம் 200 மில்லிகிராம் எடுத்து நீர்முள்ளி குடிநீருடன் காலை - இரவு சாப்பிடலாம்.

கேள்வி: என் மனைவி மூல நோயால் (பைல்ஸ்) சிரமப்படுகிறாள். அதற்கு மருத்துவ தீர்வு சொல்லுங்கள். (தஞ்சை மாவட்ட வாசகர்)

பதில்: கருணைக்கிழங்கு லேகியம் காலை - இரவு தலா 5 கிராம் மற்றும், இரவில் 5 மில்லி வீதம் மூலக்குடார நெய் சாப்பிடலாம். மேலும் துத்திக்கீரை, பிரண்டைத் தண்டு, முள்ளங்கி, கோவக்காய் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி: தொடர்ந்து தும்மல் வருகிறது. அப்போது மூக்கு மற்றும் கண்களில் இருந்து நீர் வெளியேறுகிறது, அரிப்பும் ஏற்படுகிறது. இதற்கு நிவாரணம் சொல்லவும். (அ. காஜா நஜிமுதீன், ஏர்வாடி)

பதில்: தொடர் தும்மல் என்பது ஒவ்வாமை அல்லது அலர்ஜி, நாட்பட்ட சைனசைடிஸ் நோய்களால் ஏற்படுகிறது. இதற்கு சிறந்த சித்த மருந்துகள் உங்களுக்கு நலம் தரும். தாளிசாதிச் சூரணம் ஒரு கிராம் அளவு காலை-மதியம்-இரவு மூன்று வேளையும் தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும். அத்துடன் 3 வேளையும் தலா ஒரு துளசி மாத்திரை சாப்பிடவேண்டும். இது தவிர நொச்சி இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். அல்லது மஞ்சள் தூளிலும் ஆவி பிடித்து வர இப்பிரச்சினை நீங்கும்.

கேள்வி: என் மகன் 'சீஜோஃபிரெனியா' எனப்படும் மனச்சிதைவு நோயால் சிரமப்படுகிறான். அதற்கு சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளதா? (ஜி. முருகதாஸ், கட்டுத்தோட்டம்)

பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள மனச்சிதைவு நோய்க்கு மூளையின் டோபமைன், குளுடமேட் வேதிச்சுரப்புகளின் குறைபாடு ஒரு காரணமாக உள்ளது. இதில் கனவுகள், தவறான எண்ணங்கள், தீவிர சிந்தனைகள் காணப்படும். இதற்கு சித்த மருத்துவத்தில் மூளை செல்களை அமைதிப்படுத்தும் பிரம்மி நெய் 5 மில்லி வீதம் காலை, இரவு இரு வேளை உணவுக்குப்பின்பு சாப்பிடலாம். இத்துடன், கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை, காலை-இரவு ஒன்று வீதம் கொடுக்க வேண்டும். இரவு தூங்கும் முன்பு சடாமாஞ்சில் பொடி 1 அல்லது 2 கிராம் பாலில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் ஆழ்ந்த தூக்கம் வரும். மன குழப்பம் தீர நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இறைவழிபாடுகள், பிரார்த்தனைகள் செய்யலாம்.

கேள்வி: மூளையில் ஏற்பட்ட கட்டியை கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் நீ்க்கினேன். எனக்கு இப்போது சளி மற்றும் தலையில் நீர் கோர்த்து தலைவலிக்கிறது. சிறந்த சித்த மருந்துகளை பரிந்துரை செய்யுங்கள். (க. இசக்கியப்பன், திருநெல்வேலி)

பதில்: தலையில் நீர் கோர்த்து ஏற்படும் தலைவலியை குணப் படுத்த நீர்க்கோவை மாத்திரை உதவும். இந்த மாத்திரையை ஒன்று அல்லது இரண்டு எடுத்து வெந்நீரில் உரசி, நெற்றி, மூக்கு, கன்னங்களில் பற்று போடலாம். அதுபோல, சுக்கு, கிராம்பு இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீர் விட்டு உரசி நெற்றியில் பற்றிடலாம்.

கேள்வி: சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை முறை உண்டா? (இசிதோர், தூத்துக்குடி)

பதில்: சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உண்டு. மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கு 'கார நூல் சிகிச்சை' என்ற பாரம்பரிய அறுவை சிகிச்சை முறை உண்டு. மற்றும் சீழ்க்கட்டிகளை கீறி, சீழை வெளியேற்றி புண்ணை குணமாக்கும் சிகிச்சை முறைகள், மரு, கால் ஆணி, பாலுண்ணி இவைகளை 'சுட்டிகை' மூலம் நீக்கும் முறைகள் சித்த அறுவை சிகிச்சை முறையில் உண்டு. பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி உள்பட அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் இந்த மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன.

கேள்வி: எனக்கு சிறுநீர்ப்பையில் கல் உள்ளது. இதற்கு சித்த மருந்து மூலம் குணம் பெற முடியுமா? (எம். வடுகநாதன், வேதாரண்யம்)

பதில்: நீர்முள்ளி குடிநீர், சிறுகண்பீளைக் குடிநீர், நெருஞ்சில் குடிநீர் இவைகளில் ஏதாவது ஒன்றை ஒரு டீஸ்பூன் எடுத்து காலை, மாலை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். உணவில் சிட்ரேட் அதிகமுள்ள பழங்கள் எடுக்க வேண்டும். சிறுநீர் கற்களைக் கரைக்கும் சக்தி இந்த பழங்களுக்கு உண்டு. மேலும் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ள வாழைத்தண்டு, இளநீர், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்க்க வேண்டும். முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி மற்றும் அசைவ உணவுகளை குறைக்க வேண்டும்.

கேள்வி: எனக்கு புரோஸ்டேட் வீக்கம் (Prostate gland enlargement) தொந்தரவு உள்ளது. அதற்கு சித்த மருத்துவத்தில் என்ன தீர்வு உள்ளது? (நெல்லை வாசகர்)

பதில்: வயதான ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாட்டால் புரோஸ்டேட் சுரப்பி நெகிழ்வடைந்து சிறுநீர்ப்பாதையைச் சுருக்குகிறது. இதனால் சிறுநீர் மெதுவாக வெளியேறும். மீண்டும் உடனே சிறுநீர் கழிக்க தோன்றும். இதற்கு நெருஞ்சில் பொடி 2 முதல் 5 கிராம் வீதம் காலை-இரவு இருவேளை பால் அல்லது நீரில் சாப்பிடுங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

கேள்வி: 70 வயதான எனக்கு 25 வருடங்களாக 'சுகர்' உள்ளது. ஆங்கில மருத்துவத்தில் மாத்திரைகளும், இன்சுலின் ஊசியும் எடுத்து வருகிறேன். சித்த மருத்துவத்தில் இதற்கு மருந்துகள் உள்ளதா? (ஆர். அஸன்ஷன், நாகர் கோவில்)

பதில்: நீரிழிவு நோயில் நீங்கள் டைப் -1 வகையைச் சார்ந்தவராக இருக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன.

சீந்தில் சர்க்கரை 500 மி.கி. முதல் ஒரு கிராம் அளவு வரை காலை-மதியம்-இரவு மூன்று வேளையும் சாப்பிடலாம். இத்துடன் ஆவாரைக் குடிநீர் தயாரித்து குடிக்கலாம். 5 கிராம் அளவு ஆவாரம் பூ பவுடரை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை இருவேளை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் மதுமேக மாத்திரையை காலை, மதியம், இரவு 3 வேளையும் இரண்டு மாத்திரை வீதம் உணவுக்கு பின் சாப்பிடுங்கள். இத்துடன் தினமும் முறையாக உடற்பயிற்சி செய்யுங்கள். நார்ச்சத்துள்ள காய்கறிகள் சாப்பிடுங்கள்.

மீண்டும் அடுத்த புதன்கிழமை....!

கண்ணுக்கு கீழ் கருவளையம் நீங்க....

ஆண்கள் மற்றும் பெண்களில் சிலருக்கு கண்களின் கீழும், கன்னங்களின் இரு பக்கமும் கருவளையம் காணப்படும். இதை எளிதாக நீக்க சித்த மருந்துகள் உதவும்.

ஜாதிக்காய்-1, கோஷ்டம் சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள். (நாட்டு மருந்து கடைகளில் இவை கிடைக்கும்) இவற்றை நன்றாக பொடித்து அத்துடன், 5 பாதாம் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி சுமார் 2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் வரும் அனைத்துவித கருப்பு, கரும்புள்ளிகள் மாறும்.

வாரம் இருமுறை சோற்றுக் கற்றாழை ஜெல்லுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இது முகத்திற்கு இயற்கை சூரிய எதிர்ப்பு கவசமாகத் திகழும்.

குங்குமாதி லேபம்: இது சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். இதை இரவு நேரத்தில் முகத்தில் பூசி தூங்கலாம். காலையில் முகம் கழுவிடலாம்.

கேரட், பப்பாளி பழம், தர்பூசணி பழம், மாதுளை, பாதாம், பிளாக்ஸ் விதைகள் சாப்பிட்டு வந்தால் முகம் வசீகரமாகும்.

மேலும் செய்திகள்