< Back
சிறப்புக் கட்டுரைகள்
இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண் கலையரசி சதாசிவம்
சிறப்புக் கட்டுரைகள்

இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண் கலையரசி சதாசிவம்

தினத்தந்தி
|
28 Jun 2022 7:52 PM IST

இலங்கை கிளிநொச்சி பகுதியில் வாழும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த கலையரசி சதாசிவம் என்ற இளம்பெண், 19 வயதிற்குட்பட்ட இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியிருக்கிறார்.

இலங்கை அணிக்கு புதுமுகமாக, அதுவும் தமிழ் முகமாக தேர்வாகி இருக்கும் கலையரசியிடம் சிறப்பு நேர்காணல்...

* கிரிக்கெட்டில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுவேன். பெரும்பாலும் எங்கள் வீட்டை சுற்றியிருக்கும் அண்ணன்கள்-தம்பிகளோடு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்போம். அப்படி சிறுவயதிலேயே, கிரிக்கெட் ஆசை எனக்குள் முளைத்துவிட்டது.

* கிரிக்கெட் உலகில் உங்களுக்கு என தனி இடத்தை உருவாக்கியது எப்படி?

ஊர் பகுதியில் விளையாடி, கிரிக்கெட் கிளப் அணிகளோடு விளையாடி, பள்ளி அணியிலும் சிறப்பாக விளையாடி, மாவட்ட அணியில் இடம்பிடித்தேன். அதில் சிறப்பாக விளையாடி என் திறமையை வெளி உலகிற்கு வெளிகாட்டிக் கொண்டேன். இந்த முயற்சியில், பலரது பங்களிப்பு இருக்கிறது. உபகரணம், ஊக்கம், கிரிக்கெட் பயிற்சி... என என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஒவ்வொருவருக்கும், என்னை கிரிக்கெட் வீராங்கனையாக வளர்த்தெடுத்த பெருமை உண்டு.

* கிரிக்கெட் விளையாட்டில் உங்களுடைய பங்களிப்பு என்ன?

ஆல்-ரவுண்டர். வேகமாக பந்துவீசுவேன். சிறப்பாக பேட்டிங் செய்வேன். பீல்டிங் பணியிலும் அசத்துவேன்.

* நீங்கள் பயிற்சி பெற்ற விதத்தை விளக்குங்கள்?

பெரும்பாலும், ஆண்கள் அணியில்தான் விளையாடுவேன். அண்ணாக்களோடுதான் பயிற்சி பெறுவேன். ஒருசில சந்தர்ப்பங்களில் மட்டும், வெகு அரிதாக தோழிகளுடன் பயிற்சி களத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி, எல்லாமே அண்ணாக்களின் கிளப் அணியில்தான், கிரிக்கெட் பயிற்சி நடக்கும்.

* தமிழ்ப்பெண்ணாக, இலங்கை அணியில் இடம்பிடித்திருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

என்னுடைய பலநாள் கனவு, நனவாகி இருக்கிறது. இப்போது 19 வயதிற்குட்பட்ட பெண்கள் அணியில் 16 வீராங்கனைகளில் ஒருவராகவே தேர்வாகி இருக்கிறேன். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, இந்த அணியில் எனக்கான தனி இடத்தை உருவாக்கவும், அதன்மூலம் இலங்கை பெண்கள் அணியில் அங்கம் வகிக்கவும் ஆவலாக இருக்கிறேன்.

* இலங்கை அணியில் இடம்பிடிக்க, நீங்கள் கடந்து வந்திருக்கும் பாதை எப்படிப்பட்டதாக இருந்தது?

அதை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நிலை, எப்போதும் தள்ளாட்டம் நிறைந்ததாகவே இருக்கும். கிடைக்கும் வருமானம், வாய்க்கும் வயிற்றுக்கும்தான் சரியாக இருக்கும்.

இதைத்தாண்டிதான், குடும்பத்திற்கு தேவையான மற்ற செலவுகளை சமாளிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் சேமிப்பு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். ஆனால் அந்த சூழலிலும், என் பெற்றோர் எனக்காக கூடுதலாக பணம் செலவழித்ததற்கு நன்றி கூறுகிறேன்.

அதேபோல என்னுடைய கிராமத்தில் பயிற்சி செய்யக்கூட சமமான நிலப்பகுதி இருக்காது. சாதாரண நெட் பயிற்சிக்குக்கூட 5 கி.மீ. தூரம் பயணிக்கவேண்டும். இதற்கு இடையே, பெண் என்ற பாகுபாட்டையும் உடைக்கவேண்டியிருந்தது. கிடைக்கும் இடங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டு, கிடைக்கும் கிரிக்கெட் கிட்களை பயன்படுத்திக்கொண்டு, ஆண்-பெண் பாகுபாடின்றி கிடைக்கும் அணிகளில் விளையாடிக்கொண்டு, என்னை நானே 'அப்டேட்' செய்துகொண்டேன். அதனால்தான், பல இன்னல்களை தாண்டி இலங்கை அணி வரை முன்னேற முடிந்தது.

* உங்களுடைய இலக்கு எது?

இலங்கை பெண்கள் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறுவதே, என்னுடைய இலக்கு.

* உங்களுக்கு பிடித்த இலங்கை வீரர் யார்? இந்திய வீரர் யார்?

இலங்கை அணியில் அட்டப்பட்டு ரொம்ப பிடிக்கும். இந்தியாவில் சச்சின் ரொம்ப ஸ்பெஷல்.

* கிரிக்கெட் போட்டிகளில், நீங்கள் நினைவுக்கூரத் தக்க போட்டி எது?

மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில், 86 ரன்களை திரட்டி, 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினேன். அதுதான், என்னை இலங்கை தேசிய அணிக்கு அழைத்து வந்திருக்கிறது.

மேலும் செய்திகள்