ஜெர்மனியில் சமைத்து அசத்திய 'தமிழ் செப்'
|தமிழ்நாட்டை சேர்ந்த அஸ்வின் ஜோசப், ஜெர்மனி மக்களுக்கு பிடித்தமான சமையல் கலைஞராக மாறி இருக்கிறார்.
சமீபத்தில், ஜெர்மனியின் பிரபல டி.வி. சேனல் நடத்திய சமையல் கலை போட்டியில், கலந்து கொண்டதுடன் இந்திய உணவுகளை அசத்தலாக சமைத்து காட்டி, நடுவர்களையும், ஜெர்மன் மக்களையும் அவர் பக்கம் ஈர்த்திருக்கிறார். வேறு என்னென்ன சுவாரசியங்கள் நடந்தேறின... என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன், அவரை தொடர்பு கொண்டோம். பதில்களை, சூடாகவும், சுவையாகவும் நெல்லை தமிழில் பரிமாறினார். அவருடனான நேர்காணல் இதோ...
* நீங்கள் சமையல் கலை மற்றும் ஜெர்மனி பக்கம் ஈர்க்கப்பட்டதை கூறுங்கள்?
என்னுடைய சொந்த ஊர் நெல்லை மாவட்டம் காவல் கிணறு. இளம் வயது முதலே, சமையல் கலை மீது ஈடுபாடு அதிகம். அதனால், மும்பைக்கு சென்று ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்தேன். அங்கிருந்து ஜெர்மன் சென்று பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கவே, அதை வாழ்வாக்கி கொள்ள முயற்சித்தேன். ஏனெனில் ஜெர்மனியில் பலதரப்பட்ட சமையல் கலைகளை கற்க முடியும். கூடவே, சமையல் கலைக்கும், கலைஞர்களுக்கும் சிறப்பான வரவேற்பு இருக்கும். இதற்காக ஜெர்மனியில் தங்கி வேலை பார்த்து கொண்டே, அங்கு சமையல் கலை படிப்பு முடித்தேன். அதன் பிறகு, அங்கிருக்கும் 'ஒன் மிட்சலின் ஸ்டார்' ஓட்டலில் சில காலம் பணியாற்றினேன். இப்போது, ஒரு ஐ.டி. நிறுவனத்தின் கேண்டீனில் சமையல் கலைஞராக பணி செய்கிறேன்.
* சமையல் போட்டியில் கலந்து கொண்டது ஏன்?
சமையல் கலையை பொறுத்தவரை, புதிதான சமையல் நுணுக்கங்களை தினமும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு, சமையல் போட்டிகள் சிறப்பான பயிற்சிக் களமாக இருக்கும். அந்தசூழலில் தான், ஜெர்மன் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட உலகப்புகழ்பெற்ற சமையல் போட்டியில் கலந்து கொள்ள முயற்சித்தேன். நிறைய போட்டியாளர்கள், என்னுடன் ஆன்லைன் நேர்காணலில் மல்லுகட்டினர். இருப்பினும் போட்டியில் கலந்து கொள்ளும் 16 போட்டியாளர்களில், நானும் ஒருவனாக தேர்வாகினேன்.
* இந்த சமையல் போட்டியின் தனித்துவம் என்ன?
நம் தமிழ்நாட்டிற்குள்ளும் நிறைய சமையல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் அதற்கும், நான் பங்கேற்ற போட்டிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்ன தெரியுமா...? ஜெர்மனில் நடைபெற்ற சமையல் போட்டியில், மொத்தம் ஒரு ஸ்பூன் அளவிற்குதான் சமைக்க வேண்டும். அதுதான், அந்த சமையல் போட்டியின் சுவாரசியமும் கூட.
* அது எப்படி சாத்தியமானது?
(சிரிக்கிறார்) ஒரு ஸ்பூன் அளவிற்கு, கொஞ்சமாகத்தான் சமைக்க வேண்டும். அதில் உப்பு, புளிப்பு, காரம் சுவைகள் கனகச்சிதமாக இருந்தால்மட்டுமே, நம்மால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். நீங்கள் சுவை அளவுகளை, சரியாக கணிக்க தவறினால், அது அதிக உப்பான உணவாகவும், அதீத காரம் நிறைந்த உணவாகவுமே சுவைக்கப்படும். அதை உங்களால் ஈடுகட்ட முடியாது. ஏனெனில், இது வெறும் ஒரு ஸ்பூன் அளவிலான சமையல் மட்டும். எதையும் அதிகமாக்கி, சுவையை சரிகட்ட முடியாது. சரிகட்டவும் கூடாது. மேலும் நீங்கள் 16 நிமிடங்களுக்குள் சமைத்து முடிக்க வேண்டும்.
* இவ்வளவு சிக்கலான போட்டியில், நீங்கள் எத்தனை சுற்றுகள் தாக்குபிடித்தீர்கள்?
இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற 'முதல் இந்தியன்' என்ற பெருமையுடன், 4 சுற்றுகள் வரை முன்னேறினேன்.
* 4 சுற்றுக்களில் என்னென்ன உணவு வகைகளை சமைத்தீர்கள்?
ஒவ்வொரு சுற்றும், ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தும். அதற்கேற்ற உணவுகளைதான் நாம் சமைக்க வேண்டும். மும்பையில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்ததால், வட இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான பானி பூரியை முதல் சுற்றில் சமைத்து அசத்தினேன். இரண்டாம் சுற்றில், எங்கள் வீட்டு பேவரைட் உணவான பருப்பு கறியை சமைத்து காண்பித்தேன். மூன்றாம் சுற்றில், ஜெர்மன் மக்களின் பழங்கால உணவான ரோஸ் பிராட்டன் சமைத்தேன். 4-வது சுற்றில், ரவை போலவே கொஞ்சம் பெரிதாக இருக்கும் குஸ்குஸ் கொண்டு, பிரைடு ரைஸ் செய்து அசத்தினேன்.
* இந்திய உணவுகளை, ஜெர்மன் நடுவர்கள் ரசித்து ருசித்தார்களா?
ஆம்..! நாம் மிகவும் சாதாரணமாக நினைக்கும், பானி பூரிக்கு நடுவர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அவர்கள், அதை ருசித்து, புகழ்ந்து கொண்டாடினார்கள். அடுத்தாக, தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் சமைக்கப்படும் பருப்பு கறியை, வெகுவாக பாராட்டினார்கள். இவ்வளவு சத்தான-சுவையான உணவுகளை, சைவத்தில் சமைக்க முடிந்தால், அசைவம் சமைப்பதையும், சாப்பிடுவதையும் விட்டுவதாக கூறி, பருப்பு கறியை புகழ்ந்து தள்ளினர்.
ஜெர்மன் மக்கள், சமையலில் புளியை உபயோகிப்பதில்லை. அதனால், பானி பூரியுடன் கொடுக்கப்பட்ட புளி கரைச்சல் தண்ணீரை வெகுவாக பாராட்டினர்.
* நீங்கள் சமைத்தது போக, இந்திய உணவுகள் பற்றிய புரிதல் ஜெர்மன் மக்களுக்கு எந்தளவிற்கு இருக்கிறது?
ஜெர்மன் நாட்டில், வட இந்தியர்கள் நடத்தும் ஓட்டல்கள்தான் அதிகம். குறிப்பாக, இந்தியர்கள் என்ற போர்வையில் நிறைய பாகிஸ்தானியர்கள் ஓட்டல்களை நடத்துவதால், இங்கு தென்னிந்திய உணவுகள் மிகமிக குறைவு. அதுபற்றிய புரிதலும், ஜெர்மானியர்களுக்கு மிக குறைவுதான்.
* தென்னிந்திய உணவுகளை, ஜெர்மனில் பிரபலப்படுத்தும் எண்ணம் இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது. ஜெர்மனில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி 'கிறிஸ்துமஸ் மார்க்கெட்' ஒன்று அமைக்கப்படும். அதில் இட்லி, தோசை, மெதுவடை போன்ற தென்னிந்திய வகை உணவுகளை சமைத்து, காட்சிப்படுத்த அழைப்பு வந்திருக்கிறது. அதற்காக, தயாராகி வருகிறேன். திட்டமிட்டபடி, அது நடக்கும்போது தென்னிந்திய உணவுகளையும், ஜெர்மன் மக்கள் ருசிப்பார்கள். நம்முடைய உணவு கலாசாரத்தை உணர்ந்து கொள்வார்கள். மேலும் ஜெர்மனியில், உணவுகளை ரசிக்கும்படி காட்சிப் படுத்துவது அவசியம். அதை 'பிளேட்டிங்' என்பார்கள். அந்தவகையில் தென்னிந்திய உணவுகளை, சமைத்து அதை கலைநயமாக ரசிக்கும்படி 'பிளேட்டிங்' செய்யும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறேன்.
* வெளிநாட்டவர்கள், இந்திய உணவுகளை அதிகம் ரசிப்பதேன்?
எளிமையான, பொருட்களை கொண்டு சுவையான உணவு சமைப்பதை பல வெளிநாட்டவர்களும் வியந்து பார்க்கிறார்கள். பருப்பு, உளுந்து, அரிசி... இப்படி சைவத்தில், பல வெரைட்டி சமைத்து அசத்துவது, அவர்களுக்கு என்றுமே வியப்பாக இருக்கிறது.
* உங்களுடைய இலக்கு எது?
எல்லா வகையான சமையல் கலைகளையும் கற்பது முடியாத காரியம் என்றாலும், என்னால் முடிந்தவரை கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஏனெனில் சமையல் முடிவில்லாத கலை. என்றைக்கும் அழிவில்லாத கலை.