மாணவ-மாணவிகளுக்கு இலவச போட்டித்தேர்வு வகுப்பு எடுக்கும் 'தாசில்தார்'
|விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் அதே பகுதியில் தாசில்தாராக பணியாற்றி வருவதுடன், கடந்த 15 வருடங்களாக இளைஞர்-இளம் பெண்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக அளித்து, அவர்களை அரசு பணியாளர்களாக மாற்றியிருக்கிறார்.
ஆம்...! இதுவரை இவரது பயிற்சி பட்டறையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப்பணியாளர்கள் உருவாகி உள்ளனர். இப்போதும், வார இறுதி நாட்களில் காலை-மாலை என 'பேட்ஜ்' கணக்கில், கிட்டத்தட்ட 4 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களது ஒரே நோக்கம், அரசுப்பணியில் சேருவதுதான்.
மாரிமுத்து மற்றும் அவரது அரசுப்பணி பயிற்சி பட்டறை பற்றி கேள்விப்பட்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமையில், நேரில் சந்திக்க சென்றோம். விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தென்னை ஓலையால் வேயப்பட்ட கூரையின் அடியில் சுமார் 2 ஆயிரம் இளைஞர்கள், இளம்பெண்கள் முன்னால் மைக் பிடித்து போட்டித்தேர்வை எதிர்கொள்வது பற்றி குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்தார், மாரிமுத்து.
அவ்வளவு பெரிய கூட்டத்தில், மாரிமுத்துவின் பேச்சு மட்டுமே 'கணீர்' என கேட்டது. எந்த ஒரு சலசலப்பும் இல்லை. நம்மை பார்த்ததும், மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
சற்று நேரத்தில் மதிய உணவு இடைவேளையும் வந்தது. வகுப்பில் பங்கேற்க வந்திருந்த 2 ஆயிரம் பேருக்கும் மாரிமுத்துவின் ஏற்பாட்டில் மதிய உணவு தயாராக இருந்தது. ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் தனித்தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து, உணவைப்பெற்று சாப்பிட்டனர்.
பின்பு மாரிமுத்து, லேசான புன் சிரிப்புடன் பேசத்ெதாடங்கினார். "போட்டித்தேர்வுக்கான வகுப்பை தொடங்கும்போது முதல் சில நிமிடங்கள் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை தெளிவுப்படுத்துவேன்... அதாவது, 'நாம் எதற்காக இங்கு கூடியுள்ளோம்?', 'நம் நோக்கம் என்ன?', அதில் மட்டுமே நம் கவனம் இருக்க வேண்டும் என்பேன். அதை இறுதி வரை கடைப்பிடிக்குமாறு கூறுவேன். பிறகுதான் வகுப்பு தொடங்கும் என்றார். அதை தொடர்ந்து நாம் எழுப்பிய சில கேள்விகளுக்கு, மாரிமுத்து பதில் அளித்தார். அவை இதோ...
அரசுப்பணிக்கு நீங்கள் வர காரணம் என்ன?
என் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி. அங்கு நான் 7-ம் வகுப்பு படித்தபோது, எங்கள் ஊரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் பிளவக்கல் அணை கட்டப்பட்டது. இதற்காக எங்கள் ஊர் வழியாக அதிகாரிகள் ஜீப்பில் செல்வார்கள். அடிக்கடி அவர்களைப்பார்த்து நாமும் ஒருநாள் அவர்களை போல தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஜீப்பில் உயரிய பதவியில் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. லட்சியமாகவும் அதை வைத்துக்கொண்டேன்.
அரசுப்பணிக்கான பயணம் சுலபமாக இருந்ததா?
என் வாழ்வில் வறுமையின் மூலம் ஒருபக்க கதவை இறைவன் அடைத்திருந்தாலும், கல்வி என்ற மற்றொரு பக்க கதவை திறந்திருந்தார். எனது பெற்றோர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் தந்தை பல ஆண்டுகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில் எனது தாயார்தான் என்னையும், உடன் பிறந்தவர்களையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். எங்கள் வீட்டுத்திண்ணையில் என் தந்தை கட்டில் போட்டு படுத்திருப்பார். மீதி இருக்கும் இடத்தில் நான் இரவு நேரத்தில் தூங்குவேன். என் உடலில் பாதி, திண்ணையில் அடங்காமல், தெருவில் கால் நீட்டி படுத்திருப்பேன். வறுமைதான் என்னை இந்த பதவி வரை கொண்டு வர தூண்டியது.
4 ஆயிரம் ேபருக்கு தனி ஒருவராக உங்களால் எப்படி சொல்லிக்கொடுக்க முடிகிறது?
வறுமையின் தாண்டவத்தில் சிக்கி ஒருவழியாக போராடி அரசுப்பணியில் சேர்ந்தேன். என்னைப்போல ஏராளமானவர்கள் வறுமையில் வாழ வழியின்றி இருப்பதை உணர்ந்தேன். நாம் மட்டும் சமுதாயத்தில் உயர்ந்தால் எந்த பலனும் இல்லை. நம்மால் முடிந்த அளவுக்கு பிறருடைய வாழ்வை வளமாக்கினால்தான் நமது வாழ்வு முழுமை பெறும் என்பதை உணர்ந்தேன். நமது இதயம் பிறருக்காக துடிக்கட்டும் என்ற வாசகத்தையும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
?எப்போது தொடங்கியது இந்த பயிற்சி பயணம்?
17 ஆண்டுகளுக்கு முன்பு, இலவச பயிற்சி வகுப்பை சிறிய அளவில் தொடங்கினேன். குறிப்பாக, போட்டித்தேர்வுகளுக்கு முறையாக பயிற்சி பெற இயலாதவர்களையே தேர்வு செய்து, பயிற்சி கொடுத்தேன். டி.என்.பி.எஸ்.சி., ரெயில்வே, வங்கித்தேர்வு என பல்வேறு தேர்வுகளுக்காகவும் தற்போது 4 ஆயிரம் பேர் என்னிடம் பயிற்சி பெறுகின்றனர். காலை-மாலை என பகுதி வாரியான தேர்வுகளும் நடக்கிறது.
தனி ஒருவராக, ஆயிரக்கணக்கான மாணவர்களை சமாளித்து விடுகிறீர்களா?
ஆம்..! எங்களது நோக்கமும், குறிக்கோளும் ஒன்றுதான். போட்டித்தேர்வுகள் பற்றி சொல்லிக்கொடுப்பது என்னுடைய குறிக்கோள். அதை படித்துக்கொள்வது, அவர்களுடைய குறிக்கோள். எங்களது நோக்கமும், குறிக்கோளும் சரியாக பொருந்துவதால், சமாளிப்பதில் எந்தவிதமான சிரமமும் இல்லை. மேலும் அனைத்து பாடங்களையும் நான் ஒருவனாகவே சொல்லிக் கொடுக்கிறேன். தனித்தனி ஆசிரியர்கள் எல்லாம் கிடையாது.
வணிக ரீதியிலான பயிற்சிக்குத்தான் ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி நபர்கள் தேவைப்படுவார்கள். நானோ, இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். மேலும் பாடத்திற்கு ஒருவர் நியமிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அனைத்து பாடங்களையும் நானே நாள்தோறும் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு, இரவு 10 மணிக்கு மேல் அடுத்த வாரம் நடத்த உள்ள பாடங்களுக்கான குறிப்புகளை தயார் செய்வேன். நள்ளிரவு வரை இந்த பணி நடக்கும். அதன்பின்தான் உறங்கச்செல்வேன்.
கற்கும் மாணவர்களிடம் நீ்ங்கள் அடிக்கடி சொல்லும் அறிவுரை?
என்னிடம் பயிற்சிக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள், வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அவர்களிடம், அரசுப்பணிக்கு செல்பவர்கள் லஞ்சம் பெறக்கூடாது என்பதை ஒவ்வொரு வகுப்பிலும் அறிவுறுத்துவேன். பணம் பெற்றால்தான் லஞ்சம் என்பதில்லை. அரசு ஊழியர் ஒருவர், தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களிடம் ஒரு தம்ளர் தண்ணீர் கேட்டு வாங்கி குடித்தால் அதுவும் லஞ்சம்தான்.
எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் உன் கடமையை செய்து வர வேண்டும் என்பதை அடிக்கடி அறிவுறுத்துவேன். 'மனச்சாட்சிதான் கடவுளுக்கும் மேல்' என்பதை என் மாணவர்களின் மூளைக்குள் பதியுமாறு சொல்லி வைத்திருக்கிறேன்.
?அரசுப்பணியிலும், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி பணியிலும் பிசியாக இருப்பதால், குடும்பத்தினருடன் செலவிட நேரம் இருக்கிறதா?
என்னுடைய வழக்கமான அரசுப்பணிகளை தவறாமல் செய்துவிடுவேன். அதன்பின் போட்டித்தேர்வு பயிற்சிக்கு தயாராவேன். என்னிடம் பயிற்சி பெற்றவர்களில் இதுவரை 10 ஆயிரம் பேர் அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.
இதன்மூலம் என்னை அடையாளம் கண்டு, விருதுகள் வழங்கி கவுரவிப்பார்கள். இந்த விழாக்களுக்கு எனது மனைவி, குழந்தைகளை அழைத்துச்செல்வேன். அவர்களையும் பாராட்டும்படி செய்துவிடுவேன். இதன்காரணமாக சொந்த வாழ்க்கையில் சில இன்பங்களை பறிகொடுத்தாலும், இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்களால் என் குடும்பத்தினர் சிலாகித்துப் போவார்கள்.
?பயிற்சிக்கு வருபவர்களுக்கு இலவச உணவு அளிப்பது சாத்தியமானது எப்படி?
பல ஆண்டுகளாக என் மனதில் இருந்ததுதான் இந்த திட்டம். அதற்கான நேரம் இப்போதுதான் வந்துள்ளது. கடந்த 4-ந்தேதியில் இருந்து போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவி களுக்கு கட்டணமில்லா உணவு வழங்கும் இந்த திட்டத்திற்கு 'வள்ளலார் திட்டம்' என பெயரிட்டுள்ளேன்.
இங்கு படிக்க வருபவர்களில் பெரும்பாலானவர்கள், என்னைப் போன்ற வறுமையின் பிடியில் சிக்கியவர்கள்தான். தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து போக்குவரத்து செலவு செய்து படிக்க வருகின்றனர்.
அவர்களின் செலவை குறைக்கும் வகையில் உணவுக்கான நிதியை நாமே செலுத்தினால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதால்தான் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
?ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகளை ஒருங்கிணைப்பதும், அவர்களை வழிநடத்து வதும் கடினமாக இல்லையா?
என்னிடம் பயிற்சிக்கு வரும் மாணவ-மாணவி களிடம் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வலியுறுத்துவேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை வகுப்புகள் நடக்கும். முடிவில், ஏராளமான அரசு பஸ்கள் வகுப்பு நடக்கும் இடத்திற்கு வந்து மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்கின்றன. இந்த பஸ்களில் முன்பக்கம் மாணவிகள் மட்டும் அமர்ந்து பயணிக்க வேண்டும். பின்பகுதியில்தான் மாணவர்கள் இருக்க வேண்டும். சில பஸ்களில் பெண்கள் மட்டும் ஏற அனுமதிப்பேன்.
நானும், எனக்கு உதவியாக இருப்பவர்களும் அனைத்து மாணவ, மாணவிகளையும் எந்தவொரு குழப்பமும் ஏற்படாத வகையில் தங்களின் வீடுகளுக்கு செல்ல உரிய வசதிகளையும் செய்கிறோம். அறிவார்ந்த சமூகத்தை ஏற்படுத்துவதில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் என்னிடம் இருக்கும். அதற்கான திட்டத்தை தெளிவாக வகுத்து அதன்படி செயல்படுகிறேன்.
?பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் உங்கள் அடுத்தத்திட்டம் என்ன?
இன்னும் சில ஆண்டுகளில் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன். பின்னர் முழு நேரமும் எனது பயிற்சி வகுப்பை நடத்தும் திட்டம் உள்ளது. தற்போதைய எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமும் உள்ளது. ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றி வைப்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். என்னுடைய கடைசி மூச்சு வரை மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவேன்.
?மாணவர்களை எப்படி ஊக்கப்படுத்துகிறீர்கள்?
துக்கத்தையும், தூக்கத்தையும் தூக்கி எறி.... சிந்திக்க சில நிமிடங்கள்..... இதுபோன்ற வாசகங்களை அடிக்கடி எடுத்துரைப்பேன். ஒவ்வொருவரும் தன் எதிர்கால திட்டத்தை சிந்திக்க வேண்டும். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளில் நாம் என்னவாக இருப்போம்.... 15 ஆண்டுகளில் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற சிந்தனை மிக முக்கியம் என்பதை வலியுறுத்துவேன்...
இதுவரை கைதட்டிய நீங்கள்... கைதட்டல்களை பெறுவது எப்போது.... மேடைக்கு முன்புறமாக அமர்ந்து வந்தவர்கள், மேடையில் ஏறுவது எப்போது....? விரக்தியை வேரறுப்போம்.. உற்சாக ஊற்றாய் இருப்போம். நம்மை உயர்த்துவது எப்போதும் நம் எதிரிகள்தான்.... எனவே நாம் வெல்ல எதிரி வேண்டும் போன்ற வாசகங்களை அடிக்கடி உச்சரிப்பேன்.
?போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குவதற்காக, உங்களுக்கு கிடைத்த பல பதவி உயர்வுகளை தவிர்த்ததாக சொல்கிறார்கள். உண்மைதானா?
ஆம்...! ஏற்கனவே எனக்கு உதவி கலெக்டர் பதவி உயர்வு வந்தது. ஆனால் போட்டித்தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காகவே எனது பதவி உயர்வை துறந்தேன். அரசுப்பணியில் பதவி உயர்வுகளை அனுபவிக்கும் எண்ணம் வந்தால், எனது இலவச பயிற்சி வகுப்பு கனவு தகர்ந்துவிடும். இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் சொல்லி அனுமதி கேட்பேன்.
என்னுடைய பயிற்சி வகுப்புகள் குறித்து பிற அரசுப்பணியாளர்களிடம் உயர் அதிகாரிகள் கேட்டு தெரிந்து கொண்டு, எனக்கு பல்வேறு வகையில் உதவியாகவும் இருக்கின்றனர். அவர்களின் கருணையுடன்தான் இந்த பயிற்சி வகுப்பை தொடர்ந்து என்னால் நடத்தி வர முடிகிறது.
இளைஞர்களின் வாழ்வை வளமாக்குவதையே லட்சியமாகக்கொண்டு செயல்படும் தாசில்தார் மாரிமுத்துவின் நோக்கம் நிறைவேற நாமும் வாழ்த்துவோம்.