நீச்சல் சாம்பியன்
|திருநெல்வேலியை சேர்ந்தவரான பெனடிக்டன் ரோஹித், தேசிய மற்றும் மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் அசத்தி வருகிறார். சமீபத்தில் கூட, குஜராத்தில் நடந்துமுடிந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், 1 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றார். இவரிடம் சிறுநேர்காணல்.
நீச்சல் பயிற்சியில், நீங்கள் குதித்தது எப்போது?
நான் பிறக்கும்போதே, என்னுடைய வலது கால் தொடை எலும்பு முறிந்திருந்தது. அது காலப்போக்கில் குணமடைந்துவிட்டாலும், மருத்துவர்கள் என்னை ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட அறிவுறுத்தினர். அதன்படியே, என் உறவினரின் வழிகாட்டுதலின்படி, 1-ம் வகுப்பில் இருந்து நீந்த தொடங்கினேன். இப்படிதான் நீச்சல் பயிற்சிகள், என் வாழ்க்கைக்குள் நுழைந்தன.
முழு ஆர்வத்துடன் நீந்த ஆரம்பித்தது எப்போது?
4-ம் வகுப்பு படிக்கையில், மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டேன். எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி பங்கேற்றாலும், அந்த போட்டியில் தங்கம் வென்றேன். அதுதான் என் வாழ்க்கையில், திருப்பத்தை ஏற்படுத்தியது. நீச்சல் பயிற்சி மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. இந்த வெற்றிக்கு பிறகு, நிறைய போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன்.
இதுவரை எத்தனை போட்டிகளில் பங்கேற்று இருப்பீர்கள்?
மாநில அளவிலான போட்டி, தேசிய அளவிலான போட்டி என கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். இதில் பெரும்பாலானவற்றில் வெற்றிகளையும், சில போட்டிகளில் தோல்வி அனுபவங்களையும் பரிசாக பெற்றேன்.
சமீபத்தில் நடந்து முடிந்த நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி அனுபவங்களை பற்றி கூறுங்கள்?
நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியாவின் ஒலிம்பிக்ஸ் என்பார்கள். ஏனெனில் இது 4 வருடங்களுக்கு ஒருமுறை, இந்தியாவில் நடக்கும். இதில் வயது வித்தியாசமின்றி, 'ஓபன் கேட்டகிரி'யில் நிறைய திறமையான போட்டியாளர்களுடன் போட்டியிடலாம். ஏன்..! ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்கள், ஆசிய சாம்பியன்கள்கூட இந்த போட்டியில் நம்முடன் சேர்ந்து பங்கேற்பர். அதனால்தான், இந்த போட்டிகள் ரொம்பவே ஸ்பெஷல்.
நமக்கு ரோல் மாடலாக வாழும் சாம்பியன்களுடன் கூட போட்டி போடலாம். அவர்களுடன் பழகலாம். போட்டி நுணுக்கங்களை கற்றுக்கொள்ளலாம். இத்தகைய நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில்தான், நான் 4 பதக்கங்களை வென்றேன். இதில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண் கலம் பதக்கங்கள்.
நீங்கள் எதிர்கொண்ட நீச்சல் போட்டிகளில், சவாலானது எது?
நான் சிறுவயதில் இருந்தே நீச்சல் போட்டிகளில் பங்கேற்கிறேன். இதுவரை நான் பங்கேற்ற எல்லா போட்டிகளுமே, சவால் நிறைந்தவைதான். நீச்சல் போட்டிகளை பொறுத்தவரையில், மைக்ரோ நொடியில்தான் வெற்றியும்-தோல்வியும் தீர்மானிக்கப்படும். அந்தவகையில், மைக்ரோ நொடிகளில் நிறைய வெற்றிகளையும் ருசித்திருக்கிறேன். அதே மைக்ரோ நொடியில், நிறைய தோல்விகளையும், தகுதி பெறும் வாய்ப்புகளையும் இழந்திருக்கிறேன்.
யாரிடம் பயிற்சி பெறுகிறீர்கள்?
பெங்களூருவில் இயங்கும் டால்பின் அகாடெமியில் பயிற்சி பெறுகிறேன். இங்கு நிறைய திறமைசாலிகள் பயிற்சி பெறுகிறார்கள். குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்களும், இங்கு பயிற்சி பெறுவதால், அவர்களுடன் சேர்ந்து நீச்சல் நுணுக்கங்களை வளர்த்து வருகிறேன்.
உங்களுடைய ஆசை, லட்சியம் எது?
எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் ஒரே ஆசை, ஒரே லட்சியம்தான் இருக்கும். அது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, தங்கள் தாய் நாட்டிற்காக பதக்கம் வெல்வதாக இருக்கும். எனக்கும், அப்படி ஒரு ஆசை, லட்சியம் இருக்கிறது. நிச்சயம் அதை நோக்கி முன்னேற முயற்சிப்பேன்.
விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்துகிறீர்கள். பெற்றோரின் ஊக்கம் கிடைக்கிறதா?
நிறையவே கிடைத்திருக்கிறது. என்ஜினீயரிங் படித்தாலும், நீச்சல் பயிற்சிகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதற்கு என் பெற்றோரும் பக்கபலமாக இருக்கிறார்கள். என்னுடைய வெற்றி-தோல்விகளை அவர்களும் பகிர்ந்து கொள்வதுடன், என்னை அடுத்தடுத்த கட்டத்திற்கு ஊக்கப்படுத்துகிறார்கள். கூடவே, நீச்சல் பயிற்சி பெறுவதும், நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதும் செலவு நிறைந்த ஒன்று. அப்படி இருந்தும், என்னை பாசிட்டிவாக வழிநடத்துகிறார்கள்.
எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் ஒரே ஆசை, ஒரே லட்சியம்தான் இருக்கும். அது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, தாய் நாட்டிற்காக பதக்கம் வெல்வதாக இருக்கும். எனக்கும், அப்படி ஒரு ஆசை, லட்சியம் இருக்கிறது.