< Back
சிறப்புக் கட்டுரைகள்
தரிசு நிலங்களில் வளரும் சூப்பர் மரங்கள்..!
சிறப்புக் கட்டுரைகள்

தரிசு நிலங்களில் வளரும் சூப்பர் மரங்கள்..!

தினத்தந்தி
|
19 March 2023 7:51 PM IST

வேளாண் காட்டு மரங்களிலும் விரைவாக வளர்ந்து கணிசமான லாபம் தரக்கூடிய மரங்கள் எவை என்று சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி செய்யப்பட்டது.

வேளாண் காடுகளை விவசாயிகள் வளர்ப்பது புதிதல்ல... தரிசு நிலங்களின் வளத்தைக் கூட்டுவதற்காகவும், வயல் வெளிகளின் பாதுகாப்பிற்காகவும் ஆங்காங்கே தென்னை, பனை, மா, கொய்யா மரங்களை வளர்ப்பது நம் ஊர்களில் வழக்கம். பொதுவாக நீர்வளம் குறைந்த இடத்திலும் செழித்து வளரக் கூடிய மரங்களையே இதற்காக தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட வேளாண் காட்டு மரங்களிலும் விரைவாக வளர்ந்து கணிசமான லாபம் தரக்கூடிய மரங்கள் எவை என்று சமீபத்தில் ஓர் ஆராய்ச்சி செய்யப்பட்டது.

ஆறு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் வேளாண் காடுகளுக்குப் பொருத்தமான பத்து வகையான மரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை தரிசு நிலங்களில் வளர்க்கப்பட்டன. ஆறு ஆண்டுகள் கழித்து இவற்றில் அதிக உயரம் வளர்ந்த மரமாக யூகலிப்டஸ் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த இடத்தில் மான் காது வேல மரம் தன் உயரத்தைப் பதிவு செய்தது.

அதேபோல யூகலிப்டஸ் மரம் நன்றாக தடித்தும், அதற்கு அடுத்தபடியாக மான் காது வேல மரமும், மூன்றாவதாக 'கேஸியா சையாமியா' என்ற பொன்னாவாரம் மரமும் நன்றாக பருத்து காணப்பட்டது. இம் மூன்று மரங்களும் தரிசு நிலங்களில் கூட மண்ணில் உள்ள உரச்சத்து, நீர், இத்துடன் சூரிய ஒளி மற்றும் வெப்பத்தை திறம்படப் பயன்படுத்துவதால் ஏனைய மரங்களை விட அதிக வளர்ச்சியையும், பருமனையும் அடைவது தெரிய வந்தது.

மேலும் இம்மரங்களை பயிரிட குறைவான இடுபொருட்களே தேவைப்படுகின்றன. மரக்கன்றுகளை நட்ட பிறகு வெட்டும் வரை எந்த ஒரு செலவும் நிலத்துக்காக செய்ய வேண்டியதில்லை.

முக்கியமாக நீர்ப் பாசனம் தேவையே இல்லை. தரிசு நிலங்களில் இம்மரங்களைப் பயிர் செய்வதால், புயல், மழை போன்ற சேதத்தில் இருந்து பயிர் காப்பாற்றப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தரிசு நிலங்களில் சரியான நேரத்தில், சரியான அளவில் மழை பெய்யாதபோதும் கூட இம்மரங்கள் தரக்கூடிய நல்ல லாபம் விவசாயியை கண் கலங்காமல் காப்பாற்றுகிறது.

மேலும் செய்திகள்