பாலிவுட் சினிமாவில் மற்றொரு நட்சத்திர ஜோடியின் வாரிசு
|பாலிவுட் சினிமாவில் சில நட்சத்திர ஜோடிகளின் மகள்கள், தற்போது புதிய வரவாக சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். இவர்களில் இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ்பட்- நடிகை சோனி ரஸ்தான் ஆகியோரின் மகளான அலியாபட் மிகவும் முக்கியமானவர்.
2012-ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் நுழைந்த இவர், தற்போது அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய சக நடிகரான ரன்பீர்கபூரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் நடிகர் சோயிப் அலிகான்- நடிகை அம்ரிதா சிங் ஜோடியின் மகள் சாரா அலிகான். இவர் 2018-ம் ஆண்டு 'கேதார்நாத்' என்ற படத்தின் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை 6 படங்கள் நடித்துள்ள இவர், 2021-ம் ஆண்டு வெளியான 'அத்ராங்கி ரே' என்ற இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். தற்போது இவருக்கு 6 படங்கள் கைவசம் உள்ளது.
மற்றொரு நட்சத்திர ஜோடியின் மகள், ஜான்வி கபூர். இவர் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் - நடிகை ஸ்ரீதேவி தம்பதியரின் மகள் ஆவார். 2018-ம் ஆண்டு 'தடக்' என்ற படத்தின் வாயிலாக, இவரும் பாலிவுட் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இதுவரை 5 படங்களில் நடித்துள்ள இவருக்கு, எந்தப் படமும் பெரியஅளவில் போகவில்லை என்றாலும், இரண்டு படங்கள் கைவசம் உள்ளது.
இவர்கள் இருவர் தவிர பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டேவும், சில படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். பாலிவுட்டின் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சக்தி கபூரின் மகள் ஸ்ரத்தா கபூரும் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்த வரிசையில் நட்சத்திர ஜோடியில் இன்னொரு வாரிசாக விரைவில், பாலிவுட் சினிமாவில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு, நடிகர் அஜய்தேவ்கன்- நடிகை கஜோல் தம்பதியரின் மகளான நைஷா மீது ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி, 20-வது வயதில் அடியெடுத்து வைக்கப்போகும் நைஷா, சமீபத்தில் ஒரு போட்டோ சூட் நடத்தியிருக்கிறார்.
மிதமான கவர்ச்சியோடும், நிறைய அழகோடும் எடுக்கப்பட்ட இந்த போட்டோ சூட், பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் நைஷாவின் அழகானது, 1990-களில் பாலிவுட் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய கஜோலின் சாயலிலேயே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். நைஷா வெகு விரைவில் சினிமா உலகிற்குள் நுழையலாம் என்றும், அதற்கான முன்னெடுப்புதான இந்த போட்டோ சூட் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.