பேட்டரி கார் ஓட்டும் திருநங்கை சுப பிரியா
|திருநங்கை சுப பிரியா... பேட்டரி கார் டிரைவர். 32 வயதான அவர் வெள்ளை நிற சீருடையில் அழகாக, மிடுக்காக காட்சி அளிக்கிறார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் முதியவர்களை புன்முறுவலுடன் அணுகி, பஸ் நிறுத்தத்தில் இருந்து கலெக்டர் அலுவலக வாசல் வரை பேட்டரி காரில் அழைத்து வருகிறார்.
ஸ்டைலாக பேட்டரி கார் ஓட்டும் அவரிடம் இந்த பணியில் எப்படி சேர்ந்தீர்கள்?, மகிழ்ச்சியாக வேலை நகர்கிறதா?, என்று பல விஷயங்களை கேட்டோம். அதற்கு அவர் மனம் திறந்து அளித்த பதில்கள் இதோ..
''எனது சொந்த ஊர் முத்தையாபுரம். பி.காம். பட்டப்படிப்பு படித்து உள்ளேன். டிரைவிங், தையல் பயிற்சியும் பெற்று இருக்கிறேன். முதலில் நான் மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் குப்பை வண்டி ஓட்டும் பணியை செய்து வந்தேன். அந்த பணியை நிரந்தரம் செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். அப்போது கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரி எனக்கு கலெக்டர் அலுவலகத்தில் பேட்டரி கார் ஓட்டும் வேலையை கொடுத்தார். மாதம்தோறும் தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் கிடைக்கிறது'' என்று பொறுப்பாக பேசும் சுப பிரியா, சமூக பணியிலும் நாட்டம் கொண்டவர்.
வாழ்வாதாரத்திற்கான வேலைகளை செய்துகொண்டே, சமூக பணிகளை செய்து வருகிறார். சாலையோரம் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோர்களை மீட்டு இல்லங்களில் சேர்ப்பது, ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பது போன்ற பணிகளால் ஈர்க்கப்படுகிறார்.
''சமூக பொறுப்பும், அக்கறையும் இருப்பதால் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களை கலெக்டர் அலுவலகத்துக்கு வாகனத்தில் அழைத்து வரும் பணி கிடைத்தபோது அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன். இந்த பணி எனக்கு மிகுந்த மனநிறைவையும், மக்களிடத்தில் மரியாதையையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
இந்த பணியில் சேர்ந்த பிறகு கனரக வாகனம் ஓட்டுனர் பயிற்சி பெற்று உரிமமும் வாங்கி உள்ளேன். தமிழகத்தில் கனரக வாகனங்களை இயக்குவதற்கு உரிமம் பெற்ற முதல் 3 திருநங்கைகளில் நானும் ஒருவர் என்பது பெருமையாக உள்ளது'' என்றவர், திருநங்கைகள் மீதான கண்ணோட்டம் மாறிவருவதை விளக்கினார்.
''திருநங்கைகள் என்றாலே தாழ்ச்சியுடன் பார்க்கும் நிலை மாறி மரியாதை கிடைக்கிறது. அதற்கு நானும் ஒரு காரணமாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதுதான், எங்களுடைய திறமைகளை நிரூபிக்க முடியும். கடந்த 5 ஆண்டுகளாக, சமூகம் நிறையவே மாறிவிட்டது. நிறைய திருநங்கைகளை மனமார ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எங்களையும் நம்பி, வேலைவாய்ப்பு வழங்குகிறார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில், பெற்றோரும் எங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் நாங்களும் குடும்பத்தோடு வசிக்கும் நிலை உருவாகும்'' என்று சமூக அக்கறையுடன் பேசினார்.
''திருநங்கைகள் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. பாராட்ட வேண்டிய விஷயம் என்றாலும், அவை குறுகிய கால நலத்திட்டங்களாக இல்லாமல், நிரந்தர கால பணியாகவும், நிரந்தர முன்னேற்ற திட்டங்களாகவும் இருக்கும்பட்சத்தில், எங்களுடைய வாழ்வாதாரமும், நலனும் நிரந்தரமாக காப்பாற்றப்படும்'' என்றவர், தற்போது ஒப்பந்த அடிப்படையில் தான் செய்து வரும் ஓட்டுனர் பணியை நிரந்தர பணியாக மாற்றித்தர கோரிக்கை விடுத்துள்ளார். இவருக்கு நீண்ட கால ஆசை ஒன்றும் இருக்கிறது.
''எனக்கு கலெக்டரின் காரை ஓட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருக்கிறது. அதற்கான சாத்தியக்கூறுகளை அரசு, ஏற்படுத்தி கொடுக்கும்பட்சத்தில், ஒட்டுமொத்த திருநங்கைகளையும் பெருமைப்படுத்தியதாக இருக்கும்'' என்று கூறிய சுப பிரியா 'பை... பை...' என்று அழகாக கை அசைத்து விட்டு பேட்டரி காரில் பறந்தார்.