என் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன் - ராபர்ட் கிளாரன்ஸ் இர்வின்
|உலகப் புகழ்பெற்ற வன உயிர்களின் காதலர் ஸ்டீவ் இர்வின். காட்டுயிர்களைப் பாதுகாப்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இயற்கை ஆர்வலர். சிறுவயதிலேயே முதலைகளை வெறும் கைகளால் பிடித்து சாகசம் காட்டியவர்.
வன உயிர்களை பாதுகாப்பதற்காகவே உழைத்துக்கொண்டிருந்த ஸ்டீவ் இர்வின், 2006-ம் ஆண்டு இறந்துபோனார். அவரது இறப்பு வன உயிர் காதலர்களுக்கு பெரும் இழப்பு என்றாலும், அவரது மகன் ராபர்ட் கிளாரன்ஸ் இர்வின் தன்னால் முடிந்தவரை அதை சரிகட்டி வருகிறார். தந்தையை போலவே இவரும் வன உயிர் காதலர். தந்தையை போலவே, முதலைகளை லாவகமாக கையாள்வதில் கெட்டிக்காரர். இவர் பிரபல செய்தி சேனலுக்கு கொடுத்த நேர்காணலின் சிறு பகுதி இது.
* உங்களது தந்தையின் இறப்பு, வன உயிர்கள் மீதான வெறுப்பை உண்டாக்கியதா?
இல்லை. ஆழ்கடல் பற்றிய ஆவணப்படம் எடுக்க சென்றபோது, எதிர்பாராதவிதமாக திருக்கை மீன் தாக்கி என் தந்தை இறந்துவிட்டார். அந்த சம்பவம், நடக்கும்போது எனக்கு வயது 3. அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை, காலம்தான் எனக்கு வழங்கியது. அதை ஏற்றுக்கொண்டேன். என் தந்தை விட்டுச்சென்ற இடத்தில் இருந்து நான் தொடர ஆரம்பிக்கிறேன்.
* உங்களது அப்பா வன உயிரினங்களை கையாள்வதில் திறமைசாலி. அவரது பயிற்சி உங்களுக்கு கிடைத்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும் அல்லவா?
நிச்சயமாக. ஆனால் இப்போது என் தந்தையிடம்தான் பயிற்சி பெறுகிறேன். ஆம்..! அப்பாவின் வீடியோ காட்சிகளை பார்த்துதான், முதலைகளை கையாள்வதையும் மற்ற வன உயிரினங்களை கையாள்வதையும் கற்றுக்கொண்டேன்.
* உங்களுடைய ஆசை, லட்சியம் எது?
ஒரு முதலையையோ அல்லது ஒரு கோலா கரடியையோ பாதுகாப்பதே என்னுடைய ஆசை. இது என் தந்தையின் ஆசையும்கூட. அதை நான் நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறேன்.
* வன உயிர்களின் மீதான காதலுக்குக் காரணம்?
என் பெற்றோர்கள்தான் முழுமுதற்காரணம். நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்குள் முதலைகளும், பாம்புகளும் சுற்றிக்கொண்டிருக்கும். நான் அவற்றோடு சேர்ந்துதான் வளர்ந்தேன். இந்த வாழ்க்கை என் பெற்றோர்கள் கொடுத்த பரிசு.
* இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த பூமி நமக்குச் சொந்தமில்லை. இந்த பூமியில் நாம் வசிக்கிறோம். அவ்வளவுதான். நம்மைப் போலவே இந்த பூமியில் வன உயிரினங்களும் வசிக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பது என்பது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதாகும். ஆனால், உண்மையில் வன உயிர்களைப் பாதுகாக்காமல் அவற்றை அழித்து வருகிறோம்.
* மரணம் பற்றிய பயமில்லையா?
மரணம் பற்றி ஒருபோதும் நான் பயப்படவில்லை. வன உயிர்களைப் பாதுகாப்பதற்காக நான் பூமியில் பிறந்துள்ளதாக அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார். அந்த விஷயத்தை, அவரது அப்பா அதாவது என் தாத்தா தந்தையிடம் கூறியிருக்கிறார். அதனால் மரணம் பற்றிய பயம், என் தந்தைக்கும் இருந்ததில்லை. எனக்கும் இல்லை.
முதலைகளைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்கள்?
முதலைகள் பழகுவதற்கு ரொம்பவே சுலபமானது. அவை உங்களைக் கொன்று சாப்பிட்டு விடும். ஆனால், மனிதர்கள் கடினமானவர்கள். அவர்கள் முதலில் ஒரு நண்பனைப் போல பாவனை செய்வார்கள்.