குளிர்காலத்தில் ஏன் மூலிகை டீ பருக வேண்டும்?
|குளிர்ச்சியான கால நிலையில் மூலிகை டீ பருகுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
குளிர்காலத்தில் சூடாக டீ, காபி பருகுவதற்கு பலரும் விரும்புவார்கள். அது குளிர்ச்சியான கால நிலையில் இருந்து உடலை சூடாக வைத்திருக்க உதவும். இருப்பினும் டீ, காபிக்கு மாற்றாக மசாலா டீ, கிரீன் டீ, லெமன்கிராஸ் டீ, சாமந்தி டீ, இஞ்சி டீ அல்லது வேறு ஏதேனும் மூலிகை டீ பருகுவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். குளிர்காலத்தில் இந்த மூலிகை டீக்களை ஏன் பருக வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
1. சளி - இருமலை எதிர்த்துப் போராடும்
குளிர்காலத்தில் சளி, இருமல் ஏற்படுவது இயல்பானது. அந்த சமயத்தில் சூடான தேநீர் பருகுவது இதமளிக்கும். இருப்பினும் மசாலாப் பொருட்கள் கலந்திருக்கும் மூலிகை தேநீர் சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்த உதவும். இஞ்சி, மஞ்சள் சேர்க்கப்பட்ட டீ, லவங்கப்பட்டை கலந்த டீ பருகுவது மூக்கின் வீக்கத்தை தணித்து நாசிப்பாதைக்கு இதமளிக்கும். சளி அல்லது இருமல் அறிகுறிகளை போக்க உதவும்.
2. செரிமானம் சீராக நடைபெறும்
குளிர்காலத்தில் எளிதில் ஜீரணமாகாத கடினமான உணவுகளை உண்பது, அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காருவது, போதிய உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் செரிமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனை தவிர்க்க இஞ்சி டீ, புதினா டீ, சோம்பு டீயை பருகலாம். இவை இரைப்பை, குடல் பாதிப்புகளை தடுக்கவும், செரிமானம் சீராக நடைபெறுவதற்கும் உதவும்.
3. ரத்த ஓட்டம் சீராக நடைபெறும்
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ச்சி தன்மையும், உடல் செயல்பாடு குறைந்து போவதும் உடல் விறைப்பு தன்மை அடைவதற்கு காரணமாகிவிடும். அதனால் ரத்த ஓட்டமும் தடைப்படும். லவங்கப்பட்டை தேநீர், சாமந்தி தேநீர் பருகுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
4. அழற்சியை குறைக்கும்
ஏதேனும் ஒரு மூலிகை தேநீருடன் சிறிதளவு குங்குமப்பூ கலந்து பருகலாம். கொதிக்கும் நீரில் சிறிதளவு கிராம்புகளை சேர்த்து, வடிகட்டி பருகலாம். இவை குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும், உடல் வலியை குறைக்கவும் உதவும்.
5. உடல் ஆற்றலை அதிகரிக்கும்
மசாலா டீ, இயற்கையாகவே உடலுக்கு ஆற்றல் அளிக்கும் ஊக்கியாக செயல்படுகிறது. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. வேறு ஏதும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. மூலிகை தேநீர் தவிர மற்ற பானங்களில் காபின் உள்ளடங்கி இருக்கும். அதனை அதிகம் நுகரும்போது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.