மாற்றுத்திறனாளிகளை மதிப்போம்
|இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.
சக மனிதர்களைப் போன்று அவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
21 வகையானவர்கள்
கை, கால்கள் செயலிழப்பு, முடக்கம், பார்வைத்திறன் பாதிப்பு, செவித்திறன் குறைபாடு, மனநலம், தொழுநோய் என மாற்றுத்திறனாளிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு இருந்தனர்.
2017-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்னர், நரம்பியல் நோய், ரத்தசோகை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அந்த பட்டியலில் இணைக்கப்பட்டனர்.
தற்போது மாற்றுத்திறனாளிகள் 21 வகைகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
உடலளவில் குறைபாடு உள்ளவர்களாக இருந்தாலும் மனதளவில் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர்களாக மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களை மதித்திடுவோம்.
அரசு திட்டங்கள்
மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தும் விதமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 11 ஆயிரத்து 323 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு இந்த வாரியம் மூலம் கல்வி, திருமணம், மூக்கு கண்ணாடி போன்றவற்றுக்கான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவம், என்ஜினீயரிங் உயர்கல்வியில் 5 சதவீத இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு, குறுந்தொழில் தொடங்க ரூ.25 ஆயிரம் நிதி உதவி, மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை, ரூ.1,000 உதவித்தொகை, மாநகர பஸ்களில் இலவச பயணம், தொலைத்தூர பஸ்களின் பயண டிக்கெட்டில் 75 சதவீதம் தள்ளுபடி என தமிழக அரசு தாராளமனதுடன் சலுகைகளை வாரி வழங்குகிறது.
அதேப்போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உதவி திட்டம், தீனதயாள் மறுவாழ்வு திட்டம், தேசிய கல்வி உதவித்தொகை என மத்திய அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்களால் தங்கள் வாழ்வில் ஏற்பட்டு வரும் மறுமலர்ச்சி குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
நியமன எம்.எல்.ஏ. பதவி கிடைக்குமா?
தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் பொதுச்செயலாளர் கோபிநாத்:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.
மெரினா கடலின் அழகை தூரத்தில் நின்று பார்த்து ரசிக்கும்போது ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் மனநிலையும், 'என்றாவது ஒருநாள் நம்முடைய காலும் இந்த கடலில் நனையுமா?' என்று இருக்கும். தற்போது அந்த கனவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் நனவாகி இருக்கிறது.
மற்ற கடலோர மாவட்டங்களிலும் இதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக பாதை அமைத்து தர வேண்டும். கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகையை ரூ.1,500-லிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி தந்தது போன்று சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கான பென்சன் தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தித்தர வேண்டும்.
தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடுவது சிரமம் என்பதால் சட்டசபையில் மாற்றுத்திறனாளி ஒருவரை நியமன எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு தேவை
டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரான மாற்றுத்திறனாளி தீபக்:- போலியோ நோயால் என்னைப் போன்ற கை, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் உருவானார்கள். தற்போது போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதால் அவ்வாறு உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் இனி புதிதாக உருவாகப்போவதில்லை.
தற்போது ஆட்டிசம் பாதிப்பால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. எனவே இந்த வகை மாற்றுத்திறனாளிகள் நலனில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு மாற்றுத்திறனாளியின் பிரச்சினைகளை இன்னொரு மாற்றுத்திறனாளியால்தான் நன்கு உணர முடியும். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு திட்டங்களை செயல்படுத்தும் உயர் பொறுப்பு, பதவிகளில் மாற்றுத்திறனாளிகள் அமர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமைகளை பெறுவதற்கு உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகள் நிறைவேறினால்தான் மாற்றுத்திறனாளிகள் வாழ்வு மலர்ச்சி அடையும்.
ஆக்கமும், ஊக்கமும்
துறைமுகம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அனுராதா ரவிராஜ்:- என்னைப்போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் திட்டங்கள் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கின்றன. கடலில் கால் வைக்க முடியுமா என்ற மாற்றுத்திறனாளிகள் ஏக்கத்தைப் போக்கும் வகையில் மெரினா கடற்கரையில் பிரத்தியேக நடைபாதை அமைத்தது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.
அந்த நடைபாதையை மற்றவர்களும் ஆக்கிரமித்தவுடன் கவலை ஏற்பட்டது. ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரியும் நிறுவனம், சமூக சேவை பணியாளர்களை விருது வழங்கி கவுரவிப்பது வரவேற்கத்தக்க அம்சங்களாக இருக்கின்றன.
நான் சர்வதேச மாற்றுத்திறனாளி போட்டியிலும் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றிருக்கிறேன்.
வேளச்சேரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெகதீஷ்:-5 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூரில் நடந்த சாலை விபத்தில் எனது கையை இழந்து மாற்றுத்திறனாளி ஆனேன். காலச்சூழல் யாரை வேண்டுமானாலும் மாற்றுத்திறனாளியாக ஆக்கிவிடும். எனவே மாற்றுத்திறனாளிகளை யாரும் ஏளனமாக பார்க்க கூடாது.
நான் அவர்களுக்கு சேவை புரிவதற்காக அறக்கட்டளை நடத்திவருகிறேன். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்கள் முறையாக கிடைக்க வேண்டும். ரெயில் பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கு பிரத்தியேக வசதி இருந்தாலும் அதுவும் ஆக்கிரமிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் தற்போது தயார் செய்யப்படும் ரெயில் பெட்டிகளில் 'பிரெய்லி' எழுத்துகள் வடிவமைப்பது வரவேற்கத்தக்கது. அதே போன்று மாநகர பஸ்களில் பஸ் நிறுத்த அறிவிப்புகள் ஒலி வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது சிறப்புக்குரியது.
முன்னேற்ற பாதைக்கான படிகட்டுகள்
பெரும்பாக்கத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தேவி:- மாற்றுத்திறனாளி என்ற மனக்குறை இருந்தாலும் சமூகத்தில் நாங்களும் எல்லாத்துறைகளிலும் கால்தடம் பதித்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அரசு திட்டங்கள் படிகட்டுகளாக இருக்கின்றன.
மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் வரிசையில் மாநகர பஸ்களில் ஒலிவடிவ அறிவிப்பு முறை அமலுக்கு வந்திருப்பது பாராட்டுக்குரியது. இது காது கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் அளிக்கும். அதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு என்று சாய்வுதளத்துடன் கூடிய சிறப்பு பஸ்களையும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு கட்டிடங்கள், திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு வசதியாக சாய்வுதளம் அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் சாத்தியமானால் மாற்றுத்திறனாளிகள் வாழ்வு வசந்தம் பெறும்.
மாற்றுத்திறனாளிகள் நலனில் அரசாங்கம் அக்கறை செலுத்துவதை போன்று தொண்டு நிறுவனங்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாற்றுத்திறனால் பத்மஸ்ரீ விருது பெற்றவர்
அமர் சேவா ராமகிருஷ்ணன் (வயது 69). ஓர் அற்புதமான மனிதநேயர். எந்திர துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தபோது கடந்த 1974-ம் ஆண்டு பெங்களூரில் நடந்த கடற்படை அதிகாரிகளுக்கான உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்டார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவரது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கழுத்துக்கு கீழ் உள்ள உடல் உறுப்புகள் செயல் இழந்தன. ஆனால் அவர் செயல் இழக்கவில்லை. மனம் தளரவில்லை.
கடந்த 1981-ம் ஆண்டு தென்காசி அருகே ஆய்க்குடியில் `அமர் சேவா சங்கம்' என்ற நிறுவனத்தை தொடங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளித்து வருகிறார்.
முதுகு தண்டுவடம் பாதித்தவர்கள் மற்றும் மற்றுத்திறனாளிகளுக்கு அங்கு சிகிச்சையும், அடைக்கலமும் அளிக்கப்படுகிறது. பல்வேறு தொழிற்கூடங்கள், பள்ளிகளையும் நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி சமீபத்தில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
உடல் உறுப்புகள் இயங்காவிட்டாலும் தனது மனவலிமையினால் இந்த பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவருடன் அவரைப் போன்றே கை, கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளியான சங்கரராமன் அந்த நிறுவனத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
மத்திய-மாநில அரசுகள் இந்த நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இங்கு வந்து ஒரு கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தென்காசி பகுதிக்கு வரும்போது அமர் சேவா சங்கத்திற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
உடலில் இருப்பது ஊனம் அல்ல என்பதற்கு அமர் சேவா ராமகிருஷ்ணன் ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறார்.