< Back
சிறப்புக் கட்டுரைகள்
தொண்டையில் கிச்... கிச்... ஏற்படுகிறதா...? உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் பதில்
சிறப்புக் கட்டுரைகள்

தொண்டையில் "கிச்... கிச்..." ஏற்படுகிறதா...? உடல் நலம் தொடர்பான கேள்விகளுக்கு சித்த மருத்துவ நிபுணர் பதில்

தினத்தந்தி
|
30 Nov 2022 10:26 AM IST

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்வி களுக்கு சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா) பதில் அளிக்கிறார்.

கேள்வி: மழை நேரங்களில் எனக்கு அடிக்கடி ஜலதோஷமும், இருமலும் ஏற்படுகிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்? (மகேசுவரி, சென்னை-34)

பதில்:- ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் குளிர்காற்று வீசுவதாலும், உடலில் பித்தம் அதிகரிப்பதாலும் உடலின் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து காணப்படும். ஆகவே சாதாரண வைரஸ் காய்ச்சல் போன்றவை எளிதில் வருகிறது.

இதற்கு பயன்தரும் சித்தமருந்துகள்: 1) நிலவேம்பு குடிநீர் 60 மி.லி. வீதம் தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். இதனால் வைரஸ் காய்ச்சல் குணமாகும். 2) இருமலுக்கு ஆடாதோடை மணப்பாகு 5-10 மி.லி. வீதம் காலை-மாலை இருவேளை குடிக்க வேண்டும். இதனால் சளித்தொந்தரவு குணமாகும். 3) தாளிசாதி வடகம் மாத்திரைகள் இரண்டு எடுத்துக்கொண்டு காலை, மதியம், இரவு கடித்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

பொதுவாக குளிர்காலத்தில் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள். தண்ணீர் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடியுங்கள். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள். பாலில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடியுங்கள். கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தவிர்க்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி: எனக்கு 36 வயதாகிறது. வீட்டு வேலைகள் செய்யும் போது எனது கால் மற்றும் கை மூட்டுகளில் சத்தம் கேட்கிறது. ஆனால் வலி இல்லை. இதற்கு மருந்து சொல்லுங்கள்? (கே.கலையரசி, நாமக்கல்)

பதில்:- பொதுவாக, எலும்பு மூட்டுகளில் உள்ள சைனோவியல் திரவத்தில் ஏற்படும் காற்றுக்குமிழிகளால் இதுபோன்று சத்தம் ஏற்படும். வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் குறைபாடுகள், எலும்பு தேய்மானம் போன்றவை காரணமாகவும் சத்தம் கேட்கலாம்.

கடலில் இருந்து கிடைக்கும் கால்சியம் நிறைந்த பொருட்களால் தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் இதற்கு பயன் தரும். அவை: பவள பற்பம், முத்துச்சிப்பி பற்பம், சங்கு பற்பம், பலகரை பற்பம். இவைகளில் ஏதாவது ஒன்றை 200 மி.கி. வீதம் சிறிதளவு பிரண்டைத் தண்டு பொடியுடன் காலை, மதியம், இரவு சாப்பிட வேண்டும்.

மேலும், உணவில் பால், முட்டை, தயிர், மோர், பசலைக்கீரை, முருங்கை கீரை, பாலக் கீரை, பாதாம், மீன், இறைச்சி, பன்னீர் வகைகள் எடுக்க வேண்டும்.

கேள்வி: 73 வயதான என் முகத்தின் வலது பக்கத்தில் வலி உள்ளது. இதை மருத்துவர்கள் 'டிரைஜெமினல் நியூராலஜியா வலி' என்கிறார்கள். மாத்திரை சாப்பிட்டும் வலி குறையவில்லை. இதற்கு சித்த மருந்து பரிந்துரை செய்யுங்கள்? (ஆர். சுப்பிரமணியன், நாகர்கோவில்)

பதில்: முகத்தில் காணப்படும் உணர்ச்சிகள், வெப்பம், வலி, தொடு உணர்வுகள் போன்றவற்றுக்கு மூளையில் உள்ள 5 வது நரம்பு எனப்படும் "டிரைஜெமினல் நரம்பு" காரணமாகிறது. மூளையில் இந்த நரம்புக்கு அருகில் உள்ள ரத்த குழாய்களால் ஏற்படும் அழுத்தமே இந்நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது.

இதற்கு சித்த மருத்துவத்தில் 1) கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை -காலை, மதியம், இரவு ஒரு மாத்திரை வீதம் சாப்பிட வேண்டும். 2) மகா ஏலாதி மாத்திரை-1 வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிடலாம். 3) அமுக்கரா மாத்திரை 1-2 வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிடலாம்.

கேள்வி: சார், வாய்ப் புண்ணால் சரியாக சாப்பிட இயலவில்லை. குறிப்பாக சூடாகவோ அல்லது காரமாகவோ சாப்பிட முடியவில்லை. இதிலிருந்து மீள வழி காட்டவும். (மாலா, புதுச்சேரி).

பதில்: 1) திரிபலா பொடி (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்)- இதை இளம் சூடான தண்ணீரில் கலந்து வாயை நன்றாக கொப்பளிக்க வேண்டும். 2) நெல்லிக்காய் லேகியம் காலை, இரவு இருவேளை எடுக்க வேண்டும், இதில் வைட்டமின் சி ஏராளமாக இருப்பதால் விரைவில் வாய்ப்புண் ஆறும். ஏலாதி சூரணம் -1 கிராம், சங்கு பற்பம்-200 மிகி சேர்த்து நெய்யில் சாப்பிட வேண்டும். 3) வெங்கார மது மருந்தை வாய்ப்புண் உள்ள இடங்களில் போட வேண்டும்.

மேலும், காரமான, சூடான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவில் மணத்தக்காளி கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மாதுளம்பழம், நெல்லிக்காய், சுண்டை வற்றல், மோர் , தயிர், சின்ன வெங்காயம் இவைகளை அதிகளவில் எடுக்க வேண்டும். இரவு நெடுநேரம் கண்விழித்து டிவி, மொபைல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் உடல் சூடு அதிகரிக்கும்.

கேள்வி: மழைக் காலத்தில் வேகமாக பரவும் 'மெட்ராஸ் ஐ' எதனால் ஏற்படுகிறது, இதற்கு சித்த மருத்துவ தீர்வுகள் என்ன?. (டி. அஞ்சனா, சென்னை-40)

பதில்:- 'மெட்ராஸ் ஐ' என்பது அடினோ வைரஸ் அல்லது ஸ்டெரெப்டோகாக்கஸ், ஸ்டெபிலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக் கூடியது. கண் சிவப்பு, கண் எரிச்சல், கண் வலி, கண்ணீர் வடிதல் அல்லது கண்பீளை வெளியாதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இதற்கான சித்த மருத்துவம்: 1) "படிக பன்னீர்" ஒரு துளி வீதம் கண்களில் விடலாம். கண் சிவப்பு, பீளை வெளியேறுவது விரைவில் நிற்கும், 2) சுத்தமான தண்ணீரில் மஞ்சளை கரைத்து, சுத்தமான வெள்ளைக் கைக்குட்டையை அதில் நனைத்து, அந்த துணியை வைத்து கண்ணை துடைக்கலாம், மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி, 3 நந்தியாவட்டை பூச்சாற்றை பிழிந்து கண்களில் விட்டு வர கண் எரிச்சல், கண் வலி நீங்கும்.

மேலும், ஒவ்வொரு முறை கண்ணை துடைக்கும் போதும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும், நோய் நீங்கும் வரை வீட்டில் ஓய்வெடுப்பது அவசியம்.

கேள்வி: எனக்கு வயது 29 ஆகிறது. என்னுடைய முகம் எண்ணெய் பசையாக இருக்கிறது. எண்ணெய் பலகாரங்கள், பால் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிட்டால் முகப்பரு போல பெரிய கட்டி வருகிறது. இதற்கு தீர்வு என்ன டாக்டர்? (நெல்லை வாசகர்)

பதில்: முகம், நெற்றி, தோள்பட்டை மார்பு போன்ற பகுதிகளில் ஏராளமான எண்ணெய் சுரப்பிகள் உள்ளன, இவற்றிலிருந்து எண்ணெய் (சீபம்) சுரக்கிறது. இவை வெளியேறும் வழியில் ஏற்படுகின்ற தடையினால் பருக்கள், கட்டிகள் வருகிறது. ஹார்மோன் மாற்றங்கள், பாக்டீரியா தொற்றினாலும் இவை ஏற்படுகின்றன.

இதற்கு சித்த மருந்துகளில், கடல் சங்கை தண்ணீரில் உரசி முகப்பரு, கட்டி உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். அடுத்து, ஏலாதி சூரணம் ஒரு கிராம், சங்கு பற்பம் 200 மி.கி. கலந்து காலை, மதியம், இரவு மூன்று வேளை சாப்பிட வேண்டும். இரவு தூங்கும் போது குங்குமாதி லேபம் களிம்பை முகத்தில் பூசவும்.

முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவ வேண்டும். எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

கேள்வி: என் வயது 65. தினமும் 4 மணி நேரம்தான் தூக்கம் வருகிறது. நீரிழிவு நோய் உள்ளது. தினமும் 8 மணி நேரம் நிம்மதியாக தூங்குவதற்கு உதவும் சித்த மருந்துகளை கூறுங்கள். (விஜயன், பெங்களூரு)

பதில்: நிம்மதியான உறக்கத்திற்கு மாலை நேரங்களில் சிறிது நேரம் நடை பயிற்சி செய்யுங்கள். இரவு அதிக நேரம் மொபைல் போன், டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அமுக்கிரா சூரணம் ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து சாப்பிட வேண்டும். அல்லது கசகசா ஒரு கிராம் அளவில் எடுத்து அதை சிறிதளவு பாலில் ஊற வைத்து நன்றாக அரைத்து பாலில் காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது சடாமாஞ்சில் சூரணம் ஒரு கிராம் வீதம் தூங்குவதற்கு முன்பு ஒரு டீ ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட வேண்டும். இதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்.


தொண்டையில் "கிச்... கிச்..." ஏற்படுகிறதா...?

சிலருக்கு அடிக்கடி தொண்டையில் கரகரப்பு காணப்படும். சிலருக்கு புண்கள் ஏற்படுவதும் உண்டு. இதனால் சாப்பிட முடியாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக குளிர் காலத்தில் இந்த பிரச்சினையை பலர் சந்திக்கலாம். இதற்கு எளிய சித்த மருத்துவ தீர்வுகள்:

மஞ்சள் தூள், உப்பு கலந்த வெந்நீரால் வாய், தொண்டையை கொப்பளித்து வர வேண்டும்.

காலை, இரவு வேளைகளில் மிளகு, மஞ்சள், பனங்கற்கண்டு கலந்த பாலை குடிக்கலாம்.

ஆடாதோடை இலை, அதனுடன் 5 மிளகு, சுவைக்காக சிறிதளவு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு மென்று சாப்பிட்டு வர தொண்டை வலி, கரகரப்பு நீங்கும்.

கிராம்பு-2, சிறிதளவு அதிமதுரம், சுக்கு, மிளகு, லவங்கப்பட்டை இவைகளை டீ போன்று தயாரித்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.

திரிகடுகு சூரணத்தை 500 மில்லி கிராம் அல்லது அரை டீ ஸ்பூன் வீதம் இருவேளை தேன் அல்லது வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம்.

சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் தாளிசாதி வடகம், துளசி வடகம் போன்ற மாத்திரைகளை 2 வீதம் இருவேளை கடித்துச் சாப்பிடலாம்.

வசந்த குசுமாகர மாத்திரை 2, லவங்கம் 2 எடுத்து, இவற்றை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சுவைத்து சாப்பிடலாம்.

மேலும் செய்திகள்