< Back
சிறப்புக் கட்டுரைகள்
விண்வெளியில் வெள்ளி விழா
சிறப்புக் கட்டுரைகள்

விண்வெளியில் வெள்ளி விழா

தினத்தந்தி
|
31 March 2023 11:24 AM IST

பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) 25 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக வெள்ளி விழாவை நிறைவு செய்து புதிய சகாப்தம் படைத்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம்

இந்தியா உள்பட உலகின் அனைத்து முன்னணி நாடுகளும் விண்வெளி ஆராய்ச்சிக்காக பூமியில் இருந்து தொடர்ந்து செயற்கைக் கோள்களை ஏவி வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஐரோப்பாவின் ஈசா, இந்தியாவின் இஸ்ரோ போன்ற விண்வெளி மையங்களில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மூலம் விண்கலங்களை அனுப்பி விண்வெளி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன.

வலிமை மிக்க நாடுகள் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்கா, ரஷியா மற்றும் பிரிட்டன், கனடா, ஜப்பான் ஆகிய 5 உலக நாடுகள் தங்களுக்கென சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்க முடிவு செய்தன.

10 ஆண்டு முயற்சி

விண்வெளிக் கப்பல்கள் (ஸ்பேஸ் ஷிப்ஸ்) மூலம், 10 ஆண்டுகள் தொடர்ந்து இதற்கான பாகங்கள் விண்வெளிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, கடந்த 1998-ம் ஆண்டில் பூமியில் சுற்றுவட்டப் பாதையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இவை மிதக்கவிடப்பட்டன. பிறகு விண்வெளி வீரர்கள் 30 முறை விண்வெளிக்குச் சென்று இந்த பாகங்களை மெல்ல மெல்ல வெற்றிகரமாக ஒன்றிணைத்தார்கள்.

இப்படி உருவாக்கப்பட்டதுதான் ''ஐ.எஸ்.எஸ்'' என்றழைக்கப்படும் சர்வதேச விண்வெளி நிலையம். இதன் மொத்த எடை 460 டன். அதாவது, கிட்டத்தட்ட ஒரு கால்பந்து மைதானம் அளவு பரப்பளவு கொண்டது என்றால் இதன் பிரமாண்டத்தை கற்பனை செய்து பாருங்கள். பூமியில் இருந்து 360 கி.மீட்டர் உயரத்தில் மிதந்தபடி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இது வலம் வருகிறது.

கண்காணிப்பு

விண்வெளி நிலையத்துக்குச் செலவிட்ட நாடுகள் விண் கப்பல்கள் மூலம் பயணம் செய்து பூமியின் இயக்கம், அதன் சுற்றுச்சூழல் மாற்றங்கள், கடலில் உருவாகும் புயல்களின் நகர்வுகளை கண்காணித்தல், பால்வெளியை நோக்குதல் என தொடர்ச்சியாக வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கிறார்கள். பூமிக்கு வெளியே மனிதனால் கட்டப்பட்ட பிரமாண்ட அமைப்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் உள்ளது. 19 நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்று வெற்றிகரமாக திரும்பியுள்ளனர்.

2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்போது வரை தொடர்ச்சியாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் விண்வெளி வீரர்கள் செல்வதும், தங்குவதுமாக உள்ளனர். ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் 16 சூரிய உதயம், 16 சூரிய மறைவை சந்திக்கிறது. ஒரே நேரத்தில் 6 விண்வெளி கப்பல்களை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கையாளும் திறன் படைத்தது.

பூமியில் இருந்து கிளம்பும் விண்வெளிக் கப்பல் சுமார் 6 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்றடையும். இந்த விண்வெளி ஆய்வு நிலையம் கிட்டத்தட்ட 90 நிமிடங்களில் பூமியை ஒரு முழு சுற்று சுற்றி விடுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட மிகவும் செலவு அதிகமான ஆய்வகம் இது. இதனுடைய மொத்த மதிப்பு 12 கோடி அமெரிக்க டாலர்கள்.

ஆராய்ச்சி கூடங்கள்

பூமியில் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதைவிட, விண்வெளியில் பூஜ்ய ஈர்ப்பு விசையில் தனித்துவமான முறையில் ஆராய்ச்சி செய்வதற்காகவே இந்த சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்டது. விண்வெளி வீரர் ஒருவர் அனுப்பப்படுவதற்கு முன், அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், பரிசோதனைகள், கருவிகள் செயல்பாடு குறித்து பூமியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விண்வெளி கூடத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 5 ஆராய்ச்சிக் கூடங்கள் உள்ளன. ரஷியாவிற்கு சொந்தமாக 2 சிறிய ஆராய்ச்சிக் கூடங்களும், அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு ஆராய்ச்சி கூடங்களும் உள்ளன.

விண்வெளியில் இருந்து பூமியை படம் பிடிப்பது, தரவுகளை திரட்டுவது போன்ற பணிகளோடு, ஒருசெல் உயிரிகள், எலிகள், எறும்புகள், மீன், புழுக்கள் ஆகியவற்றை பூஜ்ய ஈர்ப்பு விசையில் வைத்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வருங்கால விண்வெளி தேடலுக்கு சோதனைக் கூடமாகவும் இது விளங்குகிறது.

வெள்ளி விழா நிறைவு

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தொடங்கி வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்து, தனது வெள்ளி விழாவை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு (2024) வரை தான் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடு இருக்கும் என திட்டமிடப்பட்டு இருந்தது. நிலையத்தின் கட்டுமான பணிகளும் அதற்கேற்றபடி தான் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இந்த நிலையம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு செயல்படும் தன்மையுடன் இருப்பதால் 2030-ம் ஆண்டு வரை சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்கலாம் என அமெரிக்கா உள்பட ஒப்பந்த நாடுகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போர் எதிரொலி: ரஷியா விலகுகிறதா?

கடந்த ஓராண்டாக நடைபெறும் ரஷியா - உக்ரைன் போரால் ரஷியாவுக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகளுக்கும் இடையிலான உறவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போரின் உக்கிரம் பூமியில் மட்டுமல்ல, விண்வெளியையும் எட்டியுள்ளது. ஆம், கடந்த 25 ஆண்டுகளாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் முக்கிய அங்கம் வகித்த ரஷியா அடுத்த ஆண்டு முதல் அதில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக அந்நாட்டின் விண்வெளி அமைப்பின் தலைவர் யூரி பார்சோவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:-

'2024-ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து நாங்கள் விலக இருக்கிறோம். ஆனால் இருக்கும் காலக்கட்டத்தில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம். 2024-ம் ஆண்டுக்குப் பிறகு ரஷியாவுக்கென ஒரு விண்வெளி நிலையம் தனியாக அமைக்கப்படும்' என்றார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், ரஷியா ஆகிய 5 உலக நாடுகள் இணைந்து உருவாக்கிய சர்வதேச விண்வெளி நிலையம் கடந்த 1998-ம் ஆண்டு முதல் புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக இது ஆயிரக்கணக்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ரஷியா தங்களுக்கென தனியாக விண்வெளி நிலையம் அமைக்கும் முடிவை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான போரை கண்டித்து ரஷியாவின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதன் விளைவாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகும் முடிவை ரஷியா எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

சிக்கலை ஏற்படுத்தும்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷியா வெளியேறினால், நிச்சயமாக அது ஒரு சிக்கலை உருவாக்கும். ஏனெனில், 5 நாடுகளும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் வகையில்தான் இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையத்திற்கு அமெரிக்க தரப்பு ஆற்றலை வழங்குகிறது. பூமியில் விழாமல் வைத்திருக்கும் உந்து விசையை ரஷிய தரப்பு வழங்குகிறது. அந்த உந்துவிசை திறன் திரும்பப் பெறப்பட்டால், அமெரிக்காவும் மற்ற நாடுகளான பிரிட்டன், ஜப்பான் மற்றும் கனடாவும், வானத்தின் உயரத்தில் இந்த நிலையத்தை நிறுத்துவதற்கான பிற வழிகளை உருவாக்க வேண்டும். இது அமெரிக்க ரோபோக்களால் செய்ய முடிந்த ஒன்றுதான். இருப்பினும் தற்போதுள்ள அமைப்பை வைத்தே அடுத்த 6 ஆண்டுகளுக்கும் செயல்பட முடியும் என்பதால் ரஷியாவின் ஒத்துழைப்பை மற்ற நாடுகள் எதிர்பார்த்துள்ளன.

மேலும் செய்திகள்