இரட்டை சிலம்பத்தில் அசத்தும் நர்ஸ்
|குணாலி டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு பயிற்சி நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். பணிக்கு இடையே சிலம்ப பயிற்சி பெறுவதோடு போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.
''இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், மற்றவர்களை விட நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். பிள்ளைகள், படிப்பை தவிர வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு பலரும் ஆர்வம் செலுத்துவதில்லை. குறிப்பாக மேல் நிலை வகுப்புகளை நெருங்கும்போது விளையாட்டு, கலைத்திறன் போன்ற தனித்திறன்களை வளர்க்கும் போட்டிகளில் பிள்ளைகள் பங்கேற்பதை விரும்புவதில்லை. அவை படிப்பை பாதிக்கும், மதிப்பெண் குறைவதற்கு காரணமாகிவிடும் என்று கருதுகிறார்கள். ஆனால் வெறுமனே படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவது பயன் தராது. அது பிள்ளைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக, ஆளுமைத் திறன் கொண்டவர்களாக, சுய ஒழுக்கத்தை பின்பற்றுபவர்களாக, எதையும் எதிர்கொள்ளும் மனவலிமை கொண்டவர்களாக வளர்வதற்கு தனித்திறன்களை மெருகேற்றும் விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியமானது'' என்கிறார், கோமதி.
இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் சமையல் வேலை செய்கிறார். இவருக்கு இரு மகள்கள். மூத்த மகள் பாரதி, என்ஜினீயரிங் படிக்கிறார், இளைய மகள் குணாலி, நர்சிங் படித்திருக்கிறார். படிப்போடு தனித்திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு தன் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார் கோமதி. இவர்களில் குணாலி சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை கற்றுத்தேர்ந்திருப்பதோடு போட்டிகளில் பங்கேற்று சாதித்து வருகிறார். சிலம்பக் கலையில் பெண்களுக்கு சவாலாக விளங்கும் இரட்டை சிலம்பம் சுற்றுவதில் கைதேர்ந்தவராகி பதக்கங்களை குவிக்கத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார், குணாலி. மகளை சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை கற்க ஊக்கப்படுத்தியதற்கான காரணத்தை கோமதி விவரிக்கிறார்.
''குடும்ப சூழ்நிலையால் என்னால் 6-ம் வகுப்பு வரையே படிக்க முடிந்தது. நம் பிள்ளைகளுக்கு அந்த நிலை வரக்கூடாது என்ற எண்ணத்தில் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெரும்பாலான பெற்றோர் ஆரம்ப கல்வி பயிலும்போது பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக கொண்டு போய்விட்டுவிட்டு, மாலையில் திரும்ப அழைத்து வருகிறார்கள். பிள்ளைகள் வளர்ந்த பிறகு தனியாக பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது அவர்களிடம் தன்னம்பிக்கையும், தைரியமும் இருக்க வேண்டும். படிப்பு மட்டுமே இதனை தராது. பெண் பிள்ளைகள் தங்கள் பாதுகாப்புக்கு மற்றவர்களை சார்ந்திருக்காமல், தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ளும் சுய பாதுகாப்பு உணர்வை கொண்டிருக்க வேண்டும். நான் பள்ளிக்கூடத்தில் வேலை செய்வதால் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கவனிக்க முடிகிறது. படிப்புடன் தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வது அவர்களுக்கு பயன் அளிக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். பெண் குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு எந்த அளவு முக்கியமானது என்பதை பள்ளியில் கற்றுக்கொடுக்கப்படும் தற்காப்பு பயிற்சிகள் மூலம் அறிந்து கொண்டேன். அப்போது என் மகள் குணாலி 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவள் மற்றவர்களிடம் பேசுவதற்கு சற்று தயங்குவாள். வெளி உலகை தைரியமாக எதிர்கொள்வதற்கு தற்காப்பு கலை அவளுக்கு உதவும் என்ற எண்ணத்தில் கராத்தே வகுப்பில் சேர்த்துவிட்டேன். ஆர்வமாக கற்கத் தொடங்கினாள். அங்கு மாணவர்கள் சிலம்பப் பயிற்சி பெறுவதை பார்த்து, அதையும் கற்றுக்கொள்ள விரும்புவதாகக் கூறினாள். தமிழக பாரம்பரிய கலையான அதுவும் சிறந்த தற்காப்புக் கலை வடிவம்தான். மன வலிமையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றலும் கொண்டது என்பதால் அதனை கற்பதற்கும் ஊக்கப்படுத்தினேன். அவளோ ஒரு படி மேலே போய் இரட்டை சிலம்பம் கற்று, போட்டியில் பங்கேற்று எனக்கு பெருமை தேடிக் கொடுத்துவிட்டாள்'' என்று மனம் பூரிக்கிறார்.
சிலம்பக் கலையை ஈடுபாட்டோடு கற்பதற்கான காரணத்தை குணாலி சொல்கிறார்.
''அம்மாவின் விருப்பப்படி முதலில் கராத்தே வகுப்பில்தான் சேர்ந்தேன். பயிற்சியாளர் பாண்டியன் தற்காப்பு நுணுக்கங்களை எளிதில் புரியும்படி சொல்லிக்கொடுத்தார். ஏதாவதொரு ஆபத்தில் சிக்கிக்கொண்டால் எப்படி தப்பிப்பது என்பதை தெரிந்து கொண்டேன். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவத்தையும் அது கொடுத்தது. அங்கு மாணவர்கள் சிலம்பப் பயிற்சியும் பெற்றார்கள். கராத்தேயை விட சிலம்பம் சுற்றுவது உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும், மன தைரியத்தையும் தக்க வைக்கும் கலையாக எனக்குத் தெரிந்தது. அதனால் அதனையும் கற்றுக்கொள்ள தொடங்கினேன். அங்கு சிலம்பம் கற்றதில் நான் மட்டும்தான் பெண். அதனால் எனக்கு சிறப்புப் பயிற்சி அளித்தார்கள். அது சிலம்பக் கலையை அறியும் ஆவலை அதிகப்படுத்தியது. இரட்டை சிலம்பம் கற்றுக்கொள்ளும் ஆவலைத் தூண்டியது. ஒற்றை கம்பை சுற்றுவதை விட இரட்டை கம்பத்தை சுழலவிடுவது ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. உடல் வலியால் அவதிப்பட்டேன். இரு கம்புகளை வேகமாக சுழற்றும்போது கிடைக்கும் உற்சாகமும், தைரியமும் வலியை மறக்கடித்தது. கராத்தேயும், சிலம்பமும் கற்ற பிறகு என்னிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை உணர்வுப்பூர்வமாக உணர்கிறேன். எதற்கும் பயப்படக்கூடாது என்ற துணிவையும், பயமின்றி தைரியமாக பேசும் சுபாவத்தையும் பெற்றிருக்கிறேன். பெண்கள் ஏதாவதொரு தற்காப்பு கலையை நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனை கற்பதால் படிப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மற்றவர்களை தயக்கமின்றி அணுகுவதற்கும், நெருக்கடியான சூழலில் இருந்து சட்டென்று மீண்டு வருவதற்கும் அது கைகொடுக்கும். மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறேன். சென்னையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்றது பெருமிதமாக இருக்கிறது. ஊரில் பாராட்டு விழா நடத்தி கவுரவித்தார்கள். அது சிலம்பத்தில் இன் னும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்துள்ளது'' என்கிறார்.
குணாலி 10-ம் வகுப்பை முடித்ததும் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு கோவையில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். பணிக்கு இடையே சிலம்ப பயிற்சி பெறுவதோடு போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார்.
''எனது மகள் காவல் துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால் கொரோனா காலகட்டம் எங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அந்த சமயத்தில் நோய்வாய்ப்பட்டவர்களை நெருங்கிச் சென்று பேசுவதற்கே பலரும் பயப்பட்டார்கள். நோய் பாதிப்பு தீவிரமாகி ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் சிலர் அவதிப்பட்டார்கள். அதை பார்த்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நானும், என் மகள்களும் அவர்களுக்கு உதவி செய்தோம். அப்போதுதான் நர்சிங் படிக்க வைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றியது. குணாலியிடமும் அதே எண்ணம் வெளிப்படவே, நர்சிங் படிக்க வைத்துவிட்டேன்'' என்கிறார், கோமதி.