< Back
சிறப்புக் கட்டுரைகள்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியாகாந்தி நடத்தும் நீயா? நானா?
சிறப்புக் கட்டுரைகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியாகாந்தி நடத்தும் நீயா? நானா?

தினத்தந்தி
|
9 Oct 2022 4:48 AM IST

சோனியா, ராகுலின் மறைமுக ஆசியுடன் கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே களம் காண்கிறார்.

'இந்தியாவின் இரும்பு பெண்மணி' என்று போற்றப்பட்டவர்... துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடியவர்... முதன்முதலாக அணுகுண்டு சோதனை நடத்தி சர்வதேச அரங்கில் இந்தியாவின் வலிமையை பறைசாற்றியவர். இப்படி பல்வேறு பெருமைகளை பெற்ற மாபெரும் தலைவரான இந்திராகாந்தி அவரது பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், 1984-ம் ஆண்டு டிசம்பரில் இந்த தேசம் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது.

அந்த கிராமத்து வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டுவிட்டு வந்த முதியவரிடம், "என்ன யாருக்கு ஓட்டு போட்டீர்கள்?" என்று அவரது நண்பர் கேட்டார். அதற்கு அந்த பெரியவர், "வேறு யாருக்கு நம்ம காங்கிரசுக்குத்தான்" என்று வெள்ளந்தியாக பதில் அளித்தார். "காங்கிரசுன்னா வேட்பாளர் யாரு?" என நண்பர் கேட்க, "அது யாரா இருந்தா என்ன? நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்தி, நேரு கட்சி இல்லையா? அதனால காங்கிரசுக்கு ஓட்டு போடுறதுதான் எங்க குடும்பத்து வழக்கம்" என்று கூறிவிட்டு, நடையை கட்டினார் பெரியவர். இதுதான் காங்கிரசுக்கு உள்ள பெருமை, வலுவான அடித்தளம். ஏராளமான பிரச்சினைகள், ஊழல் புகார்களுக்கு உள்ளான போதும் நூற்றாண்டை கடந்து இன்னும் காங்கிரஸ் ஆட்டம் காணாமல் இருப்பதற்கு, மக்கள் அக்கட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம். என்றாலும் பழம்பெருமையை வைத்து எவ்வளவு காலத்தை ஓட்ட முடியும்? 'யானைக்கும் அடி சறுக்கும்' என்ற பழமொழி காங்கிரசுக்கு நன்றாகவே பொருந்தும். அடி சறுக்குவது ஒன்றும் தவறு அல்ல. ஆனால் அடிக்கடி சறுக்குவதுதான் அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்து உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1952 முதல் இதுவரை 17 பொதுத்தேர்தல்களை இந்த தேசம் சந்தித்து உள்ளது. இதில் காங்கிரஸ் 7 முறை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தனித்தும், 3 முறை கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்தும் ஆட்சி அமைத்து இருக்கிறது. 54 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு இருக்கிறது. அக்கட்சியைச் சேர்ந்த ஜவகர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, நேருவின் மகள் இந்திராகாந்தி, பி.வி.நரசிம்மராவ், இந்திராவின் மகன் ராஜீவ்காந்தி, மன்மோகன் சிங் என 6 பேர் பிரதமராக பதவி வகித்து உள்ளனர். இந்த பெருமை வேறு எந்த கட்சிக்கும் கிடையாது.

ஜவகர்லால் நேரு 1951 முதல் 1963-ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக இருந்து நாடு முழுவதும் கட்சிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தினார். நேரு பிரதமராகவும், காங்கிரஸ் தலைவராகவும் இருந்த இந்த காலகட்டத்தில் 1962-ல் சீனாவுடன் நடந்த போரில் இந்தியா தோற்றதால் காங்கிரசின் செல்வாக்கு ஆட்டம் கண்டது. இந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜர் வகுத்த திட்டத்தின்படி (காமராஜ் பிளான்), அவர் உள்பட 6 காங்கிரஸ் முதல்-மந்திரிகள் மற்றும் சில மத்திய மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப்பணிக்கு திரும்பினார்கள். 1963-ல் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்று கட்சியை திறம்பட வழிநடத்தினார்.

அதன்பிறகு இந்திராகாந்தி தலைவராக இருந்த போதும் காங்கிரஸ் வளர்ச்சிப்பாதையிலேயே சென்றது என்றபோதிலும், தலைவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் கட்சி உடைந்தது. பிரதமராக இருந்த இந்திராகாந்தி 1975-ல் நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியதால் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்தது. நெருக்கடி நிலை காலம் வரை வலுவாக இருந்த காங்கிரஸ், அதன்பிறகு விழுவதும், எழுவதுமாக இருந்து வருகிறது.

இந்திராகாந்தியின் மறைவுக்கு (1984) பின் ராஜீவ்காந்தி, பி.வி.நரசிம்மராவ், சீதாராம் கேசரி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்து உள்ளனர். இந்திராகாந்தி மரணம் அடைந்த 1984-ம் ஆண்டில் நடந்த 8-வது நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்ட அனுதாப அலையின் காரணமாக, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 415 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் வரலாற்று சாதனை படைத்தது. அதன்பிறகு பெருமை கொள்ளும் வகையில் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை.

சோனியாகாந்தி தலைவராக இருந்த போது 1999-ல் நடந்த தேர்தலில் 114 இடங்களும், 2004-ல் நடந்த தேர்தலில் 145 இடங்களும், 2009-ல் நடந்த தேர்தலில் 206 இடங்களும் கிடைத்தன. 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெறும் 44 இடங்களை பெற்று காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததோடு, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

இதனால் 2017-ல் சோனியா பதவி விலகியதால், அவரது மகன் ராகுல்காந்தி தலைவர் நாற்காலியில் அமர்ந்தார். அவராலும் ஒன்றும் சாதிக்க முடியவில்லை. ராகுல்காந்தி தலைவராக இருந்த போது 2019-ல் நடந்த தேர்தலிலும் காங்கிரசுக்கு தோல்வியே மிஞ்சியதால் (52 இடங்கள்), வேறு தலைவரை தேர்வு செய்யுமாறு கூறிவிட்டு, அவர் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவை தாஜா செய்ய, அவரோ மீண்டும் தலைவர் பதவியை ஏற்க மறுத்தார். இதனால் காரிய கமிட்டி கூடி சோனியாவை இடைக்கால தலைவராக தேர்ந்து எடுத்தது. அவரும் வேறு வழியின்றி அந்த பொறுப்பை ஏற்க வேண்டியதாகிவிட்டது.

காங்கிரசுக்கு ஏற்படும் தொடர் தோல்விக்கு கட்சியின் தலைமை சரி இல்லாததே காரணம் என்ற முணுமுணுப்பு சில மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் உள்ளது. சோனியா குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சி தலைமை மாறவேண்டும் என்று விரும்பும் அவர்கள், அவ்வப்போது தங்கள் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட சிலர் கட்சியை விட்டும் வெளியேறினர். இது சோனியாவுக்கு மிகுந்த வருத்தத்தையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியது.

ஒரு காலத்தில் மத்தியிலும், கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கோலோச்சிய அந்த கட்சி இப்போது ஒரு சில மாநிலங்களிலேயே ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இதனால் பலவீனமான நிலையில் இருக்கும் கட்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சோனியா குடும்பத்துக்கு உள்ளது. அவரைத்தான் கட்சியினர் மலைபோல் நம்பி இருக்கிறார்கள். கட்சியை தூக்கி நிறுத்துவதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள நீண்ட நடைபயணம் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை.

இப்படியொரு இக்கட்டான காலகட்டத்தில்தான் காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வருகிற 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்கள் குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடமாட்டார்கள் என்று சோனியா கூறியது, அவரது எதிர்ப்பாளர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொரு புறம் கட்சியின் எதிர்காலம் என்னாகுமோ? என்ற அச்சத்தையும் உண்டாக்கி இருக்கிறது.

காங்கிரசுக்கு செயல்திறன்மிக்க புதிய தலைவர் தேவை என்று ஏற்கனவே பேசி வந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூர், தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றால் அதில் தான் போட்டியிடப்போவதாக ஏற்கனவே கூறி இருந்தார். அதன்படி அவர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சோனியா, ராகுலின் மறைமுக ஆசியுடன் கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே களம் காண்கிறார். இதனால் அவர், தான் வகித்து வந்த நாடாளுமன்ற மேல்-சபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். சோனியா குடும்பத்துக்கு மிகவும் விசுவாசமானவர் என்பதால், காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கார்கேவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

(ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மந்திரி கே.என்.திரிபாதியும் தலைவர் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்து இருந்தார். ஆனால் முறையாக இல்லாததால் தேர்தல் கமிட்டி தலைவர் மதுசூதன் மிஸ்திரி அவரது மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். இதனால் நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது.)

காங்கிரஸ் தலைமை மீது சசிதரூருக்கு எப்போதுமே அதிருப்தி உண்டு. சோனியாவுக்கும் இவருக்கும் அவ்வளவாக ஆகாது. காங்கிரசின் செயல்பாடுகளை இவர் அவ்வப்போது பகிரங்கமாக விமர்சித்து, மூத்த தலைவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது வாடிக்கை. "மெத்த படித்த அறிவாளியான இவர், பிரச்சினைகளை சமாளிக்க பெரிதும் உதவியாக இருப்பார் என்று பார்த்தால், அடிக்கடி 'சேம்சைடு கோல்' அடித்து எதிரிகள் மெல்லுவதற்கு அவல் கொடுக்கிறாரே?" என்று அவர்கள் அலுத்துக்கொள்வதும் உண்டு.

ஏற்கனவே காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஜி-23 குழுவில் உள்ள தலைவர்களில் சிலர் மறைமுகமாக சசிதரூருக்கு கொம்புசீவி விடுவதாக குற்றச்சாட்டு உண்டு. "சர்வதேச அரசியலை கரைத்து குடித்த உங்களைப் போன்ற பெரிய அறிவாளிதான் காங்கிரசுக்கு தலைவராக வேண்டும்; அப்போதுதான் கட்சி வளரும்" என்றும் அந்த தலைவர்கள் அவரை உசுப்பேத்தி விட்டதாக கூறப்படுகிறது. அந்த உற்சாகத்தில்தான் சசிதரூர் களத்தில் குதித்து இருக்கிறார்.

"அரசியலில் பிரகாசிப்பதற்கு அறிவாளியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; புத்திசாலித்தனம் இருந்தால் போதுமானது" என்ற அரசியல் சூத்திரத்தை சசிதரூருக்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை போலும்.

சோனியாவின் ஆசியுடன் மல்லிகார்ஜூன கார்கே களம் இறங்குகிறார் என்று தெரிந்ததும், சசிதரூருக்கு தூபம் போட்ட பலரும், மேலிடத்து பொல்லாப்பு எதற்கு? என்று பயந்து நைசாக பம்மிவிட்டனர். இது வேட்புமனு தாக்கலின் போது பட்டவர்த்தனமாக தெரிந்தது. கேரளாவைச் சேர்ந்த ஒரு சில நிர்வாகிகள் தவிர, குறிப்பிட்டு சொல்லக்கூடிய தலைகள் யாரும் அவருடன் வரவில்லை. இதனால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிவிட்டோமோ? என்று அவர் தவிப்பதாக கூறப்படுகிறது.

என்றாலும் அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வருகிறார். கார்கேவும் தனக்கு ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளார். தலைவர் தேர்தல் நேர்மையாக நடைபெறும் வகையில், பொதுச்செயலாளர்கள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எந்தவொரு வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடம் தடை விதித்து இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதாவுக்கு எதிராக போராடவேண்டிய இந்த காலகட்டத்தில் நமக்குள் போட்டி வேண்டாம் என்றும், கருத்தொற்றுமையுடன் காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என்றும் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்த யோசனையை சசிதரூர் நிராகரித்துவிட்டார். இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ளது போல், இங்கும் பொதுவிவாதம் நடத்தி தலைவரை தேர்வு செய்யலாம் என்பது அவரது கருத்து. ஆனால் அதற்கு நம் நாட்டில் வாய்ப்பு இல்லை என்பதால், தேர்தல் மூலம் தலைவரை தேர்ந்தெடுப்பதே நல்லது என்று கூறிவிட்டார். அத்துடன் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை தான் சந்தித்து பேசியதாகவும், கட்சி தலைமையின் சார்பில் அதிகாரபூர்வ வேட்பாளர் யாரும் நிறுத்தப்படாததால் இந்த தேர்தலில் தாங்கள் நடுநிலை வகிப்பதாக அவர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், வாக்குப்பதிவு நேர்மையாகவும், நடுநிலையுடனும் நடைபெற வேண்டும் என அவர்கள் விரும்புவதாகவும் சசிதரூர் கூறி உள்ளார்.

சசிதரூரின் வேட்புமனுவை முன்மொழிந்து இருப்பதோடு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், சசிதரூரை போன்ற முற்போக்கு சிந்தனை கொண்ட, அறிவுசார் விவாதங்களை மேற்கொள்ளும் ஒருவர் தலைமை ஏற்றால் அது கட்சிக்கு வலு சேர்க்கும் என்று டுவிட்டர் பதிவில் கொளுத்தி போட்டு இருக்கிறார். இது தமிழக காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் 9,300 பேர் தலைவர் தேர்தலில் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்கள். 17-ந்தேதி அந்தந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். 19-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 710 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு பல கோஷ்டிகள் இருந்தாலும் பெரும்பாலான ஓட்டுகள் மல்லிகார்ஜூன கார்கேவுக்கே கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்ற மாநிலங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். இந்த தேர்தலை சோனியாவுக்கும் சசிதரூருக்கும் இடையேயான போட்டியாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மறைமுகமாக சோனியா நடத்தும் இந்த நீயா? நானா? ஆட்டத்தில் கார்கே வெற்றி பெறும் பட்சத்தில், சசிதரூரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

'ஜகா' வாங்கிய அசோக் கெலாட்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூரை எதிர்த்து முதலில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டைத்தான் காங்கிரஸ் மேலிடம் கோதாவில் இறக்குவதாக இருந்தது. இதனால், ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், அவர் முதல்-மந்திரி பதவியை கைகழுவ வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

"அண்ணன் எப்போ போவான்; திண்ணை எப்போ காலியாகும்?" என, முதல்-மந்திரி நாற்காலியை எதிர்பார்த்து பல ஆண்டுகளாக இலவு காத்த கிளியாக காத்திருக்கும் முன்னாள் துணை முதல்-மந்திரியும் இளம் தலைவருமான சச்சின் பைலட், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காய்களை வேகமாக நகர்த்த தொடங்கினார். இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் ஏற்பட்ட குழப்பத்தில் ஆளும் காங்கிரசில் பிளவு உண்டாகி, ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது.

இதனால் அரண்டு போன அசோக் கெலாட், என்றோ கிடைக்க இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் களாக்காயே மேல் என்பது போல், தேர்தலில் போட்டியிடும் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, முதல்-மந்திரி நாற்காலியை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

இதனால், அசோக் கெலாட்டை கட்சி தலைவராக்கிவிட்டு, சச்சின் பைலட்டை முதல்-மந்திரியாக்கும் காங்கிரஸ் மேலிடத்தின் முயற்சி பலிக்கவில்லை.

பாவம்! சச்சின் பைலட்... இந்த முறையும் அதிர்ஷ்டம் அவருக்கு கைகொடுக்கவில்லை.

22 ஆண்டுகளுக்கு பின் தேர்தல்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. 1996-ல் காங்கிரஸ் தலைவரான சீதாராம் கேசரியின் பதவி காலத்தில் கட்சி தோல்வியை சந்தித்ததாலும், அவர் செல்வாக்கு மிக்கவர் அல்ல என்பதாலும் 1998-ல் காரிய கமிட்டி அவரை தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, சோனியாகாந்தியை முதன் முதலாக கட்சியின் தலைவராக நியமித்தது. வெளிநாட்டை பூர்வீகமாக கொண்ட சோனியா தலைவரானதற்கு சரத்பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் போன்ற சில மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சரத்பவார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தேசியவாத காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

அதன்பிறகு 2000-வது ஆண்டு காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போது சோனியாவை எதிர்த்து ராஜேஷ் பைலட் போட்டியிடுவதாக இருந்தது. அவர் விபத்தில் மரணம் அடைந்ததால், ஜிதின் பிரசாதா போட்டியிட்டார். இந்த தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார். சோனியா 99 சதவீத வாக்குகளை பெற்று மகத்தான வெற்றி பெற்றார். அதன்பிறகு இப்போது காங்கிரசார் ஓட்டுப்போட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

நீண்டகாலம் பதவி வகித்தவர்

மும்பையில் 1885-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 72 பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் ஆலன் ஆக்டாவியன் ஹியூம் என்பவரால் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது. உமேஷ் சந்திர பானர்ஜி கட்சியின் முதல் தலைவர் ஆவார். இதுவரை 61 பேர் தலைவர் பதவியை வகித்து உள்ளனர்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அன்னிபெசன்ட் அம்மையார், கோபால கிருஷ்ண கோகலே, மோதிலால் நேரு, சரோஜினி நாயுடு, ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் உள்ளிட்டோர் தலைவர் பதவியை அலங்கரித்து உள்ளனர்.

சுதந்திரம் அடைந்த பின் இதுவரை போகராஜு பட்டாபி சீதாராமையா, புருஷோத்தம்தாஸ் டாண்டன், ஜவகர்லால் நேரு, யு.என்.தீபர், சஞ்சீவரெட்டி, காமராஜர், எஸ்.நிஜலிங்கப்பா, ஜெகஜீவன் ராம், சங்கர்தயாள் சர்மா, தேவகாந்த் பரூவா, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, பி.வி.நரசிம்மராவ், சீதாராம் கேசரி, சோனியாகாந்தி, ராகுல் காந்தி என 16 பேர் காங்கிரஸ் தலைவராகி இருக்கிறார்கள். நேரு சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் தலைவராக இருந்துள்ளார்.

இவர்களில் நீண்டகாலம் பதவி வகித்தவர் சோனியா காந்தி (21 ஆண்டுகள்). இவர் 1998 முதல் 2017 வரை தலைவர் பதவியில் இருந்தார். தற்போது இடைக்கால தலைவராக இருக்கிறார்.

பெருந்தலைவர் காமராஜர் 1964 முதல் 1967 வரை மூன்று ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.

பழுத்த அரசியல்வாதி

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜூன கார்கே பழுத்த அரசியல்வாதி. பிரச்சினைகளை திறமையாகவும், நாசூக்காகவும் கையாளுவதில் வல்லவர். 80 வயதாகும் இவர் கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள வரவட்டி கிராமத்தில் 1942-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி பிறந்தார். இவரது மனைவி பெயர் ராதாபாய். மூன்று மகன்களும், இரு மகள்களும் உள்ளனர்.

சட்டம் படித்துள்ள இவர் மத்திய அரசில் ரெயில்வே மந்திரி, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு துறை மந்திரி பதவிகளை வகித்து இருக்கிறார். குல்பர்கா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2014 முதல் 2019-வரை நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். கர்நாடகத்தில் மந்திரியாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ள மல்லிகார்ஜூன கார்கே 1972 முதல் 2009-வரை தொடர்ந்து 10 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது சாதனையாக கருதப்படுகிறது.

மேலும் செய்திகள்