< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...!
சிறப்புக் கட்டுரைகள்

ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி.யில் சேர்ந்து படிப்போமா...!

தினத்தந்தி
|
22 Oct 2022 3:07 PM IST

ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படிப்பது என்பது பல மாணவர்களின் கனவு. ஆனால், அது இறுதிவரை பலருக்கும் கனவாகவே இருந்துவிடும். ஏனெனில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் வழிதவறிவிடுவார்கள். அப்படி ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. பற்றிய புரிதலை உண்டாக்கும் தொகுப்பாக இதை பதிவு செய்கிறோம்.

ஐ.ஐ.டி:மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல வெறும் பிளஸ்-2 மதிப்பெண்களை மட்டுமே வைத்துக்கொண்டு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நுழைந்து விட முடியாது. இதற்கென்று தனியாக நுழைவுத்தேர்வுகள் இருக்கின்றன. ஜே.இ.இ. மெயின் தேர்வினை எழுதி, அதில் அதிக கட்- ஆப் மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றால்தான், ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களில் நுழைய முடியும்.

பாடப்பிரிவுகள்:பி.டெக்., இளநிலையில் ஏரோஸ்பேஸ், விவசாயம், செராமிக், எனர்ஜி, தாது வளங்கள், நேவல் ஆர்கிடெக்‌ஷர், ஓஷன் என்ஜினீ யரிங், பயோ டெக்னாலஜி, கெமிக்கல், பயோ மெடிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் டெலி கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமெண்டேஷன், இண்டஸ்டிரியல் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமெண்டேஷன், மெட்டலார்ஜிக்கல், மெக்கானிக்கல், மைனிங், புரொடெக்‌ஷன் அண்ட் இண்டஸ்டிரியல், டெக்ஸ்டைல், இயற்பியல் மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

ஐ.ஐ.டி.,க்கள் எங்கெங்கு உள்ளன?: மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி., தமிழகத்தில் சென்னையில் உள்ளது. தவிர, மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், ரூர்க்கி, வாரணாசி, தன்பாத் ஆகிய இடங்களிலும் உள்ளன.

வேலைவாய்ப்பு: ஐ.ஐ.டி.,க்களில் பி.டெக்., தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து எம்.டெக்., எம்.பி.ஏ., போன்ற உயர்கல்வி படிக்கலாம். பெரும்பாலும், ஐ.ஐ.டி.க்களில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கும்போதே வளாக தேர்வு மூலம் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் அவர்களை அழைத்து போய்விடுவதுண்டு.

இணையதளம்:ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வுகள் பற்றிய கூடுதல் விவரங்களை www.jeemain.nic.in மற்றும் www.jeeadv.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்து அறியலாம்.

என்.ஐ.டி.

ஐ.ஐ.டி., போல என்.ஐ.டி. என்பதும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனம்தான். இங்கும் ஐ.ஐ.டி.போல பலவிதமான பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. என்.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கவும், ஜே.இ.இ. தேர்வு அவசியமாகிறது.

தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் என்.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும், புதுச்சேரி, குருஷேத்ரா, கொல்கத்தா, டெல்லி, அகர்தலா, துர்காபூர், கோவா, போபால், ஜெய்ப்பூர், அலகாபாத், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, ஜலந்தர், ஜாம்ஷெட்பூர், நாக்பூர், பாட்னா, ராஜ்பூர், ரூர்கேலா, சிக்கிம், சில்சார், ஸ்ரீநகர், சூரத், சூரத்கல், உத்தரகாண்ட், வாரங்கல், அருணாச்சல பிரதேசம், ஹமீர்பூர் ஆகிய இடங்களில் என்.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகின்றன. ஐ.ஐ.டி.யில் படித்தால் என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்குமோ அதே வரவேற்பு என்.ஐ.டி.யில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கும் உண்டு.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.யில் படித்த மாணவர்களுக்கே முன்னுரிமை அளித்து வேலைக்குத் தேர்வு செய்கின்றன. சுயதொழிலும் தொடங்கலாம். மேலும், எம்.டெக்., மற்றும் எம்.பி.ஏ., போன்ற முதுநிலை தொழில்படிப்புகளையும் தொடரலாம்.

மேலும் செய்திகள்