தன்ைனத்தானே மெருகேற்றும் 'அலங்கார கலை'
|‘செல்ப் குரூமிங்’ என்ற வார்த்தை, சமீப காலமாகவே ரொம்ப டிரெண்டாக பகிரப்படுகிறது. குறிப்பாக, கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள், ஐ.டி. மற்றும் அரசு துறையில் பணிபுரியும் குடும்ப பெண்கள் மத்தியிலும், ‘செல்ப் குரூமிங்’ கலாசாரம் அதிகமாக தென்படுகிறது.
அது என்ன 'செல்ப் குரூமிங்', இதன்மூலம் நம்மை எப்படி மேம்படுத்திக் கொள்ளமுடியும்... என்பது போன்ற கேள்விகளுடன், தேன்மொழியை சந்தித்தோம்.
வேலூரில் வசிக்கும் இவர், எம்.எஸ்சி மென்பொருள் அறிவியல் படித்தவர். 8 ஆண்டுகள் ஐ.டி. துறையில், மென்பொருள் டெவலெப்பராக பணியாற்றி இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு, ஐ.டி.வேலைக்கு 'குட்-பை' சொன்னவர், 'செல்ப் குரூமிங்' சம்பந்தமான அழகு கலை பயிற்சிகளை முடித்து, இப்போது 'செல்ப் குரூமிங் எக்ஸ்பெர்ட்' ஆக, நிறைய பெண்களுக்கு வழிகாட்டுகிறார். குறிப்பாக, அழகு கலை சம்பந்தமான பல பயிலரங்கங்களை நடத்துகிறார்.
இவரிடம், 'செல்ப் குரூமிங்' பற்றிய பல சந்தேகங்களுக்கு விடைபெற்றோம். அவை இதோ...
* அது என்ன 'செல்ப் குரூமிங்'?
நம்மை நாமே மெருகேற்றும் கலைக்குதான், 'செல்ப் குரூமிங்' என்று பெயர். உடை அலங்காரம், சிகை அலங்காரம், மேக்கப், நகம் பராமரிப்பு, பல் பராமரிப்பு, உடல் பராமரிப்பு... என நம்மை எல்லா விதங்களிலும், அழகாக்கும் விஷயங்களை கற்றுக்கொண்டு, அதன்மூலம் நம்மை நாமே மேம்படுத்துவதுதான், 'செல்ப் குரூமிங்'.
* 'செல்ப் குரூமிங்' செய்வதன் அவசியம் என்ன?
வழக்கமான கூட்டத்தில் இருந்து, தங்களை தனித்துவமாக வெளிக்காட்டுவதில் எல்லா பெண்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு 'செல்ப் குரூமிங்' வழிகாட்டும். கூடவே, ஆடை-அலங்கார விஷயங்களில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்கையில், அது பணியிடத்தில் கூடுதலான தன்னம்பிக்கையுடன் பணியாற்ற வழிவகுக்கும்.
* ஆடை-அலங்கார விஷயங்களால், தன்னம்பிக்கை அதிகரிக்குமா?
ஆம்! நிச்சயமாக. நாம் அணிந்திருக்கும் ஆடையும், நாம் செய்து கொண்டிருக்கும் 'மேக்கப்' அலங்காரங்களும் நமக்கு நன்றாக பொருந்துகிறது. அது நம்மை தனித்துவமாக, சிறப்பானவர்களாக வெளிக்காட்டுகிறது என்று நம் ஆழ்மனதில் தோன்றும் சிறு நம்பிக்கை, பணியிடத்தில் உற்சாகமாக இயங்கவும், எந்த ஒரு சூழலையும் 'பாசிட்டிவாக' அணுகவும், வழிவகுக்கிறது. மேக்கப் மற்றும் ஆடை அலங்காரங்கள் உண்டாக்கும் 'செல்ப் கான்பிடன்ஸ்' நமக்கு பிரத்யேக 'எனர்ஜியை' உண்டாக்கும். அது நம்மிலும், நம் பணியிலும் வெளிப்படும்போது, எல்லா விஷயங்களிலும் வெற்றியே கிடைக்கும்.
* பணிபுரியும் பெண்களுக்கு, 'செல்ப் குரூமிங்' அவசியமா?
இதற்கான பதில் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்திற்கு ஏற்ப மாறுபடும். பொழுதுபோக்கு, மீடியா, அழகு நிலையங்களில் பணிபுரியும் பெண்களுக்கு நிச்சயம் 'மேக்கப்' அவசியம். மேக்கப் மட்டுமல்ல, 'செல்ப் குரூமிங்' சம்பந்தப்பட்ட, எல்லா அழகு பயிற்சிகளும் அவசியம்.
கிராமப்புற பகுதிகளில் பணிபுரியும் பெண்களுக்கு, 'மேக்கப்' மட்டுமே தேவைப்படும். ஆனால் சென்னை, பெங்களூரு, மும்பை... போன்ற பெருநகரங்களில் இயங்கும் ஐ.டி. அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, மேக்கப்புடன் சேர்த்து மற்ற அழகு பயிற்சிகளும் அவசியம். ஏனெனில், அங்கு ஏற்கனவே பணியாற்றும் பெண்களுடன், நீங்கள் ஒன்றர கலக்க 'மேக்கப்' நுணுக்கங்களையும், 'பேஷன்' அம்சங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்த கூட்டத்தில் இருந்து நீங்கள் மட்டும் தனியாக தெரிவீர்கள்.
* சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களுக்கு, புதிதாக பணிக்கு செல்ல இருக்கும் பெண்கள், தங்களை எப்படி தயார் செய்து கொள்ள வேண்டும்?
தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் வளர்ந்த பெண்களும், படித்து முன்னேறி பெருநகரங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள். அப்படி உங்களுக்கும், பெருநகர ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால், உடை தேர்வு மற்றும் அலங்கார விஷயங்களில் கவனமாக இருங்கள்.
அதுநாள் வரை, மேக்கப் விஷயங்களில் ஆர்வம் இல்லாமல் உங்களுக்கு என ஒரு பிரத்யேக 'ஸ்டைல்'-ஐ கடைப்பிடித்திருக்கலாம். ஆனால் அது பெருநகர வாழ்க்கைக்கு பொருந்தாது. முடிந்தவரை, நகர சூழலுக்கு ஏற்ப சின்னச்சின்ன மேக்கப் மற்றும் உடை அலங்கார நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். பணிச்சூழல், உடன் பணிபுரிபவர்களை பற்றி அறிந்த பிறகு, அலுவலகத்திற்கு அணிந்து செல்லக்கூடிய ஆடை, அலங்கார பொருட்களை வாங்கலாம்.
எல்லோருடைய கவனத்தையும் சட்டென ஈர்க்கும் நிறங்களிலான உடைகளையும், உதட்டு சாயங்களையும், அலங்கார பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான மேக்கப்பை தவிர்த்துவிடுங்கள். அதற்காக மேக்கப் இல்லாமலும், பணிக்கு செல்லாதீர்கள். அதேபோல, அணியும் உடைக்கு ஏற்ற காலணி அல்லது ஷூ தேர்வும் முக்கியம்.
சுடிதார், குர்த்தி, ஜீன்ஸ், லெக்கின்ஸ், பலாசோ, பிளேசர்ஸ்... இவை எல்லாம் ஐ.டி. கலாசாரத்தில் பொதுவானவை. அதனால் இத்தகைய உடைகளை தேர்ந்தெடுத்து உடுத்தலாம். பணியிடம் பழக்கமானதற்கு பிறகு, உங்களுக்கான 'ஸ்டைலை' மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
* மேக்கப் விரும்பாதவர்கள் என்ன செய்யலாம்?
'செல்ப் குரூமிங்' விஷயத்தில், 'சுத்தம்' (Personal hygiene) மிகமிக அவசியம். உங்களுக்கு மேக்கப் விஷயங்களில் ஈடுபாடு இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் முகப்பொலிவை தக்க வைக்கும் சிறுசிறு விஷயங்களிலாவது ஆர்வம் செலுத்துங்கள். அதாவது, முகத்தை சுத்தமாக பராமரிப்பது; நக பூச்சு பூசவில்லை என்றாலும் நகங்களை சுத்தமாக பராமரிப்பது, முகம் கருக்காமல் இருக்க 'சன்ஸ்கிரீன்' போடுவது, யாரும் குறை சொல்லாதபடி தலை முடிகளை பராமரிப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் கவனமாக இருங்கள்.
* 'செல்ப் குரூமிங்' திறனை வளர்ப்பது எப்படி?
இன்றைய டீன் ஏஜ் பெண்கள், அழகு கலை சார்பான அறிவை வளர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். மேக்கப் கலையின் அடிப்படையை கற்றுக்கொள்கிறார்கள். சிகை அலங்காரங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். நகம், பாதம் பராமரிப்பு, புடவை அணிவித்தல், உடை நாகரிக அறிவு... இப்படி எல்லாவற்றையும் சிறுசிறு பயிற்சிகளாக கற்றுக்கொண்டு, அதன்மூலம் தங்களை மெருகேற்றிக் கொள்கிறார்கள். ஏனெனில், மேக்கப் பார்லர்களில் அதிக பணம் செலவழிப்பதை விட, அலங்கார அம்சங்களை கற்றுக்கொண்டு தங்களை தாங்களே மெருகேற்றுகிறார்கள்.
* முகப் பொலிவை மேம்படுத்த நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
முகப் பொலிவை மெருகேற்ற நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதேபோல குளித்து முடித்தவுடன், உடலில் 'மாய்ஸ்சுரைசர்' கிரீம் பூசுவதை வழக்கமாக்க வேண்டும்.
* புதிதாக மேக்கப் செய்பவர்களுக்கு, உங்களுடைய டிப்ஸ்?
மேக்கப் செய்வதற்கு முன், முகத்தை நன்றாக கழுவவேண்டும். முகத்தில் பரு, சிறுசிறு துளைகள் இருந்தால் அதை 'பிரைமர்' எனப்படும் பூசு பொருள் கொண்டு சரிசெய்த பிறகு, 'பவுண்டேஷன்' பூச வேண்டும். நம்முடைய நிறத்திற்கு ஏற்ற பவுண்டேஷன்களை தேர்வு செய்வது கடினம் என்றாலும், அதில் அதீத கவனம் செலுத்தினால் மேக்கப் செய்திருப்பதே தெரியாத அளவிற்கு 'நீட்'டாக இருக்கும்.
எண்ணெய் பசை தன்மை கொண்டவர்கள், 'காம்பாக்ட் பவுடர்' பயன்படுத்துவது நல்லது. கண்களுக்கு கீழ் இருக்கும் கருவிழிகளை 'கன்சீலர்' கொண்டு சீராக்கலாம். மேக்கப்பை கூடுதல் பொலிவாக்க, 'பிரான்சர்' கொண்டு ஜொலிக்க வைக்கலாம்.
'கான்டர்' என்பதை பயன்படுத்துவதன் மூலம் குண்டாக தெரியும் முகத்தை கூட, ஒல்லியாக காட்டமுடியும். மேக்கப் விஷயத்தில் கண் மற்றும் புருவம் மிக முக்கியமானது. ஏனெனில் கண் புருவங்கள்தான், முக அழகை நிர்ணயிக்கக்கூடியவை. அதை அழகாக்க 'ஐ புரோ பவுடர்', 'ஐ லைனர்', 'மஸ்காரா' போன்றவை புழக்கத்தில் இருக்கின்றன. இறுதியாக உதடுகளை 'லிப் பாம்', 'லிப் லைனர்', 'லிப்ஸ்டிக்' கொண்டு அழகாக்கலாம்.
* மேக்கப்பை கலைப்பது எப்படி?
மேக்கப்பை கலைப்பதற்கு என பிரத்யேக லோஷன் இருக்கிறது. இல்லாதபட்சத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து, மேக்கப்பை கலைக்கலாம். இரவு தூங்க செல்லும் முன், கட்டாயமாக மேக்கப்பை கலைக்க வேண்டும்.
ஏனெனில் மேக்கப் கிரீம் பூசுவதால் அடைக்கப்பட்டிருக்கும் சரும துளைகள் அதற்கு பிறகுதான் சுவாசிக்க ஆரம்பிக்கும்.