அழகான தோற்றம் கொண்ட 'நெடுங்கால் கழுகு'
|பருந்து, பிணந்தின்னிக் கழுகுகள், பூைனப் பருந்துகளின் வரிசையில் ஒரு அங்கமான உள்ளது, ‘நெடுங்கால் கழுகு.’ இதனை ‘தரைப் பருந்து’, ‘நெடுங்கால் பாம்புப் பருந்து’ என்றும் அழைப்பார்கள்.
ஆங்கிலத்தில் 'Secretary Bird' என்பது இதன் பெயர். ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படக்கூடிய அரியவகை பறவை இனமாக இது இருக்கிறது. நீளமாக வளரும் புல்வெளிப் பகுதிகளை தங்கள் இருப்பிடமாகக் கொண்டவை. இவை ஆப்பிரிக்காவின் சப்-சஹாரா பிராந்தியத்தின் திறந்த புல்வெளிகளில் அதிம் காணப்படுகின்றன.
கொக்கு போன்ற நீளமான கால்களையும், கழுகு போன்ற உடல் அமைப்பையும் கொண்ட பறவை இது. இதன் தலைப் பகுதிக்கு மேலே இருக்கும் சில இறகுகள் இதனை அழகான பறவைகளின் பட்டியலிலும் சேர்த்துவிடுகிறது. இது சராசரியாக 1.3 மீட்டர், அதாவது 4 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட மிகப்பெரிய பறவையாகும். ஆண், பெண் இரண்டு பறவைகளும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவை. வளர்ந்த பறவைகள் இறகுகள் இல்லாத சிவப்பு-ஆரஞ்சு நிற முகத்தையும், சாம்பல் மற்றும் கருமை நிறத்தில் இறகுகளையும், காலின் தொடைப் பகுதிகளையும் பெற்றிருக்கும்.
இந்தப் பறவையின் இனப்பெருக்கம் ஆண்டின் எந்த நேரத்திலும் நடைபெறும். ஆனால் வறட்சி மிகுந்த பருவ காலத்தில் இனப் பெருக்கம் குறைவாக இருக்கும். இனப்பெருக்கத்திற்காக ஒரு முள் மரத்தின் உச்சியில் கூடு கட்டும். ஒன்று முதல் மூன்று முட்டைகள் வரை இடும். பல வருடங்களுக்கு இவை தன்னுடைய குஞ்சுகளை பாதுகாக்கும். சிறிய பூச்சிகள், சிறிய முதுகெலும்பு உயிரினங்களை வேட்டையாடும் இந்தப் பறவையின் முக்கிய உணவாக பாம்புகள் இருக்கின்றன. இந்தப் பறவை தன்னுடைய உணவை, தன்னுடை வலுவான கால்களால் மிதித்து, அந்த அழுத்தத்திலேயே அவற்றை கொன்றுவிடும் சக்தி பெற்றவை. இந்த நெடுங்கால் கழுகு, சூடான் மற்றும் தென்னாப்பிரிக்காவின் சின்னங்களில் காணப்படுகின்றன.