ஜி-7 மாநாடு நடைபெறும் ஸ்க்லோஸ் எல்மாவ் பகுதிக்கும் இந்தியாவுக்கும் உள்ள இணைப்பு - சுவாரசியமான வரலாறு!
|இந்த ஓட்டல் 1914 மற்றும் 1916 க்கு இடையில் ஜோஹன்னஸ் முல்லர் என்ற கட்டுமான பொறியாளரால் கட்டப்பட்டது.
பெர்லின்,
ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஜி-7 மாநாடு, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. நேற்று மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த மாநாடு நடைபெறும் ஸ்க்லோஸ் எல்மாவ் பகுதிக்கும் இந்தியாவுக்கும் ஒரு இணைப்பு உள்ளது.
ஜி-7 மாநாடு நடைபெறும் 'ஸ்க்லோஸ் எல்மாவில்' அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலில் விநாயகப் பெருமானின் தாக்கம் அதிகம்.முன்னதாக, 2015 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளும், ஜி-7 மாநாடு இந்த இடத்தில் நடைபெற்றுள்ளது. இந்த இடத்திற்கு வருபவர்களுக்கு விநாயகர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த ஆடம்பர கோட்டை 1914 மற்றும் 1916 க்கு இடைப்பட்ட காலத்தில், ஜோஹன்னஸ் முல்லர் என்ற கட்டுமான பொறியாளரால் கட்டப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, முல்லர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார் மற்றும் அவர் கட்டிய இந்த ஆடம்பர கோட்டை அமெரிக்க இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.
அதன்பின் சட்ட போராட்டத்துக்கு பின் கோர்ட்டு தீர்ப்பின்படி, முல்லரின் குழந்தைகள் 1961 இல் இந்த கோட்டையின் உரிமையாளர்களாக ஆனார்கள். இன்று இந்த ஆடம்பர விடுதி ஜோஹன்னஸ் முல்லரின் பேரனான டயட்மர் முல்லர்-எல்மாவுக்கு சொந்தமானது.
ஆகஸ்ட் 2005இல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஓட்டல் பெரிதும் சேதமடைந்தது. அதனை தொடர்ந்து, புனரமைப்பு பணிகள் 2007 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை நீடித்தது.
புதுப்பிக்கப்பட்ட விடுதி பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும் உலகின் மிகச்சிறந்த தங்குமிடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.அதற்கு காரணம் இங்கு நிலவும் தனிமை நிறைந்த அமைதியான சூழல் தான்.
முல்லர்-எல்மாவுக்கு மேலும் ஒரு லட்சியம் இருந்தது. ஜி7 உச்சிமாநாட்டிற்கு ஏற்றதாக ஒரு மாபெரும் ஓட்டலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டார். எனவே அவர் அங்கிருக்கும் கோட்டையிலிருந்து 100 மீட்டர் (சுமார் 330 அடி) தொலைவில் மற்றொரு ஓட்டலைக் கட்டினார்.அந்த விடுதி தான், 2015இல் ஜி7 மாநாட்டுடன் திறக்கப்பட்டது. இப்போதும் அங்கு தான் உலக தலைவர்கள் கூடியுள்ளனர்.
இந்த நட்சத்திர விடுதியின் உரிமையாளர் டயட்மார் முல்லர், தனது இளமைப் பருவத்தில் இந்தியாவில் வாழ்ந்தவர். அவர் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடு செய்தார். இந்தியாவில், தனிநபர் சுதந்திரத்தின் உத்வேகம் மிகவும் வலியுறுத்தப்படுகிறது என்று அவர் ஒருமுறை பேட்டியில் கூறினார். அந்த அளவிற்கு இந்தியாவை அவர் நேசிக்கிறார்.
டயட்மரின் இந்திய நெறிமுறைகள் மீதான காதல் தான், இந்த நட்சத்திர விடுதியின் மரச்சாமான்களில் கூட பிரதிபலித்தது. இந்திய கட்டிடக்கலையில் இருந்து ஈர்க்கப்பட்டு அங்குள்ள நாற்காலிகள் முதல் மேஜைகள் வரை அனைத்தும் கண்களை கவருகின்றன.
விநாயகப் பெருமானின் ஆற்றல் இந்த ஓட்டலில் பரவிக்கிடக்கும் இந்திய சிந்தனை மற்றும் தத்துவத்துடன் இணைக்கிறது. இங்கு 'விநாயகர்' கடவுளின் பெயரால் ஒரு உணவகம் உட்பட பல அம்சங்கள் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியே அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஓட்டலில் 115 அறைகள் உள்ளன. மேலும், யோகா, இந்திய இசை கச்சேரி அரங்கம் என நம் நாட்டை பிரதிபலிக்கும் பல அம்சங்கள் நிறைந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இந்த இடம் ஜெர்மனியின் தெற்கே ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ளது. முனிச் நகரத்திலிருந்து வெகு சீக்கிரம் இவ்விடத்தை அடையலாம்.