தெறிக்கவிடும் தென்னிந்திய சினிமா; பதற்றத்தில் பாலிவுட்
|வெளிநாட்டில் இந்திய சினிமா என்றாலே ‘இந்தி’ சினிமாதான். கோலிவுட் (தமிழ்), டோலிவுட் (தெலுங்கு), மோலிவுட் (மலையாளம்), சாண்டல்வுட் (கன்னடம்) என பல திரையுலகங்கள் இருந்தாலும், தாங்கள்தான் இந்திய சினிமாவின் அடையாளம் என்று தனிராஜ்ஜியம் நடத்திவந்தது, பாலிவுட் எனப்படும் இந்தி சினி உலகம். அதன் விரிந்த சந்தை வாய்ப்பு, அதற்கு வலுவாக கைகொடுத்து வந்தது.
பிறமொழிப் படங்களை பிராந்திய சினிமா என்ற பிரிவுக்குள் தள்ளிவிட்டுவிட்டு தாங்கள்தான் 'கெத்து' என காலரை தூக்கிவிட்டுக்கொண்டு திரிந்த பாலிவுட்காரர்கள் இன்று பதற்றத்தில் இருக்கிறார்கள். சமீபகாலத்தில் தென்னிந்திய திரைப்படங்களின் அதிரடி வெற்றிதான் அதற்கு காரணம்.
ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, கே.ஜி.எப். என்று எல்லை தாண்டி இந்தி கோட்டைகளிலும் கொடிபறக்கவிட்ட தென்னிந்திய படங்கள், சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டிருக்கின்றன. 'நாட்டு நாட்டு' என்று நாட்டையே ஆட்டுவித்த 'ரத்தம் ரணம் ரவுத்திரம்' (ஆர்.ஆர்.ஆர்.தான்) ரூ.425 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, ரூ.1,131 கோடியை வாரிக் குவித்திருக்கிறது. ஆனால் அதைவிடவும் அதகளம் பண்ணியது, 'ராக்கி பாய்' யாஷின் கே.ஜி.எப்.-2-தான். வெறும் ரூ.150 கோடியில் உருவான இப்படத்தின் வசூல் கணக்கு, ரூ.1,174 கோடி என எகிறுகிறது. அதிலும் இந்திய அளவில் இதுவரை அதிகம் கவனிக்கப்படாமல் இருந்த கன்னட திரையுலகின் முகவரியையே மாற்றி அமைந்திருக்கிறது, பிரசாந்த் நீல் பிரமாதப்படுத்திய 'கோலார் கோல்டு பீல்ட்ஸ்' (கே.ஜி.எப்.).
அல்லு அர்ஜூனின் அலட்டல் இல்லாத நடிப்பில் வெளியான 'புஷ்பா' படமும் பாதகம் இல்லாத வருமானம் (செலவு ரூ.130 கோடி; வரவு ரூ.370 கோடி) பார்த்திருக்கிறது.
ஆனால் இதற்கெல்லாம் அதிரடியாக துவக்கம் அமைத்துக்கொடுத்தது, 2015-ல் திரை கண்ட 'பாகுபலி' (முதல் பாகம்)தான். தெலுங்கு, தமிழில் நேரடியாகவும், இந்தி, மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியான இப்படம், அப்போதைக்கு மிக அதிக பட்ஜெட் படமாக விளங்கியது. ரூ.180 கோடி பட்ஜெட்டை தாண்டி இந்தப் படம் கல்லா கட்டுமா என்ற கவலை கலந்த பேச்சுகளை எல்லாம் தகர்த்து, ரூ.650 கோடி அறுவடை செய்தது பாகுபலி படை. எல்லாவற்றுக்கும் மேலாக, 'பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்?' என்ற கேள்வியை ஒட்டுமொத்த இந்தியாவையும் எழுப்பவைத்தது, வடக்கை தெற்கு நோக்கி பார்வையை திருப்பவைத்தது.
முதல் பாகத்தின் வெற்றி தந்த உற்சாகத்துடனே வெள்ளித்திரையை வெளிச்சமிட்ட பாகுபலி 2-ம் பாகம், ரூ.1,810 கோடி வருவாய் என்ற வரலாற்று சாதனையை படைத்தது. 'ஆயிரம் கோடி ரூபாய் வசூல்' என்ற சிகரத்தை எட்டிய முதல் இந்திய படம் இதுதான். ஆனால், நட்சத்திரப் பட்டாளங்களின் சம்பளம் உள்ளிட்ட இப்படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடிக்குள் அடங்கிவிட்டது.
புதிய களத்தைக் காட்டும் கதை, பற்றவைத்த பட்டாசாய் பரபரக்கும் திரைக்கதை, தரமான தயாரிப்பு, நடிகர்களின் உயிர்த்துடிப்பான நடிப்பு, இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பான உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக, பிரமாண்டம் காட்டி பிரமிப்பூட்ட வேண்டும் என்பதற்காக கோடிகளை கொட்டாமல், கதைக்குத் தேவையான நியாயமான செலவழிப்பு இருந்தால் போதும். எந்த மொழிப் படத்தையும் வரவேற்போம், அது எங்கள் மொழி (டப்பிங்) பேசினால் கூடுதல் சந்தோஷம் என்று மனக்கதவை திறந்துவிட்டார்கள் இந்திய ரசிகர்கள். கொடுக்கிற துட்டுக்கு இரண்டரை மணி நேரம் சுவாரசியமாக கழிந்தால் போதும் என்கிறார்கள்.
மலையாள மக்களே தற்போது மாற்றத்துக்கு தயாராகிவிட்டார்கள். பொதுவாக கேரளாவில் மலையாளப் படங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்ப் படங்களும், கொஞ்சம்போல தெலுங்குப் படங்களும் வரவேற்பு பெறும். ஆனால் அங்கு சமீபத்தில் விஷு-ஈஸ்டர் பண்டிகை காலத்தில் வெளியான கே.ஜி.எப்.2-ன் முதல் நாள் 'கலெக்சன்' ரூ.7.48 கோடி, ஒரு புதிய சாதனை. இது, மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், மம்மூட்டியின் புதிய படங்களான 'ஓடியன்', 'பீஷ்ம பர்வ'த்தின் முதல் நாள் வசூலை விடவும் அதிகம்.
நாடு முழுவதற்குமான 'பான் இந்தியா' படங்களில் இப்போதைக்கு முன்னணியில் இருக்கும் தெலுங்கு சினிமாக்கள், தேசம் தாண்டியும் கவனம் பெற்றிருக்கின்றன. ஹர்திக் பாண்டியா, டேவிட் வார்னர், டுவைன் பிராவோ என்று கிரிக்கெட் பிரபலங்கள், புஷ்பா புஷ்பராஜின் இழுவையான நடையையும், பேச்சையும் 'இமிட்டேட்' செய்ய, சர்வதேச விளம்பரம் ஆகிவிட்டது. 'பான் இந்தியா' படங்களுக்கு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென்கொரியா, பாகிஸ்தான் என்று பல நாடுகளைச் சேர்ந்த யூடியூபர்கள் தங்கள் சேனல்களில் 'ரியாக்ஷன்களை' வெளியிட்டு சரமாரியாய் சந்தாதாரர்களை சம்பாதிக்கிறார்கள்.
தெற்கத்திய படங்களின் பரபர 'பான் இந்திய' வெற்றி ரகசியத்தை எளிதாக சொல்லிவிடலாம். வலுவான, வழக்கம் தாண்டிய கதையுடன், நிஜ வாழ்வில் காணமுடியாத அதிசாகச நாயகர்கள், ஈர்க்கும் வசனங்கள் ('புஷ்பான்னா பூ இல்லடா... பயர்!': புஷ்பா; 'வயலன்ஸ்... வயலன்ஸ்... வயலன்ஸ்...': கே.ஜி.எப்.2), சிலிர்ப்பூட்டும் சண்டைக்காட்சிகள், 'ஜிலுஜிலு' நடனங்கள், உதடுகளில் உட்கார்ந்துகொள்ளும் பாடல்கள், தரத்துக்காக தண்ணீராய் பணம் செலவழிக்கும் தயாரிப்பாளர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக, சகமொழி நடிகர்களுடனும், பிறமொழி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கத் தயங்காத ஹீரோக்கள், அவர்களின் அசாதாரண உழைப்பு, புதுமையான புரமோசன் எல்லாம் இந்த படங்களை தூக்கி நிறுத்துகின்றன.
இன்னொரு புறம், தென்னிந்திய படங்களின் இந்திய அளவிலான வெற்றிக்கு கொரோனா காலமும், தொழில்நுட்பமும் வெகுவாக கைகொடுத்திருக்கின்றன எனலாம். கொரோனா வேளையில் வீடுகளில் முடங்கியிருந்தவர்கள், யூடியூப், இந்தி சினிமா டி.வி. சேனல்கள் மூலம் தென்னிந்திய சினிமா வாசம் அறிந்தார்கள். சேனல்களில் திரும்பத்திரும்ப ஒளிபரப்பப்பட்ட மொழிமாற்ற தென்னிந்திய திரைப்படங்களை பார்த்து அவற்றின் ருசி உணர்ந்தார்கள். ஓ.டி.டி. தளங்களும் கைகொடுத்தன.
ஒருபுறம் தென்னிந்திய திரைப்படங்கள் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றன என்றால், மறுபுறம், இலக்கு தெரியாத தத்தளிப்பில் இந்தி சினிமா பிந்தி நிற்கிறது. பார்முலா வலைக்குள் சிக்கிக்கொண்டு மீளும் வழி தெரியாமல் தடுமாறுகிறது. அமிதாப், அமீர்கான் போன்ற அசாத்திய நடிகர்களும், ராஜ்குமார் ஹிரானி, பர்ஹான் அக்தர், சஞ்சய்லீலா பஞ்சாலி, அனுராக் காஷ்யப் போன்ற திறமையான இயக்குனர்கள் இருந்தும் இந்நிலை.
இன்னொரு பக்கமும் இந்தி திரையுலகுக்கு இடி. சிங்கம், திரிஷ்யம், காவலன் போன்ற தெற்கே வெற்றி பெறும் படங்களின் கதைகளை வாங்கி 'ரீமேக்' செய்துவந்தவர்கள், அந்தப் படங்கள் 'பேச்சை' மட்டும் மாற்றிக்கொண்டு நேரடியாக திரையிறங்குவதால் திகைத்து நிற்கிறார்கள். மறுஆக்க படங்களின் மரண காலம் இது என்கிறார்கள், திரை விமர்சகர்கள். பெரிதாக விளம்பரம் இல்லாமல் 'டப்பிங்' செய்யப்பட்டு வெளியான 'புஷ்பா', இந்தியில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. பாலிவுட்காரர்கள் சீக்கிரம் சுதாரித்துக்கொள்ளாவிட்டால் சிரமம்தான்.
அதேநேரம், அந்தந்த மொழிக்குரிய தனித்தன்மையைச் சிதைக்கின்றன, ஒரு பொத்தாம்பொதுவான பண்டத்தை படைக்கின்றன, வசூல் வேட்டையே இவற்றின் குறிக்கோள் என 'பான் இந்தியா' படங்களை பல விமர்சகர்கள் வறுத்தெடுக்கிறார்கள்.
அதேபோல, கதாநாயகிகளுக்கு போதுமான முக்கியத்துவம் தருவதில்லை, நாயகர்களின் ஆண்மைத்தன்மையை அநியாயத்துக்கு பூதாகரப்படுத்தி காண்பிக்கின்றன, மசாலா மலையாக இருக்கின்றன என்று தென்னிந்திய படங்கள் குறித்த விமர்சனங்கள் வரிசைகட்டுகின்றன. ஆனால், 'எல்லா சாலைகளும் ரோம் நோக்கி...' என்பதைப் போல எல்லா பார்வைகளும் இந்தி சினிமா நோக்கி என்று இருந்ததை தங்களை நோக்கி திருப்பியதே தென்னிந்திய படங்களின் வெற்றிதான். தற்போதைய மாற்றம் தற்காலிகமானது என்ற 'ஆரூடத்தையும்' அவை அடித்து நொறுக்கி தொடர்ந்து முன்னேறும் என்று நம்பலாம்.
அகில இந்திய நாயகர்களான ஆந்திர ஹீரோக்கள்
ஜூனியர் என்.டி.ஆர்.
'பாகுபலி' படம் மூலம் பிரபாஸ், ஆர்.ஆர்.ஆர். படம் மூலம் ஜூனியர் என்.டி.ஆர்.-ராம் சரண், 'புஷ்பா' மூலம் அல்லு அர்ஜூன் ஆகியோர் அகில இந்திய நாயகர்களாக உயர்வு பெற்றிருக்கிறார்கள். பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் ஆசையை இந்தி டாப் ஹீரோயின் தீபிகா படுகோன் சமீபத்தில் வெளிப்படையாகவே தெரிவித்தார். இந்த ஆண்டின் 'பான் இந்தியா ஸ்டார்' என்ற புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் இந்தி நட்சத்திரங்களை பின்னுக்குத் தள்ளி ஜூனியர் என்.டி.ஆர். முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். அதற்கு அடுத்த இடம், அல்லு அர்ஜுனுக்கு.
தமிழ் திமிறி எழுமா?
'சந்திரலேகா' டிரம்ஸ் நடனக் காட்சி
புதிய முயற்சிகள், அதிரடிப் பாய்ச்சல்களுக்கு எப்போதுமே தயங்காத தமிழ்த் திரையுலகம், தெலுங்கு, கன்னடத்துடன் ஒப்பிடும்போது 'பான் இந்தியா' பட முதல் சுற்றில் பின்தங்கிவிட்டது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆனால் 1948 வாக்கிலேயே 'சந்திரலேகா' என்ற சாதனைப் படம் மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார், எஸ்.எஸ்.வாசன். இப்படத்தில் புகழ்பெற்ற டிரம்ஸ் நடன காட்சிக்கு மட்டும் ஒரு படத்துக்கு இணையாக செலவிடப்பட்டதாக கூறுவார்கள். சமீபகாலங்களில், 'ரோபோ' (தமிழில் 'எந்திரன்') வெற்றிக்கதையும் இருக்கிறது. அண்மையில் 'பான் இந்தியா' பட பேச்சின்போது முன்னணி இயக்குனர் மணிரத்னம் 'சந்திரலேகா'வை குறிப்பிட்டார். அவரது 'ரோஜா', 'பம்பாய்' படங்களே பல மொழிகளில் வெற்றி பெற்றவைதான். மணிரத்னத்தின் 500 கோடி பிரமாண்டம் 'பொன்னியின் செல்வன்', தமிழில் 'பான் இந்தியா' படங்களுக்கு உத்வேகம் தரலாம்.
'ஓகோ' ஓ.டி.டி.
சூர்யாவின் 'சூரரைப் போற்று'
சினிமாக்காரர்களுக்கு தங்கள் படைப்புகளை ரசிகர்களுக்கு பரிமாறுவதற்கு மற்றொரு தளமாக உருவாகியிருக்கிறது, ஓ.டி.டி. (ஓவர் தி டாப் மீடியா). இதனால், திறமையான படைப்பாளிகளுக்கும், சிறு தயாரிப்பாளர்களுக்கும் புதுவாசல் திறந்திருக்கிறது. தமிழில் இந்த முயற்சியை வரவேற்ற முன்னோடிகளில் ஒருவர் நடிகர் சூர்யா. சில முணுமுணுப்புகளை மீறி அவர் ஓ.டி.டி.யில் வெளியிட்ட 'ஜெய்பீம்' (செலவு: ரூ.8 கோடி, வரவு: ரூ.45 கோடி), 'சூரரைப் போற்று' (செலவு: ரூ.20 கோடி, வரவு ரூ.174 கோடி) படங்கள் நல்ல வருவாய் ஈட்டியிருக்கின்றன. மலையாளக் கரையோரமும் ரூ.2 கோடியில் உருவாகி ஓ.டி.டி.யில் வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படம் ரூ.12 கோடியும், ரூ.7 கோடியில் தயாரிக்கப்பட்ட 'கும்பளங்கி நைட்ஸ்', ரூ.39 கோடியும் வசூல் பார்த்திருக்கின்றன. ஓ.டி.டி.க்கு என்றே படங்களும், வெப் சீரிஸ்களும் உருவாக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஓ.டி.டி. மூலம் ஒரு படத்துக்கான வருமானம் வருகிற 2024-ம் ஆண்டில் 23 சதவீதமாக உயரும் என்கிறது ஒரு கணிப்பு.
'பிளாப்' பிரமாண்டங்கள்
'ராதே ஷியாம்' படத்தில்...
பிரமாண்ட தயாரிப்பு என்பது மட்டும் ஒரு படத்தின் வெற்றியை உறுதிப்படுத்திவிடாது என்பதையும் சில தென்னிந்திய திரைப்படங்கள் நிரூபித்திருக்கின்றன. பிரபாசுக்கு தற்போது நாடாளாவிய அறிமுகம் இருந்தாலும், ரூ.300 கோடியில் தயாரிக்கப்பட்ட அவருடைய 'ராதே ஷியாம்' படம், அதில் பாதியைக்கூட தாண்ட முடியாமல் நொண்டி அடித்தது. நமது விஜய் சேதுபதியும் நடித்த சிரஞ்சீவியின் 'சைரா நரசிம்மா ரெட்டி'யும் வசூலில் வாட்டம் கண்டது. சிரஞ்சீவியுடன் ராம் சரண் இணைந்து நடித்த 'ஆச்சார்யா' படமும் (தயாரிப்புச்செலவு:ரூ.140 கோடி) தோல்வியில் துவண்டிருக்கிறது.