< Back
சிறப்புக் கட்டுரைகள்
புடவையும்..! புதுமையும்..!
சிறப்புக் கட்டுரைகள்

புடவையும்..! புதுமையும்..!

தினத்தந்தி
|
25 Oct 2022 2:05 PM IST

மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் புடவைகளையும், புடவை கட்டும் ஸ்டைல்களையும் ஆராய்ந்திருப்பதுடன், தமிழ் பாரம்பரிய புடவை கலாசாரத்தை நவீனமாக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளார் புடவை காதலர் நிவேதிதா.

''தமிழ் பெண்களின் 'புடவை டிரெண்ட்' ரொம்பவே மாறிவிட்டது. முன்பைவிட, இப்போது புடவை கட்டுவதில் பல புதுமைகளை எதிர்பார்க்கிறார்கள். தங்களை பிரபலங்களை போல உணரும்படியான புடவைகளையும், புதுமையான புடவை கட்டும் ஸ்டைல்களையும் எதிர்பார்க்கிறார்கள்'' என்று அதிரடியாக பேச ஆரம்பிக்கிறார், நிவேதிதா கமலேஷ்.

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவரான நிவேதிதா, புடவை காதலர். புடவையின் பாரம்பரியத்தையும், அதன் வரலாற்றையும் கற்று உணர்ந்தவர். அதுமட்டுமல்ல... மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் புடவைகளையும், புடவை கட்டும் ஸ்டைல்களையும் ஆராய்ந்திருப்பதுடன், தமிழ் பாரம்பரிய புடவை கலாசாரத்தை நவீனமாக்கும் முயற்சிகளில் இறங்கி உள்ளார். இவரது கைவண்ணத்தில், பிரபல நட்சத்திரங்களும், புதுமையான புடவை அலங்காரத்தில் ஜொலித்திருக்கிறார்கள்.

எல்லா பெண்களும் விரும்பக்கூடிய வகையில் புடவை அணிதலை எளிமையாகவும், அழகாகவும் மாற்றுவதையே தன்னுடைய லட்சியமாக கொண்டிருக்கிறார். இவர் புடவை தொடர்பான பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

* உங்களுக்கு புடவை மீதான காதல் எப்படி ஏற்பட்டது?

பி.ஏ.கிரிமினாலஜி படித்திருந்தாலும், எனக்கு அழகு கலை மீது ஆர்வம் அதிகம். மேக்கப் கலை, நெயில் ஆர்ட், புளோரல் ஆர்ட்... இப்படி பெண்களை அழகாக்கும் கலைகளை அதிகம் ரசிப்பேன். அப்படி அறிமுகமானதுதான், 'சாரி டிரேப்பிங்' எனப்படும் புடவை அணிவித்தல் கலை. ஆனால் மற்றவைகளை விட, இது ஸ்பெஷலானதாக தெரிந்ததால், புடவை காதலியாக மாறினேன். புடவைகள் பற்றி நிறைய தேடினேன். பல ஸ்டைல்களில் கட்டி பழகினேன். புடவை உலகில் அறிமுகமான புதுப்புது டிரெண்ட்களை வியந்து ரசித்தேன்.

* புடவையின் ஸ்பெஷல் என்ன?

பெண்களின் அழகிற்கு, கூடுதல் அழகு சேர்க்கும் கலைக்குதான், 'புடவை' என்று பெயர். இதன் ஸ்பெஷல் என்ன தெரியுமா...? புடவையை முறையாக தேர்ந்தெடுத்து, சரியாக அணிந்தால், பருமனான பெண்களை கூட, ஒல்லியாக காட்டமுடியும். அதேபோல, ஒல்லியான பெண்களையும் கொஞ்சம் பருமனாக காட்டமுடியும். இந்த மாயாஜாலம், புடவைகளில் மட்டுமே சாத்தியம்.

* நம் ஊரில், என்னென்ன புடவை வகைகள் இருக்கிறது?

பட்டு, கைத்தறி, பனாரஸ், காட்டன், டிசைனர் எம்ப்ராய்டரி, டிசைனர் பார்டிவேர், டிசைனர் திருமண புடவைகள், டிசைனர் லெஹங்கா, ஹாப் டிஷ்யு, ப்ரேசோ, நெட்டட், ஜெக்கார்ட் வேலைப்பாடு, ஷிபான், ஜார்ஜ்ஜெட்… இப்படி பல வகை துணிகளில் புடவைகள் கிடைக்கின்றன. பிரி ஸ்டைல், டிரெடிஷ்னல், தென் இந்திய முறை, வட இந்திய முறை, மடிசார், கேன் கேன், குஜராத்தி பல்லு, சிங்கிள் பிலீட்ஸ்.. இப்படி புடவைகளுக்கு ஏற்ப உடுத்தும் முறைகள் வேறுபடும்.

* கட்டுவதற்கு சுலபமானது எது? கடினமானது எது?

இதில் ஜார்ஜ்ஜெட், ஷிபான் மற்றும் சாப்ட் சில்க் ஆகியவை கட்டுவதற்கு சுலபமானவை. அயன் செய்யவேண்டிய தேவை இருக்காது. அதேபோல மடித்து, மோல்ட் செய்வதும் எளிதானது. ஆனால் கனமான பட்டு புடவைகள் குறிப்பாக காஞ்சி பட்டு, கனமான கல் வேலைப்பாடுகள் கொண்ட புடவைகளை கட்டுவது கொஞ்சம் சிரமமானது. ஏனெனில் இதை நினைத்தபடி மடிப்பதும், 'பின்' குத்துவதும், கையாள்வதும் கடினமாக இருக்கும்.

* எவ்வளவு நேரத்தில் புடவை கட்டலாம்?

ஒருசில கொண்டாட்டங்களில் மட்டும் புடவை கட்டுபவர்கள், அதிகபட்சம் அரை மணி நேரம் எடுத்து கொள்வார்கள். மாதத்திற்கு ஓரிரு முறை உடுத்துபவர்கள், 15 முதல் 20 நிமிடங்களில் புடவையை கட்டிவிடுவார்கள். தினந்தோறும் புடவை கட்டுபவர்களுக்கு, 10 நிமிடமே போதுமானதாக இருக்கும். ஆனால் புடவை எக்ஸ்பெர்ட்ஸ், 2 நிமிடத்திலேயே கட்டிமுடித்துவிடுவார்கள்.

* பெண்கள் புடவை விஷயத்தில், செய்யும் தவறுகள் என்ன?

புடவைக்கு ஓரம் அடிக்காமல் அணிவது, உள் பாவாடையை கொலுசு இருக்கும் கணுக்காலில் நிற்கும்படியாக அணியாமல் ஒழுங்கற்று மேல்-கீழாக இருக்கும்படி அணிவது, உடலுக்கு சம்பந்தமில்லாத முறையில் மடிப்பு (பிலீட்ஸ்) எடுப்பது, புடவையை அயன் செய்யாமல் அணிவது, பிலீட்ஸ்-ஐ இடுப்பில் சொருகி அதை சரிசெய்யாமல் விடுவது, புடவை உடலில் நிற்பதற்காக நிறைய இடங்களில் பின் குத்துவது... இப்படி நிறைய தவறுகளை செய்கிறார்கள்.

* புடவையை சிறப்பான முறையில் அணிவது எப்படி?

'பிலீட்ஸ்' எனப்படும் முந்தானை மடிப்புகளை முன்கூட்டியே தயாரித்துவிட வேண்டும். புடவையின் ரகத்திற்கு ஏற்ப உள்பாவாடை வகைகளை தேர்வு செய்வது சிறப்பு. குறிப்பாக, பட்டு புடவைகளுக்கு லேசான ஷேப்வேர் உள்ளாடைகள் சிறப்பாக இருக்கும். அதேபோல லேசான புடவைகளுக்கு காட்டன் பாவாடைகள் கச்சிதமாக இருக்கும். அதிக விலை கொடுத்து வாங்கி அணியும் புடவைக்கு ஏற்ப உள்ளாடையும் தரமானதாக இருக்க வேண்டும்.

புடவைக்கு கட்டாயம் பால்ஸ் தைக்கவேண்டும். அப்போதுதான் பார்டர் மடங்கும் பிரச்சினை இருக்காது. எப்போதும் புடவையின் நிறம் மற்றும் மெட்டீரியலுக்குப் பொருத்தமான உள்பாவாடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புடவையை கணுக்கால் வரை கட்டாமல், இரண்டு பாதங்களின் சுண்டு விரல்களும் மறையும்படியாகக் கட்ட வேண்டும். ஹீல்ஸ் அணியும் பெண்கள், புடவை கட்டிவிட்டு ஹீல்ஸ் அணியும்போது உயரம் போதாமல் போய்விடும் என்பதால், ஹீல்ஸ் அணிந்தபடியே புடவை கட்டி உயரத்தைச் சரிசெய்துகொள்ளலாம்.

பிலீட்ஸை பிளவுஸுடன் 'பின்' செய்யும்போது, கழுத்தில் நெருடலாக இருப்பதுபோல தோன்றினால், பிலீட்ஸை அடுக்கிய பின், முதல் மடிப்பை மட்டும் சற்றே தளர்த்தி, சற்று கீழே இறக்கி 'பின்' செய்யலாம். டிரான்ஸ்பரன்ட் மற்றும் நெட்டட் புடவை கட்டும்போது, பிலீட்ஸை இடுப்புப் பகுதியில் பிளவுஸோடு 'பின்' செய்ய வேண்டும். பிலீட்ஸ் ஒன்றை ஒன்று ஓவர்லாப் செய்யாமல் இருக்க, 2, 3-வது பிலீட்ஸை பிளவுஸோடு உள்பக்கமாக பின் செய்ய வேண்டும். இதனால், அடிக்கடி பிலீட்ஸை அட்ஜஸ்ட் செய்யத் தேவை இருக்காது.

* புடவை கலாசாரம் தமிழ்நாட்டில் எப்படி நவீனமாகி இருக்கிறது?

உறவினர்களை கொண்டு புடவை கட்டிய காலம் மலையேறி, இன்று புடவை கட்டிவிட 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்களை அழைக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டது. மேலும் சமூக வலைத்தளங்களும், பெண்களின் புடவை மோகத்தை சூடேற்றிவிட்டுள்ளன. மேக்கப், புடவை அலங்காரம் சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் குவிந்துகிடப்பதால், அழகு கலையில் புதுமைகளை எதிர்பார்க்கிறார்கள்.

* சிறப்பாக புடவை கட்ட தெரிந்தவர்கள், 'சாரி டிரேப்பிங்' எக்ஸ்பெர்ட்டாக ஆகமுடியுமா?

நிச்சயமாக. இதற்கு எந்தவிதமான தியரி படிப்புகளும் அவசியம் இல்லை. அனுபவமும், பயிற்சியும்தான் அவசியம். அது பெண்களுக்கு இயற்கையாக இருந்தால், சிறப்பாக இருக்கும். கொஞ்சம் தடுமாறுபவர்கள், 'சாரி டிரேப்பிங்' பயிற்சி பெற்று, புடவை கட்டிவிடும் வேலை செய்யலாம். சொன்னால் நம்பமாட்டீர்கள்...! இன்று நிறைய கல்லூரி பெண்களும், குடும்ப தலைவிகளும் பகுதி நேரமாக சாரி டிரேப்பிங் வேலை செய்கிறார்கள். ஏன்..? ஆண்களும், சாரி டிரேப்பிங் பயிற்சி களை முடித்துவிட்டு, நிறைய பெண்களுக்கு புடவை கட்டிவிடுகிறார்கள்.

புடவை முந்தானை விஷயத்தில் சில டிப்ஸ் கொடுங்கள்?

முந்தானையை இரண்டு விதமாகப் 'பின்' செய்யலாம். ஒன்று, பார்மல் முறை. இதில் பிலீட்ஸை ஒன்றன் பின் ஒன்றாக மடித்து, தோள்பட்டைக்குச் சற்று கீழே `பின்' செய்ய வேண்டும். இரண்டாவது, கேஷுவல் முறை. இதில் பிலீட்ஸை ஒன்றன் பின் ஒன்றாக மடித்து, அதில் இரண்டாவது மடிப்பை வெளியே எடுத்துவிட்டு, மீதியை அப்படியே 'பின்' செய்ய வேண்டும். இது மரியாதையான தோற்றம் தரும்.

2 நிமிடத்திலேயே பட்டுப்புடவை கட்டிவிடலாமா?

ஆம்...! இப்போது எல்லாமே நவீனம்தான். 'பாக்ஸ் போல்டிங்' முறையில் ரெடிமேட் உடைகளை போல புடவை தயாராகிவிடும். முந்தானை எடுப்பதில் தொடங்கி எல்லா வேலைகளும் முன்கூட்டியே முடிக்கப்பட்டு, அயன் செய்து தயாராக வைத்துவிடுவார்கள். அதை ரெடிமேட் உடைபோல அப்படியே எடுத்து உடுத்தவேண்டியதுதான்.

மேலும் செய்திகள்