< Back
சிறப்புக் கட்டுரைகள்
ரஷிய தம்பதிகளின் விவசாய ஆசை
சிறப்புக் கட்டுரைகள்

ரஷிய தம்பதிகளின் விவசாய ஆசை

தினத்தந்தி
|
18 Dec 2022 6:00 PM IST

ரஷியாவின் செயின் பீட்டர்ஸ்பர்கை சேர்ந்த இந்த தம்பதி, விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், விவசாயம் மீது ஆர்வம்.

ரஷியாவைச் சேர்ந்த தம்பதி, லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு விவசாயம் செய்வது சற்று வித்தியாசமானதுதான். ஆனால், இது நடப்பது ரஷியாவில் அல்ல, நமது அண்டை மாநிலமான கேரளாவில். கேரள மாநிலம் கண்ணூர் நகரத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் உள்ளது அடிகாதலையி கிராமம். இங்கு வந்துள்ள ரஷியாவைச் சேர்ந்த 24 வயது போக்தன் மற்றும் அவரது மனைவி அலெக்சாண்ட்ரா ஆகியோருக்கு விவசாயம் மீது ஆர்வம்.

இந்தப் பணியில் இருவரும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். ரஷியாவின் செயின் பீட்டர்ஸ்பர்கை சேர்ந்த இந்த தம்பதி, விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். இது குறித்து போக்தன், "நீங்கள் வீட்டுக்குள் அமர்ந்து புத்தகங்களைப் படிக்கலாம். உலகம் முழுவதும் பயணித்து மக்களைப் பற்றியும் அவர்களது வாழ்வாதாரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இங்கு நான் புது அனுபவத்தைப் பெற்றுள்ளேன். இங்கு என் மனைவியுடன் சேர்ந்து காய்கறிகளை பயிரிட்டு வருகிறேன். ஆர்கானிக் பார்ம்ஸ் இந்தியா இணையதளம் மூலம் கேரளாவில் ஹரிஸின் பண்ணை இருப்பதை அறிந்தோம். தன் மூதாதையர் வீட்டிலேயே நாங்கள் தங்குவதற்கு அவர் ஏற்பாடு செய்தார்.

ஆடம்பரத்தை எதிர்பார்க்கக் கூடாது என்று ஹரிஸ் கேட்டுக் கொண்டார். இன்றைக்குப் பலரும் ஆச்சரியப்படும் வகையில் முழு நேர விவசாயிகளாக மாறியிருக்கிறோம். நாங்கள் இங்கு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கேரளாவில் உள்ள விவசாயம் எங்களுக்குப் புதிது. இயற்கையின் மீது எனக்கு மிகவும் ஆர்வம். என் மனைவிக்கும் அதேபோல்தான். இருவரும் ஒரே எண்ணம் கொண்டவர்கள். இயற்கைதான் எங்களை இணைத்தது.

திருவனந்தபுரத்தில் நாங்கள் தங்கியிருந்தபோது ராஜம் முத்தச்சி என்பவர் எங்கள் மீது அன்பாக இருந்தார். இந்தப் பண்ணையில் நாங்கள் இன்னும் இரண்டு மாதம் தங்குவோம். ஹரிஸ் எங்கள் தந்தை போல் எங்களைப் பார்த்துக் கொள்கிறார். அவருக்கும் எங்கள் நன்றி'' என்றார்.

மேலும் செய்திகள்